நியாயமற்ற தண்டனை

ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார்.
 
இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் "தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!'' என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார்.

காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். "என்ன விஷயம் ஐயா?'' என்று நடுங்கும் குரலில் கேட்க, "தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!'' என்றார் அதிகாரி.

இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். "கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?'' என்றாள். "எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது'' என்ற அதிகாரி சற்று யோசித்தபின், "தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்'' என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர்.

உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் "கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்'' என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார்.


சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் "ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே'' என்று அலற, "நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது'' என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார்.
மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான்.


அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், "மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். 

அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்'' என்றான்.
உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது.



"இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?'' என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. "பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி'' என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter