செல்வம் நம்மோடு இருக்கட்டும்

அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் ‘செல்வம்’ என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர்.

செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்:
“நாளை அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, அங்கே நின்று கொண்டு, ‘செல்வம் தலைவாசலில் இருக்கிறேன்; சக்ரவர்த்தி கட்டளையிட்டால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில், நான் போகிறேன்,’ என்று சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தைரியமூட்டி அனுப்பி வைத்தார் பீர்பால்.

மறுநாள் அதிகாலையில், செல்வம் அரண்மனைக்குப் போய், ‘செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில் போகிறேன்’ என்று கூறிக் கொண்டிருந்தான்.

அரசருக்கு இந்தச் செய்தி எட்டியது.
தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

அவன், அரசரை மிகவும் பணிவோடு வணங்கிவிட்டு, மீண்டும் அதே சொற்களைக் கூறினான்.

அரசர் புன்னகை புரிந்தவாறு, ‘செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!’ என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியப்பட்டனார்.

இது பீர்பாலின் மதியூகத்தால் நிகழ்ந்தது என்பதை அக்பரும் உணர்ந்து மகிழ்ந்தார்.

0 comments:

Post a Comment

Flag Counter