தர்மம் தலை காக்கும்

 
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலை வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி, அவன் அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, "விக்கிரமா!

நீ இப்படி கடினமாக உழைப்பதின் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஏதோ உதவி செய்வதாக எண்ணிக் கொண்டு இப்படி இயலாத ஒரு காரியத்தை நீ செய்ய வேண்டும் என்பது உன் தலையெழுத்து போல் இருக்கிறது. இப்படித்தான் பிறருக்கு உதவி செய்வதாக நினைத்துத் தன்னையும், தன்னுடைய மகனையும் பெரும் ஆபத்தில் ஆழ்த்திய பரமேஸ்வரன் கதை நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள்" என்றது.

 ஜகந்நாதபுரத்தில் பரமேஸ்வரன் என்ற பரோபகாரி இருந்தான். பிறருக்குப் பொருள் உதவி செய்தே தன் சொத்துக்களை எல்லாம் அழித்து விட்டான். சாகும் தருணத்தில் தன் பிள்ளையைக் கூப்பிட்டு "மகனே நான் உனக்கு துரோகம் செய்து விட்டேன். எனக்கு இப்போது இருக்கும் அற்பசொத்தை விட கடனே அதிகம். ஆனாலும் நீ பிறருக்கு உதவி செய்வதை நிறுத்தக் கூடாது. உன்னுடைய தாயை ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள். உனக்கு ஏதாவது உதவியோ, அறிவுரையோ தேவையெனில், நமது கிராமத்துப் பூசாரியான ராமானந்தரைக் கேள். பரோபகாரத்தின் மகிமையை எனக்கு எடுத்துரைத்த மகான் அவர்" என்று சொல்லி உயிர் நீத்தான்.

பரமேஸ்வரன் இறந்ததும், அவன் மகன் அர்ஜுனன்  எதிர்பாராத கஷ்டங்களுக்கு உள்ளானான். கொஞ்ச நஞ்சம் இருந்த சொத்துக்களை கடன்காரர்கள் எடுத்துக் கொண்டு போனார்கள்.
தன் தந்தை சொன்னது ஞாபகம் வர தனது கஷ்டங்களில்இருந்து விடுபட ஆலோசனை கேட்க அவன் பூசாரி ராமானந்தரிடம் சென்றான். அவனை அன்புடன் வரவேற்ற பூசாரி, "உன்தந்தை செய்த தான தருமங்களின் புண்ணியம் உன்னைக் காப்பாற்றட்டும்" என்று வாழ்த்து கூறினார்.

"தருமமாவது புண்ணியமாவது! என் தந்தை இவற்றால் என்ன நன்மை அடைந்தார் என்று தெரியவில்லை" என்றான் அர்ஜுனன் சலிப்புடன்.
"அப்படிச் சொல்லாதே தம்பி. உன்னுடைய தந்தையைப் பற்றி உனக்குத் தெரியாது. சிறுவயதில்இருந்தே ஒரு கொடிய நோயினால் உன் தந்தை அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். உடம்பில் முள் குத்தினால் எப்படி வலிக்குமோ, அப்படி வலித்துக் கொண்டேயிருக்கும். அந்த நோய் கண்டவர்கள் நாளுக்கு நாள் மெலிந்து விரைவிலேயே உயிர் துறப்பது வழக்கம். உன் தந்தை செய்த தான தருமங்கள் தான் அவரை இத்தனை ஆண்டுகள் உயிர் வாழச் செய்துள்ளது," என்றார். "இதைஎல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை," என்றான் அர்ஜுனன். "தம்பி, நான் சொல்வதை நம்பவில்லையானால், நீ நமது மருத்துவர் ரகுநாதனைச் சென்று பார். அவர் உண்மையை உனக்குச் சொல்வார்," என்றார்.

 உடன் அர்ஜூனன் மருத்துவரை நாடிச் சென்று தான் வந்த காரியத்தை சொன்னான். மருத்துவர், "தம்பி, உன் தந்தையின் நோய்க்கு மருத்துவத்துறையில் மருந்தே கிடையாது. அவர் செய்த தான தருமங்கள் தான் அவரை நீண்ட நாள் நலமாக வாழ வைத்தது" என்றார்.
அப்போது அர்ஜூனனுக்கு ராமானந்தரின் வார்த்தைகளில் நம்பிக்கை உண்டாகத் தொடங்கியது. உடனே பூசாரியிடம் சென்று, "நீங்கள் சொன்னதை இப்போது நம்புகிறேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்" என்றான்.

ராமானந்தர் அதற்கு "தம்பி இந்த விதைகளைப் பெற்றுக் கொள். இவற்றை நட்டால் ஒரே நாளில் செடி முளைத்து ஒரே வாரத்தில் மரமாகி விடும். மனிதர்களுக்கு நிழலும் பறவைகளுக்கு இருப்பிடமும் கொடுக்கும். இவற்றை எங்கு நடுவது என்பதை நீ தீர்மானித்துக் கொள். இதுதான் பரோபகாரம் என்பது. இதனால் உனக்கு நன்மை உண்டாகும்," என்றார். அந்த விதைகளை எடுத்துச் சென்ற அர்ஜுனன் தன்னுடைய கிராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்குச் செல்லும் சாலையில் மரங்களே இல்லாத ஓரிடத்தில் ஒரு விதையை நடுவதற்காகக் குழி தோண்டத் தொடங்கினான்.

முதல் குழியைத் தோண்டும் போதே அவனுக்கு பூமிக்குள்ளிருந்து ஒரு தங்க நாணயம் கிடைத்தது. அந்த நாணயத்தில் ஒரு பக்கம் விஷ்ணுவின் உருவமும் மற்றொரு பக்கம் லட்சுமியின் உருவமும் பொறிக்கப்பட்டு இருந்தன. "ஆகா, கைமேல் பலன் கிடைத்து விட்டது" என்று மகிழ்ச்சியுடன் அடுத்த கிராமத்திற்குச் சென்றான்.

அங்குள்ள ஒரு தெருவில் சென்று கொண்டிருக்கையில் ஒரு வீட்டுக்காரன் வெளியே வந்து அர்ஜுனனை திடீரெனப்  பிடித்துக் கொண்டான். "யார் நீ? திருடன் போல் தோன்றுகிறாய். உன்னை சோதனை செய்ய வேண்டும்," என்று சொல்லி அவனைப் பிடித்து சோதனையிட்டான். அர்ஜுனனிடம் சில விதைகளும் ஒரு தங்கக் காசும் இருந்ததைப் பார்த்து விட்டான்.

 தங்கக் காசைப் பார்த்தவுடன் அவன் ‘ஆகா! இது எனது பூஜைஅறையில் வைத்திருந்த தங்கக் காசு. ஆறு மாதம் முன்பு திருடுப் போய் விட்டது. நீ தான் அதைத் திருடியவன்" என்று அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அக்கம் பக்கத்தினரும் சூழ்ந்து கொண்டு அவனைத் திருடன் என்று ஏசினர். அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டவாறு துயரம் ததும்பிய குரலில் அர்ஜுனன் "ஐயா, நான் பரோபகாரியான பரமேஸ்வரனின் பிள்ளை.
 
என்னுடைய ஊர் ஜகந்நாதபுரம். என்னைத் திருடன் என்று சொல்லாதீர்கள்" என்று தன் முழுக்கதையையும், பொற்காசு தனக்குக் கிடைத்த விவரத்தையும் விளக்கிக் கூறியதைக் கேட்டதும்  அவர்களுடைய மனம் இளகியது. தவிர பரமேஸ்வரனின் தயாள குணத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த அவர்கள் தாங்கள் தான் அர்ஜுனனைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என வருந்தினர். அது மட்டும்இல்லாமல் அவனது தந்தையின் நோயைப் பற்றியும் அவரது தானதருமங்கள் அவரைக் காத்ததையும் அறிந்து கொண்ட பிறகு அவனை உடனே அந்த ஊர் ஜமீன்தாரைச் சென்று சந்திக்க அறிவுரை வழங்கினர்.

ஜமீன்தாருக்கு ராதிகா என்ற பதினாறு வயதில் ஒரு பெண் இருப்பதாகவும், அர்ஜுனனின் தந்தைக்குஇருந்ததைப் போலவே அவளுக்கும் நோய் இருப்பதாகவும் அவள் இன்னும் ஒரு மாதம்தான் உயிரோடுஇருப்பாள் என்றும் கூறினார்கள்.

ஒரு மருத்துவர் மட்டும் அவள் பிழைப்பதற்கு ஒரேயொரு வழிஇருப்பதாகக் கூறியுள்ளாராம்.

ஓர் அபூர்வ மரம் உள்ளதாம். அதன் விதையை நட்டு ஒரு நாளில் அது செடியாகவும் ஒரே வாரத்தில் பெரிய மரமாகவும் ஆகும் சக்தி அதற்கு உண்டு. அந்த மரங்கள் அடர்ந்த தோட்டத்தில் ஜமீன்தார் மகள் ராதிகா ஓய்வு எடுத்துக் கொண்டால் ஒரே நாளில் அந்த மரங்களின் காற்று பட்டு குணமாகி விடும் என்றும் அந்த மருத்துவர் கூறியுள்ளார்.

 ஆனால் நூறு மரங்கள் தேவையாம். இந்த விவரங்களை எடுத்துச் சொன்னவர்கள் "அர்ஜுனா! அந்த அபூர்வ விதைகள் உன்னிடம் உள்ளன. நீ இப்போதே அவர் வீட்டுக்குச் செல்," என்றனர்.
அதன்படியே அர்ஜுனன் ஜமீன்தாரை சென்று சந்தித்தான். தன் மகளை குணமாக்கக் கூடியவன் அவன் என்று தெரிந்ததும் ஜமீன்தார் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார். உடனே தனது பெரிய தோட்டத்தைக் காட்டி அங்கு விதைகளை நடச் சொன்னார். அர்ஜுனன் உற்சாகமாக நடத் தொடங்கினான். ஆனால் என்ன துரதிருஷ்டம்! நூறு விதைகளில் ஒன்று குறைந்திருந்தது. நூற்றில் ஒரு மரம் குறைந்தாலும் பலனில்லை என மருத்துவர் கூறிவிட்டார். அர்ஜுனன் உடனே பூசாரிக்கு இன்னும் விதைகள் இருந்தால் அனுப்பச் சொல்லித் தகவல் அனுப்பினான். ஆனால் அவரிடம் வேறு இல்லை. என்ன செய்வது?

இதற்குள் ஒரு யோகி ஜமீன்தாரின் கஷ்டத்தைத் தீர்க்க முன் வந்தார். ராதிகாவின் நோயை யார் ஒருவர் சுயநல எண்ணமேயின்றி ஏற்றுக் கொள்கிறார்களோ அவரை இந்த நோய் பிடிக்கும். ராதிகா குணமாகி விடுவாள் என்றார். இதைக் கேட்டதும் முதலில் ஜமீன்தாரரும் அவர் மனைவியும் முன் வந்தனர். ஆனால் அவர்களது மனதை சோதித்த யோகி "மன்னிக்க வேண்டும்.  நீங்கள் முழு மனதுடன் இதைச் செய்யவில்லை. ஆகையால் உங்களுக்கு மாற்ற முடியாது" என்று சொல்லிவிட்டார். அடுத்து அர்ஜுனன் தானே முன் வந்தான். அவனை சோதித்த யோகி, திருப்தி அடைந்து ராதிகாவின் நோயை அர்ஜுனனுக்கு மாற்றி விட்டார். உடனே ராதிகா பூரண குணமடைய அர்ஜுனனை அந்த விசித்திர நோய் தாக்கியது.

ஒரே வாரத்தில் அர்ஜுனன் நட்ட விதைகள் மரங்களாயின. அந்த மரங்களின் நிழலில் தங்கிய ஒரே நாளில் அனைவரும் வியப்படையும் படி அர்ஜுனன் குணம் அடைந்து விட்டான். மனம் மகிழ்ந்த ஜமீன் தாரும் தன் மகளை அர்ஜுனனுக்கு மணமுடித்து வைத்தார்.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "விக்கிரமா! பரோபகாரம்  செய்வதினால் நன்மைகளை விட, கஷ்டங்களே அதிகம் உண்டாகிறது பார்த்தாயா? பரமேஸ்வரன் தானதர்மங்கள் செய்ததினால் நோயில்இருந்து விடுபட்டாலும் தன் சொத்துக்களை இழந்து ஏழையானான். அவன் மகன் அர்ஜுனன் ஜமீன்தார் மகளுக்கு உதவி செய்யப் போய் தன் உயிரையை இழக்கக் கூடிய ஆபத்தில் ஆழ்ந்தான்.

ஆகையால் பிறருக்கு உதவி செய்வதால் என்ன நன்மை?  நூறு விதைகளில் ஒன்று குறைந்தும் அர்ஜுனன் எவ்வாறு நோய் நீங்கப் பெற்றான்? ராதிகாவின் பெற்றோர்களுக்கு அவளுடைய நோயை யோகி ஏன் மாற்றவில்லை? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்ததும், நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது. உடனே விக்கிரமன் "பரோபகாரிக்கு  தொடக்கத்தில் கஷ்டங்கள் நேர்ந்தாலும் இறுதியில் எல்லாம் நன்மையாகவே முடியும். பரமேஸ்வரன் சொத்துக்களை இழந்தாலும் கொடிய நோய் நீங்கப் பெற்று நலமாக இருந்தான்.

அதே போல் அர்ஜுனனும் தொடக்கத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் இறுதியில் ஜமீன்தார் மகளை மணந்து நலமாகவே இருந்தான். ஆகவே பரோபகாரம் செய்வதால் கஷ்டங்கள் மட்டும் உண்டாகிறது என்பது உண்மைஇல்லை. தவிர அர்ஜுனனின் பரோபகார உள்ளத்திற்காக நூறு விதைகளில் ஒன்று குறைந்தாலும் அதனால் பாதகம் எதுவும் ஏற்படவில்லை. ராதிகாவின் நோயைத் தான் ஏற்றுக் கொள்ள அவன் பெற்றோர்கள் முன் வந்தது பரோபகாரத்துக்காக இல்லை சுயநலத்துக்காக ஆகவே தான் யோகி அவர்களின் செயலை ஏற்கவில்லை" என்றான்.

விக்கிரமனின் இந்த சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டது.

  

வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter