எது சிறந்த அழகு?

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மேல் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் கீழே இறங்கி அவன் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, "மன்னனே நீ அறிவாளி என்பதில் சந்தேகம்இல்லை. உலகில் நல்லது எது கெட்டது எது என்று நன்றாக அறிந்தவன் நீ. ஆனால் அப்படிஇருந்தும் இந்த இரவு நேரத்தில் பயங்கர மயானத்தில் அயராமல் ஏன் சுற்றித்திரிகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. மனிதன் எவ்வளவு அறிவாளியாக இருந்தும் சில சந்தர்ப்பங்களில் சிந்திக்கும் திறனை இழந்து உன்னைப் போல் இவ்வாறு நடப்பார்கள் போலும். உன்னைப் போலவே இருந்த ஜயந்தன் என்ற ராஜகுமாரனின் கதையைச் சொல்கிறேன், கேள்" என்று கதை சொல்ல ஆரம்பித்தது.

 முன்னொரு காலத்தில் ரகுவர்மன் என்ற மன்னன் காஞ்சனபுரியைத் தலைநகரமாகக் கொண்ட மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தான். இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் அவனுக்கு அழகே உருவான ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஜயந்தன் என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டு கண்ணுங் கருத்துமாய் வளர்த்து வந்தான்.
ஜயந்தன் எவ்வளவு அழகாக இருந்தானோ, அவ்வளவு நல்லவனாகவும் தார்மீக சிந்தனைகள் உள்ளவனாகவும் இருந்தான். குருகுலத்தில் பயின்று திரும்பிய ஜயந்தனுக்கு முடிசூட்டி அவனை அரியணையில் அமர்த்த அவனது தந்தை விருப்பம்கொண்டார்.

ஆனால் ஜயந்தனுக்கு உடனே முடிசூட்டிக் கொள்ள விருப்பமில்லை. தன் தந்தையின் அதிகாரத்துக்கு உட்பட்ட நாடு நகரங்களை எல்லாம் சுற்றிப்பார்த்து குடிமக்களோடு நேரிலே பழகி, அதன்பிறகு முடிசூட்டிக் கொள் வதாக இருந்தான். அவன் விருப்பத்திற்கு இணங்கிய அவன் தந்தை அவனை அவ்வாறு செய்ய அனுமதித்தார். தனக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு ஜயந்தன் ஒரு குதிரையில் ஏறிக் கிளம்பினான். ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த மலைத்தொடரில் காஞ்சனகிரி என்ற நேடிதுயர்ந்த ஒரு மலைச்சிகரம் இருந்தது. அந்த சிகரத்தின் உச்சியில் ஒரு பழம் புகழ் பெற்ற அம்மன் கோயில் இருந்தது. அந்த அம்மனுக்கு காத்தியாயினி என்று பெயர். அந்த அம்மனை தரிசிக்க ஜயந்தன் மிகவும் விருப்பம் கொண்டான்.

ஆகவே காஞ்சனகிரியை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினான்.
மலைச்சிகரத்தை அடைந்த ஜயந்தன் அங்கிருந்த எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு பரவசம் அடைந்தான். அம்மன் கோயிலுக்கு எதிரில் இருந்த  தடாகத்தில் நீராடிய ஜயந்தன் அம்மனை தரிசனம் செய்தான்.

 அப்போது அங்கு கோயில் பிரகாரத்திலிருந்து ஓர் இனிமையான வீணைஒலி கேட்டது. எங்கிருந்து வருகிறது இந்த ஒலி என்று தேடிச் சென்ற ஜயந்தனின் கண்களில் அழகே உருவான ஓர் அப்சரஸ் தென்பட்டாள். கோயில் பிரகாரத்தில் வீணையை மீட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த எழில் ஓவியம் போன்ற பெண்மணி ஜயந்தனைக் கண்டு வீணை மீட்டுவதை நிறுத்திவிட்டு வியப்புடன் எழுந்தாள்.

"நான் ஒரு கந்தர்வப் பெண். என் பெயர் சித்திரலேகா. தாங்கள் யார் எனத் தெரிந்து கொள்ளலாமா?" என்று தன் இனிய குரலில் கேட்டதும், ஜயந்தன் தன்னைப்பற்றிய விவரங்களை அவளுக்கு எடுத்துரைத்தான். அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு விட்டு சித்திரலேகா அவனை நோக்கி, "எந்த கந்தர்வனையும் எனக்குப் பிடிக்காததால் நான் இதுவரை மணம் புரியவில்லை. ஆனால் இன்று உங்கள் அழகைக் கண்டு என் மனதை பறி கொடுத்து விட்டேன். என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா?" என்று ஆசையுடன் கேட்டாள். அதைக் கேட்ட ஜயந்தன் புன்முறுவலுடன், "சித்திரலேகா, காஞ்சனாபுரியின் இளவரசனான எனக்கு என் நாடும் நாட்டு மக்களும் தான் முக்கியம். என் நாட்டையும் மக்களையும் பற்றித் தெரிந்து கொள்வதற்காக பல ஊர்களுக்கு நான் பயணம் சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது திருமணத்தில் நாட்டம் இல்லை" என்று மறுத்து விட்டான்.

ஆனால் சித்திரலேகா அவனை விடவில்லை. "நீங்கள் பயணம் செய்யும் இடங்களுக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். அதுவாவது செய்யலாம் இல்லையா?" என்று கெஞ்சிக் கேட்கவும் அதை மறுக்க மனம் இல்லாமல் ஜயந்தன் அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

 செல்லும் இடங்களில் எல்லாம் நாட்டு மக்களின் குறைகளையும் கஷ்டங்களையும் பற்றி ஜயந்தன் விசாரிப்பதும் அவர்களுக்கு உதவி செய்வதையும் பார்த்து, சித்திரலேகா மனம் நேகிழ்ந்தாள். ஜயந்தன் மன்மதனை ஒத்த அழகன் மட்டுமல்ல, குணத்திலும் அவன் தங்கக் கம்பி என்று அறிந்து கொண்டாள். ஒருநாள் காட்டு வழியே அவர்கள் இருவரும் பயணம் சென்று கொண்டு இருக்கும் போது, ஓர் அவலட்சணமான இளம் பெண் சோகத்துடன் அமர்ந்திருக்கக் கண்டனர். ஜயந்தன் அவளைப் பற்றி விசாரித்ததும் "நான் பிறவியில்இருந்தே இவ்வாறு அழகற்றவளாக இருக்கிறேன்.

 ஆனால் என் புறத் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், என்னை ரவி என்ற இளைஞன் காதலிக்கிறான். என்னைத் திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறான். ஆனால் அவன் தாய்க்கு என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள விருப்பமில்லை. ரவி என்னை மணம் புரிந்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவள் பயமுறுத்துகிறாள். ஆகவே வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து என் உயிரை மாய்த்துக் கொள்ள காட்டுக்கு வந்தேன். ஆனால் தற்கொலை செய்து கொள்ளவும் தைரியம் இல்லை எனக்கு" என்று தன் சோகக் கதையை விவரித்தாள். அவள் கதையைக் கேட்டு அனுதாபமுற்ற ஜயந்தன் சித்திரலேகாவை நோக்கி, "உன்னால் இவளை அழகியாக மாற்ற முடியுமா? நீ கந்தர்வப் பெண் அல்லவா! உன்னிடம் அந்த சக்தி இருக்குமே!" என்று வினவ.

சித்திரலேகா சரியென்று தலை அசைத்து பெண்ணின் தலையை மூன்று முறை தொட்டாள். உடனே அந்தப் பெண் ஒரு அழகான பெண்ணாக மாறி விட்டாள். ஆனால் சித்திரலேகா அவலட்சணமாக மாறி விட்டாள். அவளைப் பார்த்த ஜயந்தன் திடுக்கிட்டுப் போனான். சித்திரலேகா தனது சக்தியினால் தனது அழகை தியாகம் செய்து, வழியில் கண்ட பெண்ணை அழகாக மாற்றி விட்டாள் என்று புரிந்து கொண்டான். "நீ ஏன் இப்படியொரு தியாகத்தை செய்தாய்?" என்று ஆச்சரியத்துடன் ஜயந்தன் அவளைக் கேட்டான். அதற்கு சித்திரலேகா "ஜயந்தா! உங்களுடன் பழகி உங்களது நல்ல குணம் எனக்கும் வந்து விட்டது.

பிறருக்காக தியாகம் செய்வதிலும் பிறருக்கு உதவுவதிலும் ஆனந்தம் ஏற்படகிறது என்ற உண்மையை உங்களுடன் பழகியதிலிருந்து தெரிந்து கொண்டேன். அதனால்தான் அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்காக என் அழகினைத் தியாகம் செய்து விட்டேன்" என்று பெருமையுடன் கூறினார்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட ஜயந்தன் உணர்ச்சி வசப்பட்டு "சித்திரா, முன்னைவிட என் கண்களுக்கு இப்போதுதான் நீ மிக அழகாகத் தெரிகிறாய். உன்னை மணந்து கொள்ள நான் ஆசைப்படகிறேன். சம்மதமா?" என்று கேட்டான்.

இவ்வாறு அவன் கேட்டவுடனேயே சித்திரலேகா தன் பழைய மோகன உருவத்தை மீண்டும் பெற்று விட்டாள்.

கதையைக் கூறி முடித்ததும்,  வேதாளம், "மன்னா, ஜயந்தன் மன்மதனுக்கு நிகரான அழகு படைத்தவன். அவன் அழகில் ஒரு கந்தர்வப் பெண் மயங்கிப் போய் தன்னைத் திருமணம் புரியுமாறு கேட்ட போது ஜயந்தன் மறுத்து விட்டான். ஆனால் அதே கந்தர்வப் பெண் விகாரமான உருவத்திற்கு மாறியவுடன் அவளைத் திருமணம் புரிய தானே வலியவந்தான். நீயே சொல்! இந்த ஜயந்தனின் போக்கு பைத்தியக்காரத்தனமாக இல்லை? இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தும் நீ சொல்லாமல் இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

உடனே விக்கிரமன் "ஜயந்தனின் இந்தச் செயல் அவன் எவ்வளவு உத்தமமானவன் என்று காட்டுகிறது. அவனுக்கு மூளைக்கோளாறு என்று நீ நினைத்தால் அது உன் தவறு. புறத் தோற்றத்திற்கு என்றுமே ஜயந்தன் மதிப்பு அளித்ததில்லை. புற அழகைக் காட்டிலும் அக அழகையே ஜயந்தன் விரும்பினான். முதன்முறை சித்திரலேகாவைப் பார்த்தபோது அவள் புற அழகு அவனைக் கவர வில்லை.

ஆகவே திருமணத்திற்கு அவன் ஒப்பவில்லை. ஆனால் சித்திரலேகா எப்போது  தன் அழகை இழந்து விட்டு தியாகம் என்னும் ஆபரணம் அணிந்து ஒளிர்ந்தாளோ அவள் அக அழகு அவனைக் கவர்ந்தது. ஆகவே அவளை மணம்புரிய முன் வந்தான்" என்றாள்.

விக்கிரமனது பதிலினால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.



வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter