சுந்தர காண்டம் - 6

 
அனுமார் அட்சயகுமாரனைக் கொன்று விட்ட செய்தியறிந்து இராவணன் இடிந்து போனான். இந்திரஜித் அருகிலிருப்பதைக் கண்ட பிறகே ஓரளவு பயம் தெளிந்தது. உடனே அவன் தன் மகனை நோக்கி, "இந்திரஜித்! மூன்று உலகிலும் உனக்கு நிகரான வீரன் யாருமே கிடையாது. எங்கிருந்தோ வந்த ஒரு சாதாரண வானரம் நமது ஐந்து சேனாதிபதிகள், ஜம்புமாலி, இன்னும் பிற ஏராளமான அசுரர்களைக் கொன்றுவிட்டதாக அறிகிறேன். அதனால் அதனுடைய உண்மையான சக்தியை அறிந்து, அதனுடன் சண்டையிட்டுக் கொல்!" என்றான்.

தந்தையின் கட்டளையின்படி, இந்திரஜித் பல ஆயுதங்களுடன் அனுமாரைக் கொல்வதற்காகக் கிளம்பினான். தொலைவிலிருந்தே தன்னுடன் போரிட வரும் இந்திரஜித்தைப் பார்த்துவிட்டு, அனுமார் தன் உடலைப் பெரிதாக்கிக் கொண்டார். பிறகு இருவரும் மோதிக் கொண்டனர். இந்திரஜித் தன்னுடன் பதினோராயிரம் அசுரர்களையும் அழைத்து வந்திருந்தான். அனைவரும் ஏக காலத்தில் அனுமார் மீது அம்புகளை மழையாகப் பொழிந்தனர். ஆனால் அந்த அம்புகள் அனுமாரை ஒன்றுமே செய்யவில்லை. வெகுநேரம் யுத்தம் நடந்தும், அனுமாரை இந்திரஜித்தினால் பிடிக்க முடியவில்லை. அவராலும் இந்திரஜித்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

தன்னுடைய சாதாரண அம்பு களினால் அனுமாரை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட இந்திரஜித் கடைசியாக பிரம்மாஸ்திரத்தை அனுமார் மீது பிரயோகித்தான்.
 மற்ற அம்புகள் எதுவும் செய்ய முடியாத மாயத்தை பிரம்மாஸ்திரம் செய்து விட்டது. அது அனுமாரின் கை, கால்களை அசைக்க முடியாமல் செய்துவிட்டது.  அப்போது அனுமாருக்கு பிரம்மா தனக்குக் கொடுத்த வரம் நினைவிற்கு வந்தது. எந்த அஸ்திரமும் அனுமாருக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாது. மிகவும் வலிமை வாய்ந்த பிரம்மாஸ்திரம் கூட அவர் கை, கால்களை அசைக்க முடியாமல் செய்ததே தவிர, அவர் உயிரைக் குடிக்கவில்லை. பிரம்மாவின் வரமும், தன் தகப்பனால் வாயுவின் ஆசியும் இருக்கும்வரை தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அனுமார் தெரிந்து கொண்டார்.

செயலற்றுப் போன அனுமாரைக் கண்டதும், அசுரர்கள் உற்சாகத்துடன், கூச்சலிட்டப்படி, அவருடைய கைகளைக் கயிற்றினால் கட்டினார்கள். அதைப் பார்த்த இந்திரஜித் திடுக்கிட்டான். பிரம்மாஸ்திரம் பிரயோகிக்கப்பட்டவர் மீது கயிறுகள் பட்டால் அஸ்திரத்தின் சக்தி மறைந்துவிடும் என்பது அசுரர்களுக்குத் தெரியவில்லை. அனுமாரைப் போன்ற பலசாலியால் கயிற்றை எளிதாக அறுத்துவிட முடியும். ஆகையால் தன் வீரர்களை இந்திரஜித் கோபத்தில் திட்டினான்.
ஆனால் பிரம்மாஸ்திரம் செலுத்திய பிறகு கயிற்றால் கட்டினால், அஸ்திரத்தின் சக்தி மறைந்து விடும் என்பதை அனுமாரும் உணரவில்லை. உணர்ந்த பிறகும் கூட, அவர் வேறு ஒரு நோக்கத்துடன் தன்னைக் கட்டிய கயிறுகளை அறுக்கவில்லை.

அனுமாரைக் கயிற்றால் கட்டியபிறகு, அவரை மற்ற அசுரர்கள் இராவணின் சபைக்கு அழைத்துச் சென்றனர். "அப்பா! இதோ அந்த வானரம்!" என்றவாறே இந்திரஜித்தும் சபையில் நுழைந்தான்.அனுமாரைக் கண்டதும், சபையிலிருந்த அசுரர்கள், "இந்த வானரம் யார்? இது எங்கிருந்து வந்தது?" என்று வியப்புடன் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். , இராவணனின் கண்கள் அனுமாரைக்கண்டதும் கோபத்தினால் சிவந்தன.

 "யார் இந்த வானரம்? எதற்காக இங்கே வந்து இத்தனை அட்டகாசம் செய்தது என்று கேளுங்கள்!" என்று கத்தினான். ஆஜானுபாகுவான, கம்பீரமான தோற்றத்துடன், சிம்மக் குரலில் கர்ஜித்த இராவணனின் தோற்றத்தைக் கண்டு அனுமார் ஒரு கணம் மனத்திற்குள் வியந்தார். இவனைக் கண்டு மூன்று உலகமும் பயந்து நடுங்குவதில் ஆச்சரியம் இல்லை என்ற அவருக்குத் தோன்றியது.

அதற்குள் இராவணனின் கட்டளையின்படி, பிரகஸ்தன் முன்வந்து அனுமாரை நோக்கி, "வானரமே! உன்னை யார் அனுப்பியது? இந்திரனா, விஷ்ணுவா? யார்? யாராயிருந்தாலும் உண்மையைச் சொல்! யார் சார்பாகவும் வராவிட்டால், நீயாக இங்கு வந்தாயா? வழிதவறி நுழைந்து விட்டாயா? சொல்!" என்றான்.

அதற்கு அனுமார் இராவணன் பக்கம் நோக்கியவாறு "என்னை இந்திராதி தேவர்களோ, விஷ்ணுவோ, பிரம்மாவோ அனுப்பவில்லை. நான் பிறவியிலேயே வானரம்தான்! லங்காதிபதியான உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலினால் நான் இங்கு வந்தேன். உன்னைப் பார்க்க வேண்டும் என்றால், எளிதில் பார்க்க விடமாட்டார்கள். அதனால்தான் அசோகவனத்தை அழித்து, அசுரர்களைப் பந்தாடினேன். என்னுடைய தற்காப்புக்காக உன்னுடைய அசுரர்களில் பலரைக் கொன்றேனே தவிர, மற்றபடி எனக்கு யாரையும் கொல்லும் நோக்கமில்லை. பிரம்மாவின் வரத்தினால், என்னை எந்த அஸ்திரமும் எதுவும் செய்யாது.  நான் இராமருடைய தூதன்.

உனக்கு நற்புத்தி புகட்டுவதற்காகவே வந்தேன். தசரதனுடைய மகன் இராமர். தன் மனைவி சீதாதேவியுடனும், தம்பி இலட்சுமணனுடனும், தந்தையின் கட்டளைக்கேற்ப வனம் சென்றனர். தண்டகாரண்யத்தில் அவர்கள் இருந்த போது, சீதை காணாமற்போனாள். தேவியைத் தேடியலைந்த இராமர் ருஸ்யமுக பர்வத்தில் எங்கள் ராஜாவான சுக்ரீவனை சந்தித்து, அவருடன் நண்பன் ஆனார். அவருடைய சகோதரன் வாலியைக் கொன்று, இராமர் சுக்ரீவனுக்கு ராஜ்யத்தை மீட்டுத் தந்தார்.
அந்த நன்றிக்கடனைத் தீர்க்க, சுக்ரீவன் சீதையை தான் தேடித் தருவதாக வாக்களித்துள்ளார். பிறகு எங்கள் ராஜாவான சுக்ரீவனின் ஆணைப்படி நான் சீதையைத் தேடி வந்த போது இறுதியில் உன்னுடைய நாட்டை அடைந்தேன். உன்னுடைய அசோகவனத்தில் தேவியை சற்றுமுன் பார்த்தேன். உன்னுடைய வீரத்திற்கும், புகழுக்கும் புறம்பாக இராமரின் மனைவியை நீ சிறைப்பிடித்து வைத்திருக்கிறாய். உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தேவியை இராமரிடம் ஒப்படைத்து விடு! அதுதான் உனக்கு நல்லது! நான் தூதனாக வந்துள்ளேன். அதனால் நான் உன் நன்மையை உத்தேசித்துச் சொல்கிறேன். தயவு செய்து தேவியை விட்டு விடு!" என்றார்.  

ஒரு வானரம் தனக்கு புத்திமதி சொல்ல முற்பட்டதையெண்ணிக் கொதித்தெழுந்த இராவணன் உடனே அனுமாரைக் கொல்லுமாறு கட்டளைஇட்டான். ஆனால் விபீஷணன் இடைமறித்து, "அண்ணா! தூதனாக வந்தவனைக் கொல்வது ராஜதர்மம் இல்லை. இந்த வானரம் நம் வீரர்கள் பலரைக் கொன்றிருக்கிறது. அதனால் இதை தண்டிக்காமல் விடுவது சரியில்லை. மரண தண்டனையைத் தவிர மற்ற ஏதாவது தண்டனைகள் அளிக்கலாம்" என்றான்.
அதற்கு இராவணன், "நீ சொல்வது சரிதான்! வானரங்களுக்குத் தன் வாலைப்பற்றிய கர்வம் உண்டு. அதனால் இந்த வானரத்தின் வாலைத் தீயிட்டு கொளுத்தி, தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டு செல்லுங்கள்" என்றான்.

 உடனே அசுர வீரர்கள் அனுமாரின் வாலில் ஏராளமான துணிகளைச் சுற்றி விட்டுத் தீ வைத்தனர். பிறகு அனுமாரைத் தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். ஆனால் அனுமார் அதைப் பொருட்படுத்தவில்லை.
உடனே சில அரக்கிகள் சீதையிடம் சென்று, "உன்னிடம் பேசிவிட்டுச் சென்ற வானரத்தின் கதி என்ன ஆயிற்று தெரியுமா? அதனுடைய வாலில் தீ வைத்துத் தெருத்தெருவாக இழுத்துச் செல்கின்றனர்" என்றனர்.


அதைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட சீதை, "நான் பதிவிரதை என்பது உண்மையானால் அனுமாரை நெருப்பு ஒன்றும் செய்யாமல் இருக்கட்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டாள்.

அவள் அவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்டவுடன், அனுமாரின் வாலில் பற்றியெரிந்த தீ இன்னும் பிரகாசமாகக் கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் அனுமாருக்கு சுடவேயில்லை. தெருக்களை வேடிக்கை பார்த்தது போதும் என்று எண்ணிய அனுமார், தன் கைகளைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்தெரிந்தார். தன் உருவத்தை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு ஒரு பெரிய தூணைப் பிடுங்கி, அருகிலிருந்த அரக்கர்களை அடித்துத் துவைத்தார். வானில் பறந்து சென்று அரண்மனை, மற்றும் பெரிய மாளிகைகளுக்கு தன் வாலிலுள்ள தீயினால் நெருப்புப் பற்ற வைத்தார். பிறகு ஒரு வீடு பாக்கி வைக்காமல் எல்லா வீடுகளுக்கும் தீ வைத்தார். இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி ஆகிய ஒருவருடைய வீட்டையும் விட்டு வைக்கவில்லை.

விபீஷணனுடைய வீட்டைத் தவிர, மற்ற அத்தனை வீடுகளுக்கும் தீ வைத்தார். இலங்கையே சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய, வாயு பகவான் அந்தத் தீ பரவ தன்னால்இயன்ற உதவி செய்தார். இலங்கை இன்னும் பலமாகத் தீப்பிடித்து எரிந்தது.

தங்களுடைய வீடுகளைக் காப்பாற்ற அசுரர்களால் முடியவில்லை. தீப்பிழம்புகளுடன் எரியும் இலங்கைப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. அசுரர்களுடைய கூக்குரல் அங்குள்ள நிலைமையை இன்னும், பயங்கரமாக ஆக்கியது.
பறந்து கொண்டே சமுத்திரத்தை அடைந்த அனுமார் நீரில் முக்கி தீயை அணைத்தார்.  இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிவதைத் திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்த அனுமாருக்கு திடீரென ஒரு பயங்கர சந்தேகம் ஏற்பட்டது.

இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிந்தால், சீதையின் கதி என்னவாகும்? ஐயோ, முன்பின் யோசிக்காமல் இலங்கை முழுவதும் தீவைத்து விட்டோமே என்று பதைபதைத்துப் போனார். அரண்மனையில் வைத்த தீ அசோகவனத்திற்கும் பரவியிருந்தால் சீதையின் கதி என்ன ஆயிருக்குமோ என்று பயம் ஏற்பட்டது. ஆகா! இவ்வளவு தூரம் திருப்திகரமாகக் காரியம் செய்து விட்டுக் கடைசியில் தன் அவசர புத்தியினால் காரியத்தைக் கெடுத்து விட்டோமே என்று தன் மீதே கோபம் ஏற்பட்டது.

பிறகு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். வந்த வேலையில் இதுவரை எல்லாம் நன்றாக முடிந்திருக்கும்போது, தேவியும் பத்திரமாகவே இருப்பாள் என்று தோன்றியது. என்னுடைய வாலில் பற்ற வைத்த தீ என் வாலை எரிக்காதபோது, மகாப்பதிவிரதையான சீதையை அக்னி தேவன் அண்டியிருக்கவே முடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இவ்வாறு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்ட பிறகும், அனுமாருடைய மனம் அலை பாய்ந்தது. ஒருக்கால் சீதையை நேருப்பு தீண்டியிருந்தால், இராமரிடம் சென்று என்ன பதில் சொல்வது?

சுக்ரீவனிடம் எப்படி முகத்தைக் காட்டுவது? ஆகா! இராமர் என் மீது வைத்த நம்பிக்கையைக் குலைத்து விட்டேனோ? இவ்வாறு ஒருபுறம் நம்பிக்கையும், ஒருபுறம் சந்தேகமும் அவர் மனத்தை மாறி மாறித் தாக்க, அவர் பெருத்த சஞ்சலத்தையடைந்தார். அப்போது ஓர் அசரீரி கேட்டது. சீதை பத்திரமாக இருப்பதாக அது கூறியதும், அனுமார் நிம்மதியடைந்தார்.  

0 comments:

Post a Comment

Flag Counter