பால காண்டம் - 5

 
விசுவாமித்திரர் செய்த தவத்தைக் கண்டு வியந்த பிரம்மா அவர்முன் தோன்றி அவருக்கு 'ரிஷி' என்ற பட்டத்தை அளித்து விட்டு மறைந்தார். ஆனால் விசுவாமித்திரரின் மனம் திருப்தி அடையவில்லை. ஏனெனில் அவர் விரும்பியது வெறும் ரிஷி என்ற பட்டமல்ல. அதனால் அவர் மேலும் கடுமையாகத் தவம் புரியலானார்.

அப்போது அவரது தவத்தைக் கலைக்க தேவர்கள் தீர்மானித்தனர். எனவே தேவலோக அழகியான மேனகை என்னும் கன்னிகையை அனுப்பினார்கள். அவர்ளும் பூவுலகிற்கு வந்து விசுவாமித்திரரின் மனத்தைத் தவத்திலிருந்து திருப்ப முயன்றாள். இனிய கீதங்களைப் பாடினாள். இன் மொழிகள் பல புகன்றாள். இடைவெட்டி நடனம் ஆடினாள். அவளது ஆடல் பாடல்களில் மயங்கி விசுவாமித்திரரும் அவள் விரித்த வலையில் வீழ்ந்து விட்டார்.

இப்படியாக சிறிது காலம் கழிந்தது. அதன் பிறகே விசுவாமித்திரருக்கு தேவர்கள் செய்த சூழ்ச்சி தெரிந்தது. அவர் தனது தப்பிதத்தை உணர்ந்து உடனே மேனகையை விட்டுப் பிரிந்து இமயமலைக்குச் சென்றார். அங்கு கடுந்தவம் புரிய, தேவர்களும் பிரம்மாவும் காட்சி அளித்து அவருக்கு 'மகரிஷி'என்ற பட்டத்தை அளித்தனர். ஆயினும் மனம் திருப்தியடையாமல் அவர் "நான் இப்போது ஐம்புலன்களை அடக்கியவனாகக் கருதப்
படுவேனா?" எனக் கேட்டார்.

இன்னும் அந்த நிலையை அவர் அடையவில்லை எனபிரம்மா கூறவே, விசுவாமித்திரர் வைராக்கியம் கொண்டு எதையுமே சாப்பிடாமல் கடுந்தவம் புரிந்தார். அத்தவத்தால் தேவலோகமே நடுங்கியது.

இந்திரனோ அவரது தவத்தைக் கலைக்க ரம்பையை அனுப்பினான். அவளுக்கு உதவி புரிய அவனும் சென்றான். பூவுலகை அடைந்ததும் அவன் ஒரு குயிலின் உருவத்தை எடுத்துக் கொண்டான். வசந்தம் வந்துவிட்டதென அறிவிக்க விசுவாமித்திரர் தவம் செய்யும் இடத்திற்குப் போய் கூவினான்.

விசுவாமித்திரர் கண் திறந்து பார்த்தார். அப்போது எதிரே ரம்பை நின்று கொண்டிருந்தாள். அவள் எதற்காக வந்திருக்கிறாளென்பது அவருக்குத் தெரிந்து விட்டது. தேவர்கள் மீண்டும் தன் தவத்தைக் கெடுக்கப் பார்க்கிறார்ளெனத் தெரிந்து கொண்டு கடுங்கோபம் கொண்டார். அவர்களின் சூத்திரப் பாவையாக வந்த ர்ம்பையின் மீது ஆத்திரம் கொண்டார். அவளைக் கல்லாகிவிடச் சபித்தார். இந்திரனோ ஓடிப்போய் விட்டான்.

அதன் பிறகே 'அடடா, கோபம் கொண்டு ரம்பையைச் சபித்ததால் என் தவசக்தியில் பாதியை இழந்து விட்டேனே' என அவர் மனம் வருந்தினார். இனி இப்படித் தன் புலன்களை இஷ்டப்படி திரியவிடக் கூடாதென அப்போதே தீர்மானித்துக் கொண்டார்.

எனவே அங்கிருந்து கீழ் திசைக்குச் சென்று மெளனவிரதம் மேற்கொண்டு தவம் புரியலானார். அத்தவத்தின் கடுமை மூன்று உலகங்களையும் தகிக்கலாயிற்று. இத்தவத்தைப் பற்றி தேவர்கள் பிரம்மாவிடம் போய் முறையிடவே பிரம்மாவும் விசுவாமித்திரர் முன் தோன்றி "இனி பிரம்மரிஷி என்ற பட்டம் உனக்கு ஏற்படும்" எனக் கூறினார். அதனால் கூட விசுவாமித்திரர் திருப்தி அடைய வில்லை. அப்போது பிரம்மா வசிஷ்டரைக் கொண்டே அப்படிக் கூப்பிடவும் செய்தார். 

அப்போது தான் விசுவாமித்திரரின் மனம் மகிழ்ந்தது. அதற்குப் பிறகு விசுவாமித்திரருக்கும் விசிஷ்டருக்குமிடையே இருந்த விரோத மனப்பான்மையே ஓழிந்தது."

விசுவாமிதிரரின் கதையை சதானந்தர் இப்படிக் கூறி முடிக்கும் போது மாலைப் பொழுதாகி விட்டது. ஜனக மன்னரும் விசுவாமித்திரரின் வ்ருகைக்காக மிகவும் மனம் மகிழ்ந்ததாகக் கூறி தக்கபடி உபசரித்துவிட்டு அங்கிருந்து தன் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தார்.

மறுநாள் காலை விசுவாமித்திரரையும் இராமனையும் இலட்சுமணனையும் அரசசபைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது ஜனகர் தன்னிடமுள்ள சிவதனுசைக் காண்பித்து, "அது சக்திவாய்ந்த கனமான வில். யாராலும் அதை அசைக்கக்கூட முடியாது" என்று கூறினார்.

ஜனகருக்குச் சந்ததியே இல்லாது இருந்தது. அவர் ஒருமுறை வயலில் உழுகையில் பூமியிலிருந்து ஏர்க்கால்முனையில் பட்டு ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அதற்கு 'சீதை' என்று பெயரிட்டு தன் மகளைப் போல வளர்த்து வந்தார். அவளுக்கு மணாளனாக வருபவன் சிவதனுசை எடுத்து நிறுத்தி நாணேற்ற வேண்டும் என தான் சபதம் செய்திருப்பதாக ஜனகர் யாவரிடமும் அறிவித்திருந்தார். இதற்காகப் பல நாட்டிலிருந்து பல அரச குமாரர்கள் வந்து தோல்வியுற்றுப் போனதையும் அவர் விசுவாமித்திரரிடம் கூறினார். அதன் பின்னர் ஜனகர் அந்த வில்லைக் கொண்டு வரும்படி தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்களும் அதை ஒரு பெரிய வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டு வந்தனர்.

இராமன் முனிவரது அனுமதி பெற்று அந்த வில்லை எடுத்து நாணை இழுத்தான். அதில் அம்புவைக்கப் போகையில் மத்தியில் ஒடிந்துவிட்டது. அது கண்டு யாவரும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்துப்போயினர். அப்போது ஜனகருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதென்று சொல்லவும் வேண்டுமா? 
 
உடனே விவகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து தன் தூதர்களை அயோத்திக்கு அனுப்பி தசரதரையும் அழைத்து வரச் செய்தி அனுப்பினார் ஜனகர்.

தசரதனும் ஜனகர் தனக்கு சம்மந்தியாக வருவது எவ்வளவோ மேல் என நினைத்து மகிழ்ந்தான். வசிஷ்டர். ஜாபாலி, காஸ்யபர், மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்கள் முன் செல்ல தசரதனும் தனது படைகளோடு மிதிலாபுரியை அடைந்தான். ஜனகரின் யாகமும் முடிவடைந்தது. தசரதர் வந்ததும் அவரை ஜனகர் வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது ஜனகரோடு அவரது தம்பியான குசத்வஜனும் இருந்தான். சம்பந்திகளிடையே பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாயின. ஜனகருக்கு சீதை கிடைத்தபின் ஊர்மிளை என்ற பெண்ணும் பிறந்திருந்தாள். குசத்வஜனுக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்ற இரு பெண்கள் இருந்தனர். ஆகையால் தீதையை இராமனுக்கும் இலட்சுமணனுக்கு ஊர்மிளையையும் பரதனுக்கு மாண்டவியையும் சத்துருக்கனனுக்கு சுருதகீர்த்தியையும் விவாகம் செய்து வைக்கத் தீர்மானித்து ஒரு நல்ல முகூர்த்தமும் குறிப்பிடப் பட்டது.

தசரதர் ஏராளமாக தானதர்மங்கள் செய்தார். அதன் பின் முறைப்படி விவாகம் நடைபெற்றது. விவாகத்தின் போது பரதனின் தாய்மாமனான யுதாஜித்தும் வந்திருந்தார். விவாகம் முடிந்ததும் தசரதர் தன் புதல்வர்களோடும், மருமகள்மாருடனும் அயோத்திக்குக் கிளம்பினார். 
 
 விசுவாமித்திரர் இமயத்திற்குச் சென்றார்.

ஊர் திரும்புகையில் வழியில் திடீரென்று தூசிப்படலம் கிளம்பியது. எங்கும் ஒரே இருள் சூழ்ந்து கொண்டது. அப்போது பிரளயகால கோரதாண்டவம் புரிவதுபோல கண்கள் சிவக்க பரசுராமர் அவர்களுக்கு முன் வந்து நின்றார்.

அவரது தோளில் கோடரியும் கையில் வில்லும் இருந்தன. அவர் இராமனைப் பார்த்து, "ஏய் பயலே, நீயாடா சிவதனுசை முறித்தாய்? நானும் உன் வீரத்தைப் பார்க்கிறேன். எங்கே இந்த வில்லை முறி பார்க்கலாம். இது விஷ்ணுவின் வில். இதில் அம்பு ஏற்றிவிடு பார்க்கலாம்" என்று கடுங்கோபத்தோடு சவால் விடுத்தார். பிரம்மா சிருஷ்டித்த இருவில்களே சிவதனுசும் விஷ்ணுதனுசுமாகும். தேவர்கள் ஒரு வில்லை சிவனிடம் மற்ற்தை விஷ்ணுவிடமும் கொடுத்து இருவரது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கலாயினர். அதில் விஷ்ணுவின் கை சற்று ஓங்கவே சிவன் தனது வில்லை விதேகதேசத்து மன்னனிடம் கொடுத்தார். விஷ்ணுவே தனது வில்லை பிருகுவம் சத்தவரிடம் கொடுத்தார். அது வம்சபரம்பரையாக இருந்து பரசுராமரிடம் கிடைத்தது.

பரசுராமர் விடுத்த சவாலைக் கண்டு தசரதன் நடுநடுங்கிப்போனான். அவன் பரசுராமரின் பாதங்களில் வீழ்ந்து "சுவாமி, இருபத்தியொரு முறை மட்டுமே நீங்கள் க்ஷத்திரியர்களைத் தாக்கி அழிப்பதாக இந்திரன் முன் சபதம் செய்து அதன் படியே நடந்து கொண்டீர்கள். இப்போது அதைமீறி எங்களைத் தாக்கலாமா? எங்களைக் காப்பாற்றுங்கள்" என்றான்.
 
 
அதுகேட்டு இராமனுக்குக் கோபமும் ஆத்திரமும் வந்தது. அவன் பரசுராமரிடமிருந்து வில்லை வாங்கி அதில் ஒரு அம்பை வைத்து "இதை எங்கே எய்ய வேண்டும்? இதனால் உம் உயிரையே கூட போக்கிவிட முடியும். ஆனால் ஒரு அந்தணனைக் கொல்லக் கூடாது என்பதற்காக விட்டு வைக்கிறேன் உம், என்ன செய்யட்டும் சொல்லும்" என்று கோபத்துடன் கேட்டார்.

அது கண்டு பரசுராமர் திகைத்துப் போனார். அவருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. அந்த அம்பை எங்கே எய்யச் சொல்வது? அதற்கு யாரை இரையாக்குவது? திடீரென இப்படிப் பட்ட நிலைமை ஏற்பட்டது கண்டு அவர் கல்லாகி விட்டார். முடிவில் அவருக்கு ஒரு வழி தோன்றியது அதன்படி அவர் தான் செய்த நற்பணிகளை எல்லாம் அந்த அம்பிற்கு இரையாகக் கொடுத்து விட்டு மகேந்திரகிரிக்குப் போய் விட்டார். அதன் பின்னர் அங்கிருந்து யாவரும் அயோத்திக்குச் சென்றனர்.

சில நாள்கள் கழிந்தன். யுதாஜித்து தன் மருமகனான் பரதனைத் தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினான். அவனோடு சத்துருக்கனனும் செல்ல விரும்பவே தசரதன் அவ்விருவரையும் அனுப்பி வைத்தான். அவர்களும் தமது மாமாவுடன் அவரது நாட்டிற்குச் சென்றனர்.

சீதையும் இராமனும் இல்லறத்தை மேற்கொண்டு நன்கு இல்வாழ்க்கை நடத்தி வந்தனர். இராமன் அவ்வப்போது தன் தந்தைக்கு உதவியாக அரசாங்க வேலைகளில் உதவிபுரிந்து வரலானான். இப்படியாக நாள்கள் கழியலாயின.


(பாலகாண்டம் முற்றிற்று)
 
 
 

0 comments:

Post a Comment