யுத்த காண்டம் - 4


சமுத்திரத்தின் மீது பாலம் கட்டலாம் என்று இராமர் சொன்ன உடனேயே வானரங்கள் செயலில் ஈடுபடலாயின. காடுகளில் போய் பெரியபெரிய மரங்களையெல்லாம் வேரோடு பெயர்த்து எடுத்து வந்தன. மலைகளில் இருந்து பாறைகளை உருட்டிக் கொண்டு வந்தன. இவற்றையெல்லாம் கடலில் போட்டபோது அதன் நீர் ஆகாயம் வரை உயரக்கிளம்பி சிதறியது.

பால வேலை துரிதமாகவே நடைபெற பெற்றது. கற்களையும், மரங்களையும் சீராக வானரங்கள் அடுக்கி, அடுக்கி வைத்தவாறே அழகிய பாலத்தை வெகு சீக்கிரத்தில் அமைத்தும் விட்டன. இவ்வளவும் நளனென்னும் வானரனின் தலைமையில் நடந்தது. அவனது திறமைமிக்க ஆணைகள் மூலமாக கற்களும், மரங்களும் உரிய இடங்களில் ஒழுங்காக வைக்கப் பட்டன.

வேலை சற்றும் சுணக்கம் இல்லாமல் நடந்து ஐந்தே நாள்களில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இலங்கையை அடையப் பாலம் அமைக்கப்பட்டபின் வானரர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமா? மறுவினாடியே எல்லா வானரங்களும் அதன் வழியே சென்று இலங்கையின் கரையை அடைந்து விட்டனர். விபீஷணன் தன் ஆள்களுடன் கதையைத் தோளில்மீது வைத்தவாறே அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான்.யாராவது எதிர்க்க வந்தால் அவர்களோடு போரிடவே அவன் அப்படி செய்தான்.

இராமரையும் இலட்சுமணனையும், அனுமாரும் அங்கதனும் தம் தோள்மீது ஏற்றிக் கொண்டு இலங்கைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். அவர்கள் இருவரும் வந்து சேர்ந்ததும் வானரங்களெல்லாம் வெற்றி கோஷமிட்டு உற்சாகத்தோடு குதித்துத் தம் உள்ள உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது வெளிப்படுத்தின. இராமரும் சற்றும் தாமதம் செய்யாது
இலட்சுமணனோடு வில்லையும், அம்புகளையும் கையில் எடுத்துக்கொண்டு இலங்கையை நோக்கி நடக்கலானார். அவர் பின்னாலேயே விபீஷணன் சுக்கிரீவன் முதலானோர் சென்றனர். வானரங்களும் வரிசையாகச் செல்லலாயின.


இதே சமயம் இலங்கையிலிருந்து போர் முழக்கம் கேட்கலாயிற்று. அந்த சத்தம் அணிவகுத்துச் செல்லும் வானரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.



அவை யாவும் ஆகாயமே அதிரக் கத்திக்கொண்டு செல்லலாயின. இலங்காபுரியை இராமர் தொலைவிலிருந்தே பார்த்தார். பல விதமான கொடிகள் உயரமான கட்டிடங்களின் மீது பறந்து கொண்டு இருந்தன.  இலட்சுமணனிடம் அவர் "ஆகா! இந்த திரிகூட மலையின் மீது விசுவகர்மா எவ்வளவு அழகான நகரத்தை அமைத்திருக்கிறான்! ஆனால், அதில் வாழும் இராவணனின் உள்ளந்தான் எவ்வளவு அழுக்கு அடைந்து உள்ளது!'' என்றார். இதன் பின்னர் வானரசேனையை இராமர் கருட வியூகத்தில் அமைத்தார். இராமரும், இலட்சுமணரும் சேனை முன் இருந்தனர். அங்கதனும் நீலனும் மத்தியில் இருக்க, ரிஷபன் வலது பக்கத்திலும், கந்தமாதனன் இடது புறமாகவும் இருந்தனர்.
சுக்கிரீவன் பின் பகுதியில் இருந்து சேனையின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஏற்று இருந்தான்.இவ்விதமாக சேனையை அமைத்த பிறகு சுக்கிரீவன் இராவணனின் ஒற்றனாக வேவு பார்க்க வந்த சுகனை விடுதலை செய்தான். சுகன் உடனேயே கிளம்பிப் போய் இராவணனின் முன் போய் நின்றான். இராவணன் அவனைப் பார்த்து "உன்னைப் பார்த்தால் நீ வானரர்கள் இடம் அகப்பட்டுக் கொண்டு நல்ல உதை வாங்கி இருப்பது போலத் தெரிகிறதே'' என்றான்.



அதற்கு சுகனும் "நானும் தங்களது கட்டளைப்படியே கடலைக் கடந்து சென்றேன். அந்த வானரர்கள் என்னைக் கண்டதுமே ஆத்திரமடைந்து ஆகாயத்தில் கிளம்பி என்னைப் பிடித்துக் கொண்டார்கள். என்னைப் பலவிதத்திலும் துன்புறுத்தலாயினர். என்னால் பேசக்கூட முடியவில்லை. இப்போது இராமன் இலங்கைத் தீவின் கரையில் வந்து இறங்கிவிட்டான்.
பெரியகடலை பாலம் கட்டி அனைவரும் கடந்து வந்து விட்டனர். அவர்களது எண்ணிக்கையைக் கூறுவது சிரமமே. இனி நாம் சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு சமாதானம் செய்து கொள்வதா அல்லது இராமனிடம் போரிடுவதா என்பதை இப்போதே தீர்மானித்தாக வேண்டும். அதுவே நம் முன் இப்போதுள்ள பிரச்சினை'' என்றான்.

இராவணனோ "நாம்தான் போரிடப் போகிறோமே'' எனக்கூறி சுகனையும் சாரணனையும் வானரங்கள் போல உருமாற்றம் செய்து இராமரது படை பலத்தை அறிந்துவரஅனுப்பினான். அவர்களும் வானர சேனையோடு சேர்ந்து கொண்டனர். அந்த வானரசேனைக்கு முடிவு இருப்பதாக அவர்களுக்குத் தெரியவே இல்லை. எங்கே பார்த்தாலும் வானரங்களே தென்பட்டன.


மலை மீதும், மரங்கள் மீதும் மணல்பரப்பின் மீதும் வானரங்கள்! அவர்கள், கண்களுக்குத் தென்பட்ட எந்த இடமும்காலியாக இருக்கவே இல்லை. கடலில் கட்டிய பாலத்தின்மீது கூட வானரங்கள்இன்னமும் வந்துகொண்டிருந்தன. விபீஷணனுக்கு, சுகனும் சாரணனும் வானர உருவில்வந்து இருப்பது தெரிந்து விட்டது. அவன் அவர்களைப் பிடித்து இராமர் முன்கொண்டுபோய் நிறுத்தி அவர்கள் இராவணனது ஒற்றர்கள் என்று கூறினான்.அவர்களும் விபீஷணன் கூறியது சரியே என ஒப்புக்கொண்டனர்.


அதுகேட்டு இராமர் சிரித்தவாறே "எம் படை முழுவதும் பார்த்து ஆகிவிட்டதா? இல்லையானால் நன்றாகப் பார்த்துக் கொண்டு போய் இராவணனிடம் கூறுங்கள். உங்களை நான் ஒன்றும் செய்யாது விட்டுவிடுகிறேன். இராவணனுக்கு இன்னமும் துணிவும் தைரியமும் முன்பிருந்தது போலவே இருக்கும் ஆனால், என்னை அவன் எதிர்க்கட்டும். அதன்பின் அவனுக்கு என் பலம் தெரியும். நான் நாளை இலங்காபுரியை தாக்கப் போகிறேன்'' என்றார். இதைக் கேட்டு அவர்கள் இருவரும் இராமரைப் புகழ்ந்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.

அவர்கள் நேராக இராவணனிடம் சென்று, "எங்கள் இருவரையும் விபீஷணன் கண்டுபிடித்து விட்டான். எங்களைப் பிடித்துக் கொண்டு போய் அவன் இராமர் முன் நிறுத்தவே நேர்மை பொருந்திய அவர் எங்களை ஒன்றும் செய்யாது விட்டு விட்டார். அது மட்டுமல்ல படை முழுவதையும் நன்கு பார்த்துக் கொண்டு போகும்படியும் கூறினார். இராமரும் இலட்சுமணரும், சுக்கிரீவனும் மிகவும் பலசாலிகள்.



இலங்கையை அழிக்க இவர்கள் போதும். மேலும், விபீஷணன் வேறு அவர்களோடு சேர்ந்து கொண்டதால் அவர்களது பலம் மேலும் அதிகரித்து விட்டது. எனவே அவர்களோடு பேரிடுவது பற்றிச் சற்று ஆழ்ந்து யோசனை செய்து முடிவுக்கு வருவதே மிக்க நல்லது என்று நினைக்கிறோம்'' என்றனர். அது கேட்டு இராவணன் "மூவுலகிலும் உள்ளவர்களெல்லாம் ஒன்று திரண்டு என்னை எதிர்க்க வந்தால் கூட நான் சீதையை இராமனிடம் ஒப்படைக்கமாட்டேன். நீ ஏதோ பயந்து போய் வந்திருக்கிறாய். அதனால்தான் இப்படிக் கூறுகிறாய்'' எனச் சொல்லி சாரணையும், சுகனையும் அழைத்துக் கொண்டு தன் மாளிகையின் மேல் தளத்திற்குப் போய் அங்கு நின்று கொண்டு அவன் நாலாபுறமும் பார்க்கலானான்.


எங்கு பார்த்தாலும் வானரங்களே அவன் கண்களில் பட்டன. அப்போது அவன்"இவர்களில் பெரும் வீரர்கள் யார்?'' எனக்கேட்க சாரணனும் "அதோ இருப்பவன்நீலன், அவன் சேனைக்குத் தலைமை தாங்குகிறான். மற்றவன் அங்கதன், இளவரசுப்பட்டம் பெற்றவன், வாலியின் மகன்.


அனுமார் தான் நமக்குத் தெரிந்தவராயிற்றே.மற்றவன் நளன், அவன் கடலைக் கடக்க பாலத்தை அமைத்தவன். இதுபோக, சுவேதன்,குமுதன், ரம்பன், சரபன் முதலிய வீரர்கள் அந்தப்பெரும் படையில் இருக்கிறார்கள்'' என்றான். சுகனும் தனக்குத் தெரிந்த சில வானரவீரர்களைப் பற்றிக் கூறினான்.


இப்படியாக இருவரும் வானர வீரர்களது பட்டியலைக் கூறவும் இராவணனின் கோபம்மிகவும் அதிகரித்தது. அவன் "நீங்கள் இருவரும் எதிரிகளை இப்படி ஒரேயடியாகப்புகழ்கிறீர்களே. இதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் உதவியா? பேஷ் பேஷ்.உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்பவர்கள் போலக் காணப்படுகிறீர்களே'' என்றுகோபத்தோடு கூறினான். இதைக் கேட்ட அவர்கள் ஒன்றும் பேசாது  தலை குனிந்து கொண்டனர்.
அப்போது இராவணன் மகோதரன் என்பவனையும் மற்றும் சிலரையும் அழைத்து "நீங்கள் போய் இராமனின் ஒவ்வொரு செயலையும் அறிந்து வாருங்கள். அவன் யாரிடம் கலந்து ஆலோசிக்கிறான்,எங்கே உறங்குகிறான், எப்போது சாப்பிடுகிறான் என்பது போன்ற சிறிய, சிறியவிஷயங்களைக் கூட கவனியுங்கள்'' எனக்கூறி அனுப்பினான். உடனே அவர்களும்இராமர், இலட்சுமணன், சுக்கிரீவன், விபீஷணன் ஆகியோர் தங்கியுள்ள இடத்தைஅடைந்தனர். விபீஷணன் அவர்களையும் கண்டு கொண்டான்.

அவர்களைப் பிடித்துக் கொல்லப் போகையில் இராமர் குறுக்கிட்டு அவர்களைவிடுதலை செய்து, இலங்கைக்கே திருப்பி அனுப்பி விட்டார். அவர்களும்இராவணனிடம் போய் தமக்கு நேர்ந்ததைக் கூறி இராமன் இருக்கும் இடத்தைக்கூறினர்.
அவர்களில் சார்த்தூலன் என்பவனைப் பார்த்து இராவணன் "நீ ஏன்வாட்ட முற்றிருக்கிறாய்?'' எனக் கேட்க அவனும் "வானர சேனையில் புகுந்துஅவர்களது இரகசியங்களை அறிவது மிகவும் சிரமமான வேலை.
என்னைப் பிடித்து அவர்கள் கொல்லவே முயன்றார்கள்.

 என்னை அடித்து உதைத்துக் குத்தித் தள்ளி துன்புறுத்தி குற்றுயிராக்கிவிட்டனர். நல்லவேளை ஆக இராமர் அப்போது அங்கு வந்து என் விஷயத்தில்குறுக்கிடவே நான் உயிர் தப்பினேன். சீதையை ஒப்படைக்காவிட்டால் போரில் நாம்மடிய வேண்டியதே'' என்றான்.அது கேட்டு இராவணனது கோபம் அதிகரித்தது. யார் போய் திரும்பிவந்தாலும் இராமரையும் அவரது சேனையும் புகழ்ந்து கூறுவதைக் கேட்க அவனுக்குஒரே எரிச்சலாக இருந்தது. அவன் தன் மந்திரிகளோடு கலந்து ஆலோசிப்பதை விட்டுவிட்டு வித்யுத்ஜீவன் என்ற மாயக்காரனை அழைத்துக் கொண்டு சீதை இருக்கும்இடத்திற்குப் போகலானான்.
அவ்விடத்திற்குப் போகும் வழியில் இராவணன்வித்யுத்ஜீவனிடம், "நாம் சீதையை ஏமாற்ற வேண்டும். நீ உன் மாயையால் இராமரதுதலையை போல் ஒன்று செய்தும், அவரது வில் அம்புகளைப் போல் தயாரித்தும்எடுத்துக் கொண்டு வா. நான் முன்னதாகச் செல்கிறேன்.


அங்கே சீதையோடு பேசிக் கொண்டிருக்கும் போதே நீ அவற்றைக் கொண்டு வா'' என்றான். வித்யுத்ஜீவனும் அவ்விதமே
செய்வதாகக் கூறி அவன் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு சென்றான். இராவணனும்
அங்கிருந்து சீதை சிறை வைக்கப்பட்டிருக்கும் அசோகவனத்தை நோக்கிச் சென்றான்.



இராவணனது திட்டம் சீதையை ஏமாற்றி அவள் தன்னை மணக்க இசையச் செய்வதேயாகும்.பாவம், அவன் சீதையைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இல்லாவிட்டால்இப்படி எண்ணித் திட்டமிட்டுச் செல்வானா?

 

0 comments:

Post a Comment

Flag Counter