அயோத்தியா காண்டம் - 3

 
வார்த்தைகள் கூற முடியாது தத்தளிக்கும் தன் தந்தையைக் கண்டு இராமன் திகைத்துப் போய் விட்டான். ஒரு கணநேரத்தில் தன் நிலைக்கு வந்தவனாய் கைகேயியிடம் "அம்மா, இது என்ன விபŽதம்? நான் ஏதாவது தவறு புரிந்துவிட்டேனா? தந்தை ஏன் பேசாமலிருக்கிறார்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே" என்றான்.
 
கைகேயி சற்றும் மனம் தளராமல் "மன்னருக்கு எவ்விதக் கோபமும்இல்லை. அவர் மனத்தில் ஒரு இச்சையுள்ளது. அதைச் சொல்லத்தான் தயங்குகிறார். முன்பொருமுறை எனக்கு அவர் இரு வரங்களைக் கொடுத்தார். அவற்றை இப்போது நான் கேட்க அதை அளித்துவிட்டார். ஆனால் உன்னிடம் அதைக் கூறவே தயங்குகிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவது உன் கடமை. நீ அதைச் செய்வாயா?" எனக் கேட்டாள்.
 
அதற்கு இராமன் "அம்மா, உங்கள் மனத்தில் இப்படிப்பட்ட சந்தேகம் ஏற்பட்டதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தந்தை சொல்லை நான் என்றாவது தட்டியிருக்கிறேனா? தாராளமாக நீங்கள் சொல்லுங்கள், தயக்கமே வேண்டாம். அதன்படி இந்த நிமிடமே செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றான். அப்போது கைகேயி "நான் கேட்ட முதலாவது வரத்தினால் நீ பதிநான்கு வருடகாலம் வனவாசம் செய்ய வேண்டி இருக்கிறது. நீ சிறிதும் கவலைப்படாதே. இந்த பட்டாபிஷேகத்திற்குச் செய்துள்ள ஏற்பாடுகளெல்லாம் வீண் போகாது. 
 
அதற்காக நான் இரண்டாவது வரத்தைக் கேட்டேன். அதன்படி பரதன் சிம்மாசனத்தில் உனக்குப் பதிலாக அமர்வான்" எனக் கூறினாள்.
 
வேறு யாராவது இதைக் கேட்டால் இடியோசை கேட்ட நாகம் போலச் சுருண்டு விழுவார்கள். ஆனால் இராமனோ புன்னகை பூத்த முகத்தோடு "அம்மா, இவ்வளவுதானா? இதற்கா தந்தை தயக்கம் கொண்டார்? இதோ இந்த நிமிடமே கானகத்திற்குச் செல்கிறேன். இப்போதே பரதனுக்கும் செய்தியைச் சொல்லி அனுப்புங்கள். இதைச் சொல்ல தந்தை தயக்கமுற்றாரே என்பதுதான் என் மனத்தைத் துளைக்கிறது" எனக் கூறினான்.
 
அதற்கு கைகேயி "இராமா, உன் உயர் குணம் தெரியாதா என்ன? `தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. தாய் சொல் துறந்தால் வாசகமில்லை' என்ற பழமொழிகளை நீ அறியாதவன் அல்லவே. ஆயினும் உன் பேரிலுள்ள அபார வாஞ்சையினால் உன் தந்தை அதை உனக்குச் சொல்லத் தயங்கினார். நீ தான் அவர் வாக்கைக் காப்பாற்றுவதாகச் சொல்லிவிட்டாயே. உடனே இதைச் செயலில் காண்பி. அதன் பிறகே உன் தந்தை உணவேற்பார்" என்றாள்.
 
தசரதன் என்ன செய்வான் பாவம்! கைகேயி கூறும் கடுஞ்சொற்களைக் கேட்டவாறே மனம் குமுறிக் கொண்டிருந்தான். அதை மறுத்துக் கூற அவனால் இயலவில்லை. இராமன் காட்டிற்குப் போக இணங்கிவிட்டான்என்ற சொல்லைக் கேட்டதுமே மீண்டும் மூர்ச்சையடைந்து விழுந்து விட்டான்.
 
இராமன் அவனைக் கைகொடுத்துத் தாங்கி உட்கார வைத்தவாறே கைகேயியிடம் "அம்மா, நான் கானகத்திற்குச் செல்லுகிறேன். அதற்கு முன் இன்னும் நான் செய்ய வேண்டியது ஏதாவது இருக்கிறதா?" என்று மிகப் பணிவுடன் கேட்டான் கைகேயி ஒன்றும் கூறாமல் இருக்கவே தசரதனை அங்கு கிடத்தி கைகேயியையும் தசரதனையும் சேர்த்து வலம் வந்து அவன் நமஸ்கரித்து விட்டு அவர்களிடம் விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான். 
இராமனது பேச்சைக் கேட்டு அவனோடு சென்ற இலட்சுமணன் உள்ளம் கொதித்தெழுந்தான். ஆனால் அந்த இடத்தில் ஒன்றும் பேசவில்லை. பொங்கி எழும் கோபக் கனலை அடக்கியவாறே இராமனைப் பின் தொடர்ந்தான். அந்த நிமிடம் முதல் இராமன் சுகபோகங்களைத் துறந்து விட்டான். தான் ஏறிவந்த ரதத்தில் ஏறிக் கொள்ளாமல் நடந்தே கௌசல்யை இருக்கும் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தான்.
 
மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த மக்கள் இராமனும் இலட்சுமணனும் வரும் நிலையை அறிந்து கொள்ளவில்லை. இராமனை கண்டதுமே அவர்கள் வாழ்த்து முழக்கங்களை முழக்கினர். அவர்களைப் பார்த்து ஒன்றுமே யாருமே கூறவில்லை. இராமனோ எங்கும் நிற்காமல் நேராகத் தன் அன்னையின் அறைக்குள் சென்றான்.
 
அங்கு கௌசல்யை தன் மைந்தனின் நலனைக் கோரி விரதங்களும் ஜபதபங்களும் செய்து கொண்டுஇருந்தாள். இராமனைக் கண்டதுமே "இராமா, இரவெல்லாம் உபவாசம் இருந்திருக்கிறாய். சற்று அல்ப ஆகாரம் செய்து கொள்" எனக் கூறினாள்.
 
அப்போது இராமன் மெதுவாக "அம்மா, உனக்கு இன்னும் சமாசாரம் தெரியாது போலிருக்கிறது. நல்ல சுருதி கூட்டிய வீணையின் தந்தி படீரென அறுந்து நாதம் இழந்து அபஸ்வரத்தைக் கிளப்புவது போல உங்களிடம் இதைக் கூற வேண்டியிருக்கிறது. நான் மரவுரி தரித்து காய் கனி கிழங்குகளைப் புசித்து பதிநான்கு வருட காலம் வனவாசம் செய்ய வேண்டுமென்பது தந்தையின் ஆணை. எனக்குப் பதிலாக பரதன் சிம்மாசனத்தில் அமர்ந்து இந்த நாட்டை ஆண்டு வருவான்" என்றான்.
 
அது கேட்டு கௌசல்யை அடியற்ற மரம்போல வீழ்ந்தாள். இராமன் அவளை மெதுவாகத் தூக்கி உட்கார வைத்தான். கௌசல்யையோ "என் தலையில் நான் சுகமாக இருக்க வேண்டுமென எழுதப்படவில்லை போலும். நீ அரசனாவாயென நினைத்து எப்படி எப்படி எல்லாமோ இன்பக் கோட்டைகளைக் கட்டினேன். 

ஆனால் அவையெல்லாம் மணல் கோட்டைகளாகி விட்டன. இனி நான் பட வேண்டிய துன்பங்களைஎல்லாம் பட்டுத் தானே தீர வேண்டும். உன்னைப் பெற்று வளர்த்து கண் குளிர நீ சிம்மாசனத்தில் சீதையோடு அமர்ந்து இருக்கும் திருக்கோலத்தைப் பார்க்க நினைத்த ஆசை இப்படிப் பாழாகப் போக வேண்டுமா? இதுவும் என் தலைவிதிதான்" எனப் பிரலாபிக்கலானாள்.
 
அதைக் கேட்டுக் கொண்டு இருந்த இலட்சுமணன் "அம்மா, தலைவிதிஅல்ல. இது அந்தக் கைகேயி செய்துள்ள சூழ்ச்சி. அவள் கூறியது கேட்டு அண்ணா ஏன் காட்டிற்குப் போகவேண்டும்? தந்தை தன் வாயால் அவ்விதம் கூறவில்லை. கைகேயியின் வலையில் அவர் அகப்பட்டுத் தத்தளிக்கிறார். அதனால் தான் ஒன்றும் பேசவில்லை. இது சரியேயல்ல. அநியாயம். இதற்கு நாம் கட்டுப்படக் கூடாது இராமரைக் காட்டிற்குப் போகச் சொல்லி தந்தை வாய் திறந்து சொன்னாரா? இல்லையே" என்று ஆவேசத்தோடு மொழிந்தான்.
 
பின்னர் இராமனிடத்தில் "அண்ணா, நீங்கள் மட்டும் `உம்' என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். கைகேயியை இருக்குமிடம் தெரியாமல் செய்து விடுகிறேன். இந்த விஷயமே யார் காதிலும் விழாதபடி செய்து விடுகிறேன். தந்தையே என்னை எதிர்த்தாலும் நான் அதையும் சமாளித்து விடுவேன். தந்தை இவ்வாறு கைகேயியின் பேச்சைக் கேட்பது நியாயமே ஆகாது. ஆகா! என்ன அநியாயம்? இது எங்காவது நடக்குமா? மூத்த மகன் பட்டத்திற்கு இருக்க அவனைக் காட்டிற்கு அனுப்பி விட்டு இளையவனுக்கா பட்டாபிஷேகம்? இது எப்படி நடக்கிறதோ பார்க்கிறேன்" என்று ஆத்திரத்துடன் கூறினான்.
 
கௌசல்யை இராமனைக் குறிப்பாகப் பார்த்தாள். தாயின் உள்ளத்தை ஒருவாறு தெரிந்து கொண்ட இராமன் "அம்மா, தந்தை கூறிவிட்டார். அவரது வாக்கை நிறைவேற்றுவது என் கடமை. இப்போது உரிமையைப் பற்றிஎல்லாம் பேச இடமே இல்லை. 
தகப்பனாரின் வாக்கை ஏற்று பரசுராமர் தன்னைப் பெற்ற தாயையே கொல்லவில்லையா? இது போல எவ்வளவோ உதாரணங்களைக் கூறலாம். நான் உங்களை வெறுத்து உதறித் தள்ளிவிட்டுக் கானகம் செல்லவில்லையே. இலட்சுமணா, ஆத்திரப்படாதே. தந்தையே நேராகச் சொன்னாலும் ஒன்றுதான். தந்தை கூறியதாகவே கைகேயி அன்னை கூறினாலும் ஒன்றுதான். இதில் எவ்வித வித்தியாசமும் இல்லை. உன் வீரத்தை சற்றும் நான் குறைவாக மதிப்பிடவில்லை. நம் கடமையை முதலில் நாம் செய்வோம். நாம் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்திருக்கிறோம். நான் நினைப்பது போல் நீயும் நினைத்து நட" என்றான்.
 
கௌசல்யைக்கு பிள்ளை மீதுள்ள பாசம் போய்விடுமா? இராமனை விட்டு எப்படிப் பிரிந்திருப்பாள்? இராமன் அவளைப் பலவாறு தேற்றி "இதுதான் விதியின் விளையாட்டு. நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்மீது இதுவரை மிகப் பிரியமாக இருந்து வந்துள்ள என் தந்தையும் கைகேயி அன்னையாரும் என்னைக் கானகத்தில் போய் வசிக்குமாறு கட்டளையிட்டனஎன்றால் அதற்குத் தக்க காரணமே இருக்கும். எல்லாம் வல்லவன் ஏதோ மனத்தில் கொண்டே இத்தகைய கட்டளையிடுமாறு செய்திருக்கிறான். அவன் கையில் நாமெல்லாம் விளையாட்டு பொம்மைகள். அவன் ஆட்டுவிக்கிறான். நாம் ஆடுகிறோம்.
 
அவ்வளவுதான்" எனக் கூறினான்.
 
இராமனின் மன உறுதி சற்றும் தளராது எனத் தெரிந்து கொண்ட கௌசல்யை அவனை ஆசீர்வதித்து அனுப்பினாள். அவனும் உடனே சீதையின் அந்தப்புரத்தை அடைந்தான். சீதையிடம் எப்படி அவ்விஷயத்தைத் தெரிவிப்பது? முகம் எப்போதும் போல இல்லாது பொலிவிழந்து வரும் இராமனை சீதை கண்டாள். அவள் மனம் திடுக்கிட்டது.
 
அப்போது இராமன் விஷயத்தை விவரமாகக் கூறி "நான் கானகத்தில்இருந்து திரும்பி வரும் வரை யாருடைய மனமும் கோணாதபடி நடந்து கொள்" என்றான்.
 
அது கேட்டு சீதை "நீங்கள் இப்படிக் கூறுவது விந்தையாக இருக்கிறது. கடமை என்பதை எனக்குக் கூறிவிட்டு என்னை இங்கேயே இருக்கச் சொல்கிறீர்களே. மனைவியின் கடமை எப்போதும் எந்நிலையிலும் கணவனுக்குப் பணி புரிவதே! நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்குதான் நானும் இருப்பேன். அது நாடானாலும் சரி, காடானாலும் சரி, எல்லாம் எனக்கு ஒன்றுதான்" என்றாள். இராமனோ சீதைக்குப் பல விதத்தில் கானகத்தில் ஏற்படும் துன்பங்களை எடுத்துக் கூறினான். கல்லிலும் முள்ளிலும் மேட்டிலும் பள்ளத்திலும் மலைகளிலும் நதிகளிலும் எவ்வளவு துன்பப்படவேண்டி வருமென்பதை எடுத்துக் காட்டினான். ஆனால் எல்லாவற்றிற்கும் சீதை கடமை என்ற ஒரே வார்த்தையைக் கூறி தன் மன உறுதியை அறிவித்துவிட்டாள்.
 
அது கண்டு இராமன் "சரி உன் இஷ்டம்! உன்னிடமிருக்கும் விலைஉயர்ந்த பொருள்களையெல்லாம் தானம் செய்துவிடு. அதன் பின்னர் வனவாசத்திற்கு கிளம்பலாம்" என்றான்.
 
சீதையும் தன் உடைமைகளைஎல்லாம் ஏழை எளியவர்களுக்கும் அந்தணர்களுக்கும் பகிர்ந்து கொடுத்தாள். தான தர்மங்களை எல்லாம் செய்து தன் கணவனோடு மகிழ்ச்சியாக கானகத்திற்குச் செல்லத் தயாரானாள்.                             
 
 
 
 

0 comments:

Post a Comment