பால காண்டம்-3


தாடகை ஒழிந்தாள். மாரீசன், சுபாகு அடிபட்டு ஓடிப்போய் விட்டார்கள். விசுவாமித்திரரின் யாகம் எவ்விதத் தடையுமின்றி நடைபெற்றது. அதன் பிறகு இராமனும் இலட்சுமணனும் அம்முனிவரை வணங்கி "முனிவரே, நீங்கள் கூறியபடி அரக்கர்களையெல்லாம் விரட்டி அடித்து விட்டோம் இந்த யாகம் எவ்விதமும் தடைபடாது நடக்குமாறும் செய்து விட்டோம். இனியும் நாங்கள் செய்ய வேண்டியது ஏதாவது இருக்கிறதா?" எனக் கேட்டனர்.

அப்போது அங்கிருந்த முனிவர்கள் "மிதிலையின் மன்னர் ஜனகர் ஒரு மாபெரும் வேள்வியைச் செய்யப் போகிறாராம். நாங்களெல்லாம் அங்கு செல்லத் தீர்மானித்து இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வருவதானால் வரலாம். ஜனகரிடம் அற்புதமான வில் ஒன்று இருக்கிறது. அது தெய்வீகத் தன்மையுடையது. அவர் தினமும் அதைப் பூசித்து வருகிறார். அதை எடுத்து நிறுத்தி நாணேற்ற யாராலும் முடியவில்லை. எவ்வளவோ பராக்கிரமசாலிகள் முயன்றும் அப்படிச் செய்ய முடியாது போயினர். நீங்களும் எங்களுடன் வந்தால் ஜனகர் செய்யும் அந்த மகத்தான யாகத்தைக் காணலாம்.

அந்த ஆச்சரியகரமான வில்லையும் காணலாம்"என்று கூறினர். அவர்களும் விசுவாமித்திரரும் மிதிலைக்குக் கிளம்ப ஏற்பாடுகளை செய்யலாயினர். விசுவாமித்திரரும் வன பாலகர்களிடம் "நான் இந்த ஆசிரமத்தை விட்டு விட்டு இந்த முனிவர்களோடு இமயமலைப் பகுதிக்குச் சென்று வருகிறேன்" எனக் கூறிவிட்டுத் தமது சித்தாசிரமத்தை ஒரு முறை வலம் வந்தார்.


பின்னர் யாவரும்  அங்கிருந்து மிதிலையை நோக்கிக் கிளம்பினர். வெகுதூரம் நடந்த பின்னர் அவர்கள் சோணாநதிக் கரையை அடைந்தனர். அங்கு யாவரும் ஸ்நானம் செய்தனர். நித்திய கர்மானுஷ்டானங்களை முறைப் படி செய்த பின்னர் இராமனும் இலட்சுமணனு ம்விசுவாமித்திரர்   முன் அமர்ந்து "ஐயன்மீர், இந்தப் பகுதி மிகமிக அழகாக இருக்கிறது. இவ்வளவு அழகிய நாட்டின் பெயர் என்னவோ?" எனக் கேட்டனர்.

விசுவாமித்திரரும் "இதற்குப் பெயர் கிரிவிரஜம். இது பற்றிய வரலாற்றையும் கூறுகிறேன்" என கூறினார்.

"வெகு காலத்திற்குமுன் குசன் என்ற மகாதபஸ்வி ஒருவர் இருந்தார். அவர் வைதர்பி என்னும் அரச குமாரியை மணந்து கொண்டார். அவருக்கு குசாம்பன், குசநாபன், அதூர்த்தரஜசன், வசு என நான்கு புத்திரர்கள் இருந்தனர். அவர்களை க்ஷத்திரியதர்மத்தை மேற்கொள்ளச் சொல்லி பூமியையும் அவர் பகிர்ந்தளித்தார்.

அவர்களும் நான்கு அற்புதமான நகரங்களை நிர்மாணித்தனர். குசாம்பனின் தலைநகர் கெளசாம்பி. குசநாபனின் பட்டணம் மகோதயபுரி. அர்த்தரசன் தர்மாரண்யம் என்ற ஊரை நிர்மாணித்து ஆண்டான். வசு என்பவன் கிரிவிரஜம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டான். நாம் இப்போது இந்த கிரிவிரஜப் பகுதியில் இருக்கிறோம். இப்பகுதிக்கு ஊட்டம் கொடுத்து வளமுறச் செய்வது இந்த சோணா நதியாகும். இது கிழக்கு திக்கில் உற்பத்தியாகி மேற்குப் புறமாகப் பாய்ந்து வருகிறது.

குசநாபனின் மனைவி கிருதானி அவளுக்கு நூறு குழந்தைகள் பிறந்தன. அவ்வளவும் அழகிய பெண் குழந்தைகள். அவர்கள் எல்லாம் ஒருநாள் விளையாடிக் கொண்டு காடுகளில் சுற்றி வந்தனர். அப்பெண்களைக் கண்டு வாயுதேவன் தன் மனத்தைப் பறிகொடுத்து விட்டான். அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளும் படிக் கூறி அப்படிச் செய்தால் அவர்களை மரணமே அணுகாதபடி செய்து தேவகன்னிகைகளாக்கி விடுவதாகக் கூறினான்.

"இமவான் என்னும் மலை அரசனுக்கு கங்கை, உமை என்ற இரு புத்திரிகள் இருந்தனர். அவர்களில் மத்தவளான கங்கையை தேவர்கள் இமவானின் அனுமதி பெற்று தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். உமை பரமசிவனை மணந்து கொண்டாள். வெகு நாள்களுக்குப்பின் சகர வம்சத்தில் வந்த பகீரதன் தன் முன்னோர்களுக்கு நற்கதியளிப்பதற்காக வெகுவாக முயன்று கங்கையை தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்குக் கொண்டு வந்தான்.

 அதற்கு பிறகு அதனை அவன் பாதாள லோகத்திற்கும் அழைத்துச் சென்றான்." விசுவாமித்திரர் கங்கையின் கதையைக் கூறி முருகன் பிறந்த வரலாற்றையும் சொன்னார். அன்றிரவை கங்கைக் கரையிலேயே கழித்தனர். மறுநாள் காலை வடக்கிலுள்ள அதன் மறுகரையை அடைந்தனர். அங்கு இருந்த விசாலா நகரத்தை அடைய இராமன் "இந்நகரை எந்த வம்சத்து அரசன் ஆள்கிறான்?" எனக் கேட்டார்.
அதற்கு விசுவாமித்திரர் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த வரலாற்றையும் அதிலிருந்து வந்த பயங்கர விஷத்தையும் அமிர்தத்தையும் பற்றிக் கூறினார். விஷத்தை சிவன் ஏற்க அமிர்தத்தை விஷ்ணு மோகினி உருவில் வந்து பகிர்ந்து கொடுத்த விதத்தையும் கூறினார்.

தன் மக்களெல்லாம் இந்திரனால் கொல்லப்பட்டது கண்ட திதி தன் கணவரான கஸ்யபரிடம் போய் இந்திரனைக் கொல்லும் சக்தி பெற்ற மைந்தன் தனக்குப் பிறக்க வேண்டுமென்று வரம் கோரினாள்.

அப்போது அவர் "நீ ஆயிரம் வருடங்கள் நியம நிஷ்டைகளோடு தவம் செய்தால் இந்திரனைக் கொல்லக் கூடிய ஒரு மைந்தனைப் பெற்றெடுப்பாய்" என்றார். திதியும் குசப்லவமென்னும் இடத்தில் அமர்ந்து கடுந்தவம் புரியலானாள். பசியையும் தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. இந்திரனே அவளுக்குப் பணிவிடைகள் கூடப் புரியலானான்.

ஆயிற்று! இன்னும் பத்து வருடங்கள் தவம் செய்தால் போதும். அவளது விருப்பம் நிறைவேறும்.அப்படியிருக்கையில் ஒருநாள் திதி இந்திரனிடம் "இந்திரா நீ எனக்குப் பணிவிடைகள் புரிகிறாய். எனவே எனக்குப் பிறக்கும் குழந்தை உன்னுடன் நேசமாக இருக்கும்படி செய்கிறேன்" என்று கூறிவிட்டு அப்படியே கண்ணயர்ந்தாள்.
இதுதான் தக்க சமயமென நினைத்து இந்திரன் அவளது கர்ப்பத்துள் பிரவேசித்து அங்கு உருவாகிக் கொண்டிருந்த ஜீவனை ஏழு துண்டுகளாக்கி விட்டான். அப்படியும் திதி அந்த ஏழு துண்டுகளையும் உயிர் பெற்ற குழந்தைகளாகப் பெற்றெடுத்தாள். அவர்களும் தேவர்களுக்குச் சமமாக இருந்தனர்.

திதி தவம் செய்ததும் இந்திரன் அவளுக்குப் பணிவிடை செய்ததும் இந்தப் பிரதேசத்தில் தான். இங்கு இக்ஷ்வாகு மன்னனுக்கு விசாலன் என்ற மகன் பிறந்தான். அந்த மகனே பெரியவனாகி இந்த நகரை நிர்மாணித்தான். அவன் பெயரில் இந்நகரம் விளங்குகிறது இப்போது இதை சுமதி என்னும் மன்னன் ஆள்கிறான்."

இப்படியாக விசுவாமித்திரர் அந்நகரின் வரலாற்றைக் கூறினார். அப்போது மன்னன் சுமதியும் விசுவாமித்திரர் வந்திருப்பது தெரிந்து அவரை வரவேற்று உபசரித்தான். இராம, இலட்சுமணர்களை இன்னாரென அவனிடம் விசுவாமித்திரர் கூறி அவனது ஆதித்தியத்தை ஏற்றார். அன்றிரவு அந்த மன்னனின் விருந்தினர்களாக அவர்கள் இருந்து மறுநாள் அங்கிருந்து அவர்கள் புறப் பட்டனர். மிதிலைக்குச் செல்லும் வழியில் ஒரு ஆசிரமத்தை இராமன் கண்டான். அந்த அழகான இடத்தில் யாருமே இல்லாதது கண்டு இராமன் அதற்கான காரணத்தைக் கேட்க விசுவாமித்திரரும் கூறலானார்."இங்கு ஒரு காலத்தில் கெளதமர் என்ற முனிவர் இருந்தார். அவரது மனைவி அகல்யை இந்திரனுக்கு வெகுநாள்களாகவே அகல்யை மீது 'ஒரு கண்' இருந்தது. ஆனால் அது எப்படி கை கூடும்?கெளதமர் மகாதபஸ்வி. அவரது கோபத்திற்கு ஆளானால் கடுமையாகச் சபித்து விடுவார். எனவே அவன் ஒரு சூழ்ச்சி புரியலானான். அவர் இல்லாத சமயம் பார்த்து கெளதமரின் வேடத்தில் ஆசிரமத்திற்குள் நுழைந்தான். அவன் அகல்யையை அணுகினான்.

அவள் அவனது மாயத்தில் சிக்கிவிட்டாள். அவனைத் தன் கணவரான கெளதமரென்றே நினைத்து விட்டாள். இந்திரன் தனது எண்ணம் நிறை வேறியதும் உடனே அங்கிருந்து கிளம்பினான். இந்திரன் வெளியே செல்கையில் எதிரே கெளதமர் வந்து விட்டார். அவருக்கு நடந்தது தெரிந்து விட்டது. அவர் இந்திரனையும் அகல்யையும் சபித்து  விட்டார். அகல்யை இங்கே ஆகாரமே இல்லாது தவக்கோலத்தில் இருக்கிறாள். அவள் கல்லாக மாறி விட்டாள். அவளுக்கு சாபவிமோசனம் உன்னால் தான் ஏற்பட வேண்டும். உன் பாததுளி பட்டால் அவளுக்கு முன்போல இருக்கும் உருவம் கிட்டும்" என்றார்.

இவ்வாறு கூற இராமரும் சமாதி நிலையில் கல்லாக இருக்கும் அகல்யை இருக்குமிடத்திற்குச் சென்றான். அவன் பாதம் பட்டதுமே அவள் தன் சுய உருவம் பெற்றாள். அவளும் இராம, இலட்சுமணர்களை வணங்கி உரிய மரியாதைகளைச் செய்தாள். அதே சமயம் கெளதமரும் அங்கு வந்து சேர்ந்தார்.
இதன் பின்னர் விசுவாமித்திரர் இராம இலட்சுமணர்களுடன் அங்கிருந்து கிளம்பி மிதிலை அடைந்தார்.

0 comments:

Post a Comment