கவிமணியும் ரசிகமணியும்

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில், அதனுள் இருந்த வேதாளம் சிரித்துக் கொண்டே "மன்னா, உனது லட்சியத்தை அடைவதற்காக நீ இவ்வாறு சிரமப்படுகிறாயே, உன் லட்சியம் நிறைவேறுமா? உன்னைப் போன்ற மன்னர்கள் சிலர் தான் நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்றும், தனது கட்டளையின்படியே எல்லாம் நடக்கும் என்ற அகம்பாவத்துடன் இருக்கிறார்கள்.

இப்படித்தான் மன்னன் வீராங்கன் ஒரு கவிஞரைத் தன் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று நினைத்துத் தோல்வியுற்றான்.


 சிந்தூரபுரி ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த வீராங்கன் கவிதைகளை மிகவும் ரசிப்பவன். ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று தன் சபையில் நாடெங்கும் உள்ள கவிஞர்களை வரவழைத்துக் கவிதை பாடச் சொல்லி கேட்டு ரசித்து வந்தான். நல்ல கவிதைகளை இயற்றுபவர்களுக்கு பரிசுகளும் வழங்குவதுண்டு. பரிசுக்குரிய கவிதைகளைத் தேர்ந்தெடுக்க தன் ஆஸ்தானக் கவிஞர்களையும் அருகே அமர்த்திக் கொண்டு அவர்களுடைய கருத்தைக் கேட்டு அதன்படி பரிசளித்து வந்தான். சிறந்த கவிஞர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பரிசுகள் பெற்றால், தங்கள் பதவிக்கும், புகழுக்கும் பங்கம் விளையுமே என்ற பயத்தினால் ஆஸ்தானக் கவிஞர்கள் உண்மையான திறமைசாலிகளைப் பரிந்துரைப்பதில்லை.

ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்தானக் கவிஞர்கள் தேர்வு செய்யும் கவிதைகள் மன்னனுக்குத் திருப்தியை அளிக்கவில்லை. அதைப்பற்றி முதல் மந்திரியிடம் உரையாடியபோது, அவரும், "பிரபு, தாங்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெறவே பலரும் கவிஞர்கள் என்ற பெயரில் வருகின்றனர்" என்றார்.

வழக்கப்படி அந்த ஆண்டும் கவிதைப் போட்டியின் முடிவுகளில் திருப்தியடையாத மன்னன் தற்செயலாக தனது ராணியிடம் அதைப்பற்றிக் குறிப்பிட்டான். "வரவர நாட்டில் கவிதைகள் இயற்றும் திறமை குறைந்து கொண்டே வருகிறது. நல்ல கவிஞர்களே தற்சமயம் யாருமில்லை" என்றான்.

அதைக்கேட்ட ராணி, "அப்படி நினைக்க வேண்டாம். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூரியன் உதிக்கிறான். அவனுடைய ஒளி இதுவரை குறைந்ததில்லை. அதுபோல் சிறந்த கவிஞர்கள் எந்தக் காலத்திலும் உள்ளனர். இப்போதும் உள்ளனர். ஆனால் அவர்களை நம்மால் அறிய முடியவில்லை" என்றாள். அவள் சொல்வதைக் கேட்ட மன்னன் ஆச்சரியத்துடன், "ராணி,  நீ எப்போது இவ்வளவு அழகான உவமைகளுடன் பேசக் கற்றுக் கொண்டாய்? என்றான். ராணி வெட்கத்துடன், "பிரபு, அந்த பெருமைக்குரியவள் நான்இல்லை. ஏனெனில் இந்த வார்த்தைகளை நம் சமையல்காரி நீலா சொல்லக் கேட்டேன்" என்றாள்.


 மன்னனின் ஆச்சரியம் இன்னும் அதிகரித்தது. "ராணி, என்னால் நம்பவே முடியவில்லையே! சமையற்காரி நீலா எப்போது இவ்வளவு அழகான கவிதைநயம் பொருந்திய வார்த்தைகளைக் கற்றுக் கொண்டாள்?" "பிரபு, நாளுக்கு
நாள் என் அழகு குறைவது போல் தெரிகிறது என்று நீலாவிடம் சொன்னேன். அதற்கு அவள் பதில் கூற மேன்மேலும் பேசிக் கொண்டே செல்கையில், அவளுடைய கவிதை நயம் பொருந்திய வார்த்தைகளை கேட்க நேரிட்டது. அவளையே நேரில் அழைக்கிறேன்" என்றாள்.

சமையற்காரி நீலா மன்னன் முன் வந்தாள். மன்னனுடைய பாராட்டுகளைக் கேட்ட நீலா வெட்கித் தலைகுனிந்து "மகாராஜா, சேற்றில் செந்தாமரை மலர்ந்தாலும் சேற்றுக்கு அது சொந்தமாகாது. அதேபோல் பிரம்மாவின் ஆசனமாக தாமரை இருந்தாலும் அதால் படைப்பாளியாக ஆக முடியாது. அதுபோல் நான் பேசும் வார்த்தைகள், வேறு ஒருவரிடமிருந்து கற்றவை," என்றாள்.

"அவர் யார்?" என்று மன்னன் கேட்க, நீலா, "மகாராஜா, அவர் ஓர் ஏழைக் கவிஞர். பெயர் கவிமணி. என் வீட்டில்தான் விருந்தாளியாக ஒரு மாதமாகத் தங்கியுள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொண்டதைத் தான் நான் கூறுகிறேன்" என்றாள். "அப்படியா? அப்படிப்பட்ட சிறந்த கவிஞரை நான் உடனே காண வேண்டுமே! அவரை உடனே அரண்மனைக்கு வரச்சொல்" என மன்னன் கட்டளையிட்டான்.

இதை நீலா கவிமணியிடம் கூறியதும் "என் செவிகளால் எப்போது நடக்க முடியுமோ அப்போது வருவேன் என்று கூறு" என்றார். இதை நீலா மன்னனிடம் கூறியதும் மன்னனுக்கு கவிமணி கூறியதன் பொருள் விளங்கியது. தான் வந்து மன்னனை சந்திக்க முடியாது என்றும், மன்னன்தான் அவரை நாடிச் செல்லவேண்டும் என்றும் தன் குறிப்பால் உணர்த்துகிறார் என்று புரிந்து கொண்டான். "சரி நீலா! நான் அவரை எப்போது தனியே உன் வீட்டில் சந்திக்க முடியும் என்று கேட்டுவா" என்றான் மன்னன்.


 உடனே நீலா அவரை நாடிச் சென்று மன்னன் பார்க்க விரும்புவதைக் கூறினாள். அதற்கு கவிமணி "நான் பகலில் கவிதை எழுதுகிறேன். இரவில் என் கவிதைகளை ரசிப்பவர்களோடு அமர்ந்து உரையாடுகிறேன். ஆகவே என் ரசிகராக என்னை சந்திக்கலாம்" என்றார்.

 இதை மன்னனிடம் கூறியதும் மன்னனுக்கு கோபம் வந்து விட்டது. "அந்தக் கவிஞர் தன்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்? அவர் என்னை நாளை சபையில் சந்திக்க வேண்டும். இது என்னுடைய கட்டளை" என்றார்.
சற்று நேரத்தில் கவிமணியை சந்தித்து மீண்ட நீலா, "மகாராஜா, அதிகாரத்திற்கு அவர் அடிபணிய மாட்டாராம். தாங்கள் தரும் தண்டனையைப் பற்றி அவருக்குக் கவலை இல்லையாம்" என்றாள்.

இப்படிப்பட்ட ஒரு பதிலை சற்றும் எதிர்பாராத மன்னன் சில கணங்கள் திகைத்து நின்றான். ஆனாலும் அப்படிப்பட்ட கவிஞனை சந்தித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்றிரவு யாரிடமும் சொல்லாமல் மாறு வேடமணிந்து மன்னன் நீலாவின் வீட்டிற்குச் சென்றான். அங்கே அந்த ஏழைக்கவிஞன் கவிமணி தனது ரசிகர்கள் புடைசூழ அமர்ந்து தன் கவிதைகளை அவர்களுக்குப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

 மன்னன் கவிமணியின் கவிதைகளை உன்னிப்பாகக் கேட்டான். அவ்வளவு சிறந்த கவிதைகளை மன்னன் அதுவரை கேட்டதேயில்லை. கவிமணியின் கவிதைகளை வெகுவாக ரசித்த மன்னன், இறுதியில் கவிமணியிடம் சென்று "கவிமணியே! நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதில் சந்தேகமேயில்லை. நீங்கள் இந்த நாட்டு மன்னன் நடத்தும் கவிதைப் போட்டியில் ஏன் இதுவரை கலந்து கொள்ளவேயில்லை?" என்று மன்னன் கேட்டான்.

அதற்கு கவிமணி, "மன்னன் தரும் பரிசுக்காக என் புலமையை விற்க எனக்கு அவசியம் இல்லை. மன்னர் உண்மையான ரசிகராயிருந்தால், அவரே என்னைத் தேடி வரட்டும்" என்று மிடுக்குடன் பதிலளித்தான். உடனே, மன்னன் "அவரால் உன்னை எப்படித் தேடி வரமுடியும்? அவருக்கு ஏராளமான அலுவல்கள் உள்ளன. அவருக்கு நேரமே கிடையாதே!" என்றான். "நேரமே இல்லாதவருக்கு என் கவிதைகள் தேவையில்லை" என்றான்.


 இவ்வாறு மிடுக்குடனும், கர்வத்துடனும் கவிமணி பதிலளித்த போதிலும் மன்னனுக்கு ஏனோ அவன் மீது கோபமே உண்டாகவில்லை. மறுவார்த்தை பேசாமல் அரண்மனை திரும்பிய மன்னனுடைய மனம் அலைபாய்ந்தது. ஏற்கெனவே பல நாட்களாகத் தன் ஆஸ்தானக் கவிஞர்களின் பரிந்துரைகள் மீது கொண்டிருந்த சந்தேகம் வலுத்தது. மறுநாள் சபை கூடியதும் மன்னன் தன் முதல் மந்திரியையும் ஆஸ்தானக் கவிஞர்களையும் கவிமணி தங்கிஇருக்கும் நீலாவின் வீட்டுக்கு அன்றிரவு மாறுவேடத்தில் செல்லும்படியும் அவனுடைய கவிதைகளைக் கேட்டபிறகு அவர்களுடைய கருத்துகளை தன்னிடம் கூறும்படியாகவும் கட்டளையிட்டான்.

அதன்படியே அனைவரும் அன்றிரவு கவிமணியை நாடி மாறு வேடத்தில் சென்றனர்.

மறுநாள் சபை கூடியது. முதல் மந்திரி மன்னனிடம், "அரசே! நீங்கள் கூறியபடி நேற்றிரவு நாங்கள் கவிமணியின் கவிதைகளைக் கேட்டோம். ஆஸ்தானக் கவிஞர்களின் கருத்துப்படி அவனுடைய கவிதைகள் பொருள் அற்றவை. கவிதை நயம், எதுகை, மோனை, கருத்து எதுவுமே சரியாக இல்லை" என்றார். மன்ன னுடைய சந்தேகம் உறுதியானது.

"நிறுத்துங்கள் உங்கள் அபத்தமான பேச்சை!" என்று சீறினான். "நீங்கள் சென்றதற்கு முதல் நாளிரவு நானே கவிமணியிடம் சென்றிருந்தேன். என்ன அற்புதமான கவிதைகள் அவனுடையவை! ஆஸ்தானக் கவிஞர்களே, நீங்கள் எவ்வளவு மோசமான எண்ணமுடையவர்கள் சிறந்த கவிஞர்கள் பலரை முளையிலே அழித்து விட்டீர்கள்! சென்று விடுங்கள் இங்கிருந்து!" என்று உரத்த குரலில் கூறினான். இந்த செய்தி நாடெங்கும் பரவிவிட்டது.

அன்றிரவு மன்னன் அந்தப் புரத்திலிருந்த போது நீலா "அரசே, கவிமணி உங்களை சந்திக்க சம்மதித்து விட்டார். நாளையே உங்களை இங்கே தேடி வருவார்" என்றாள். "வேண்டாம் நீலா, அந்த மகா கவிஞன் என்னை நாடி வர வேண்டாம். நானே இன்றிரவு அவரை நாடிச் சென்று அழைக்கிறேன். அதுதான் மரியாதை" என்றான்.


இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! இந்த கவிமணியின் அகம்பாவத்தைப் பார்த்தாயா? ஒரு நாட்டு மன்னனையே எவ்வாறு அலைக்கழித்திருக்கிறான்? ஒரு ஏழைக் கவிஞன் மன்னனை நாடி வருவதே முறை. அதை விடுத்து கவிமணி மன்னனை நாடி வருகிறேன் என்று கூறியபோது மன்னன் ஏன் அதை மறுத்து தானே அவனிடம் சென்று அழைப்பதாகக் கூறினான்?

இந்த என் கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்றது.

 அதற்கு விக்கிரமன், "கவிமணி அகம்பாவம் கொண்டவனல்ல. உண்மையான  படைப்பாளிகள்  பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள். கவிமணி ஓர் அற்புதமான கவிஞன். அவனுக்குத் தன் புலமையின் மீது கர்வம் இருந்தது உண்மையாயினும் அது தவறல்ல. தவிர ஆஸ்தானக் கவிஞர்களின் சுயநல எண்ணங்களை நன்கறிந்திருந்தான்.

ஆனால் அரண்மனையில் மன்னன் ஆஸ்தானக் கவிஞர்களைக் கோபத்துடன் கடிந்து கொண்ட செய்தி வெளியானதும் அவனுக்கு எல்லா உண்மைகளும் புரிந்தன. தான் கவிமணியெனில், மன்னன் ஒரு ரசிகமணி என்று தெரிந்தது.
ஆகவேதான் இறுதியில் தானே மன்னனை நாடி வர ஒப்புக் கொண்டான். அதேபோல் கவிமணியின் கவிதைகளை வெகுவாக ரசித்த மன்னன், அவனது சுய அபிமானத்தோடு கூடிய மிடுக்கான வார்த்தைகளைக் கேட்டு அவன் மேல் பெருமதிப்பு கொண்டான்.  ஆகவே மன்னன் கவிமணியை நாடிச் சென்றான்" என்று பதிலளித்தான்.

விக்கிரமனது சரியான பதிலால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்து வந்த உடலுடன் இருந்த வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 
வேதாளம் வரும் ..

0 comments:

Post a Comment