தளபதியின் கதை

 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலை வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்தவாறு "மன்னா, உன்னுடைய நன்மைக்காக நீ இவ்வாறு செய்வதானால், அது சரியென்று நான் ஒப்புக் கொள்வேன். ஆனால் நீ வேறு யாருடைய நன்மைக்காகவோ, உன்னை வீணாக வருத்திக் கொண்டிருக்கிறாய்.

 உன் முயற்சிகளின் பலனை நீ அடைய வேண்டுமானால் தளபதி என்பவனைப் போல் நீயும் செயற்படுவாய். அவனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்" எனக் கதை சொல்லலாயிற்று.

 லட்சுமிபுரம் என்ற கிராமத்துக்கு அருகில் ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் மோகினிப்பிசாசுகள் பச்சை வண்ணச் சேலை உடுத்தி வசிப்பதாக கிராமத்தினர் நம்பினர். லட்சுமிபுரத்திற்கு அருகில் காமாட்சிபுரம் என்ற கிராமத்தில்  வசித்து வந்த கஜபதி என்ற வாலிபன் எப்போதும் பணம் வைத்து சூதாடித் தன் பொழுதைக் கழித்து வந்தான். சூதாட்டத்தில் தன் நிலபுலன்கள் அனைத்தையும் இழந்து கடனாளியான கஜபதி ஊரை விட்டு தலைமறைவாக ஓடி வந்து லட்சுமிபுரத்தில் தஞ்சம் புகுந்தான். யாரோ ஒரு கிராமவாசி லட்சுமிபுரத்துக் காட்டில் புதையல் இருக்கிறது என்று கூறியதை நம்பி, தன்னந்தனியாக கஜபதி ஒருநாள் காட்டுக்குள் சென்று விட்டான். அவன் தேடிய புதையல் எங்கும் கிடைக்காமல் ஒரு மரத்தடியில் படுத்து உறங்கி விட்டான்.

கொஞ்ச நேரத்தில் ஒரு மனிதன் கூக்குரலிடுவதைக் கேட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்ட கஜபதி, சுற்றும் முற்றும் பார்த்ததில் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு வீட்டிலிருந்து கூக்குரல் வந்ததை அறிந்து, அங்கு சென்றான். ஒரு வாலிபன் தரையில் மயக்கமாக அங்கு விழுந்து கிடக்க, பக்கத்தில் பச்சை சேலை உடுத்திய அழகான இளம் பெண் அமர்ந்திருக்கக் கண்டான்.
கஜபதி அவளிடம் என்ன நடந்ததெனக் கேட்டான். அதற்கு அவள், "இந்த வாலிபன் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டு தண்ணீர் கேட்டான். அவனை உள்ளே அழைத்தேன். உள்ளே வந்து என்னைக் கண்டதும் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டான்" என்றாள்.

அவளுடைய கட்டைக்குரலைக் கேட்டதும், "உன் குரலைக் கேட்டால் யாருக்குத்தான் மயக்கம் வராது!" என்றான். "ஆமாம், நீ சரியாகத்தான் சொல்கிறாய். இவன் மயக்கத்தை தெளியவை. நான் உங்கள் இருவருக்கும் சாப்பிட ஏதாவது கொண்டு வருகிறேன்" என்று உள்ளே சென்றாள்.

பிறகு கஜபதி அந்த வாலிபனின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அவனும் கண் விழித்தான். கஜபதி அவனிடம், "போயும் போயும் இங்குள்ள அழகான பெண்ணைக் கண்டா மயக்கம் ஆனாய்?" என்று கேட்க,  அந்த வாலிபன், "அவள் பெண்இல்லை. அவள் ஒரு மோகினிப்பிசாசு!" என்றான். தொடர்ந்து, "என் பெயர் சலபதி. நான் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவன். இந்தக் காட்டில் மோகினிப்பிசாசுகள் இருப்பதாக வதந்தி உண்டு!" என்றான்.


 "அது தெரிந்திருந்தும் நீ ஏன் இங்கே வந்தாய்?" என்று கஜபதி கேட்டான். அதற்கு சலபதி, "என் தாய் நோய் வாய்ப்பட்டிருக்கிறாள். கிராமத்து வைத்தியர் கறுப்பு மாம்பழங்களை உண்டால் சரியாகிவிடும் என்று கூறினார். கருப்பு மாம்பழம் சிவகாமிபுரத்தில்தான் கிடைக்கும். ஆகையால் நான் அங்கு சென்று கொண்டிருந்தேன். பகல் வேளைக்குள் இந்தக் காட்டைத் தாண்டிவிட வேண்டுமென்று விரைவாக நடந்து வந்தேன். விரைவாக நடந்ததால் தாகம் உண்டாக, இங்கு யாரோ நம்மைப் போல் மனிதர்கள் தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வெளியே நின்று தண்ணீர் கேட்டேன்.

"உள்ளே வா!" என்ற ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு உள்ளே நுழைந்ததும், எதை நினைத்து பயந்தேனோ, அந்த மோகினிப் பிசாசே பச்சை வண்ணச் சேலையில் இங்கு இருந்தது. அதனால்தான் பயத்தில் மயக்கமாகி விட்டேன்" என்று நீண்ட பிரசங்கம் செய்தான்.

இதைக் கேட்ட கஜபதி, தாங்கள் இருப்பது மோகினிப்பிசாசின் வீடு என்று அறிந்ததும் பயத்தில் நடுநடுங்கினான். அந்த சமயம் அந்த இளம் பெண் இரு தட்டுகளில் உணவு ஏந்தி அவர்களை நோக்கி வந்தாள். அவளைக் கண்டதும் இருவரும் பயத்தினால் வாய் குளர எழுந்து நின்றனர். "அடடா! என்னைக் கண்டதும் ஏன் இப்படி பயந்து நடுங்குகிறீர்கள்?" என்று அவள் கேட்டதுமே, இருவரும் ‘ஓ’ என அலறியபடி மயக்கமானார்கள்.

அவர்கள் அலறிய அலறல் அவ்வழியே சென்று கொண்டிருந்த தளபதி என்ற வாலிபனின் காதில் விழுந்தது. அவன் சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவன். அவன் லட்சுமிபுரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். தளபதி தன் கிராமத்தில் வசித்து வந்த உஷா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.


 ஆனால் உஷாவின் பெற்றோர் தளபதிக்குத் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு அவன் ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தனர்.

அதனால் மனமுடைந்து போன தளபதி தனது குடும்ப சோதிடரை நாடிச் சென்று, தான் உஷாவைத் திருமணம் புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டா என்று கேட்டான். தளபதியின் ஜாதகத்தை பார்த்த சோதிடர், "உன்னால் உஷாவைத் திருமணம் செய்து கொள்ள முடியும். நீ லட்சுமிபுரத்துக்கு சென்று அங்குள்ள ராமர் கோயிலில் பூஜை செய்து பிரார்த்தனை செய்வாயாக! உனக்கு பயணத்தில் உடல் நலம் குன்றினால், கறுப்பு மாம்பழம் ஒன்றை சாப்பிட்டுக் கொள். கூடவே சில மாம்பழங்களையும் எடுத்துச் செல். இன்னொரு விஷயம் நினைவிருக்கட்டும் நீ செல்லும் காட்டுப் பாதையில் மோகினிப்பிசாசுகள் உலவுவதாக வதந்தி உள்ளது. அத்தகைய ஆபத்துகளை எதிர்க் கொள்ள முடியுமா என்று யோசி!" என்றார்.

அதற்கு தளபதி, "எனக்கு சோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உண்டு. பேய் பிசாசுகளில் நம்பிக்கை இல்லை" என்றான். பிறகு தனது தோட்டத்திலிருந்து சில கறுப்பு மாம்பழங்களை எடுத்துக் கொண்டு தளபதி சோதிடரின் அறிவுரையின் படி லட்சுமிபுரத்தை நோக்கிக் கிளம்பினான். அவன் சென்று கொண்டிருந்தபோதுதான், இருவரின் அலறலைக் கேட்டான்.

அவன் அங்கு சென்று மயங்கி கிடந்த சலபதியையும், ஜபதியையும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்த இளம்பெண்ணையும் கண்டான். அவளிடம், "இங்கே என்ன நடந்தது?" என்று கேட்டான்.

அவள், "நான் ஏதோ பிசாசு என்று நினைத்து பயந்துபோய் இந்த இளைஞர்கள் இருவரும் மயக்கம்அடைந்து விட்டனர்" என்றாள். "உலகில் பேய், பிசாசுகள் என்று ஒன்றுமே கிடையாது. நீ எங்களைப் போல் ஒரு மனிதப் பிறவிதான்! உனக்கு உடலில் ஏதோ கோளாறுகள் இருப்பதால், உன் குரல் சரியாக இல்லை. என்னிடமுள்ள கறுப்பு மாம்பழம் ஒன்றை சாப்பிடு. எல்லாம் சரியாகி விடும்" என்றான் தளபதி. உடனே கலவரமடைந்த அவள், "நான் சரியாகத்தான் இருக்கிறேன். கறுப்பு மாம்பழம் எதுவும் எனக்கு வேண்டாம்" என்று பரபரத்தாள்.


 "அதுதான் முடியாது!" என்ற தளபதி, "நீ இந்த மாம்பழத்தைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். தளபதி அவள் சொல்வதைக் கேட்காமல் தன் பையிலிருந்து பழத்தை எடுத்தான் ஆனால் அந்தப் பெண் வெளியே ஓடி மறைந்து விட்டாள். அந்த வீட்டுக்குள் சென்று ஆராய்ந்த தளபதியின் கண்களில் பொற்காசுகள் தென்பட்டன. மீண்டும் திரும்பி வந்த தளபதி, மயக்கமாகக் கிடந்த இருவரையும் அணுகி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினான். பிறகு மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

தளபதியிடம் தான் தேடி வந்த கறுப்பு மாம்பழம் இருக்கிறது என்று அறிந்தவுடன், சலபதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். பிறகு சலபதியும் கஜபதியும் மோகினிப்பிசாசைக் கண்டு பயப்படாத தளபதியின் தைரியத்தை மிகவும் பாராட்டினர்.

அதற்கு தளபதி, "நீங்கள் நினைத்தது போல் அவள் ஒன்றும் பிசாசு இல்லை" என்றான். "அப்படியானால் அவள் ஏன் இந்தக் காட்டில் தனிமையில் இருக்க வேண்டும்?" என்று கஜபதி கேட்டான். "அவந்திபுரத்து மன்னன் போரில் தோற்றவுடன் அவனது வாரிசுகள் காட்டில் வாழ்ந்து வந்ததாக கேள்விப் பட்டிருக்கிறேன். அவர்கள் காட்டில் ஒளிந்திருக்கும் செய்தி வெளியில் தெரிய விரும்பவில்லை. இவள் அவந்திபுர மன்னனின் மகளாகக்
கூட இருக்கலாம்.

மக்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு மன்னன் மோகினிப்பிசாசு என்ற வதந்தியை உண்டாக்கி இருக்கலாம்" என்றான் தளபதி.
"எங்கள் இருவரின் நம்பிக்கையில்இருந்து உன் நம்பிக்கை வேறுபடுகிறது. இப்பொழுது என்ன செய்யலாம்?" என்று கஜபதியும், சலபதியும் கேட்டனர். தளபதி கூறியவாறு மூவரும் ஆளுக்கொரு மூட்டையில் தங்க நாணயங்களை அள்ளிக் கொண்டனர். அந்த ரகசியத்தை யாரிடமும் கூறவேண்டாம் என்று முடிவு செய்தனர். பிறகு கஜபதி தனது கிராமத்திற்குச் சென்றுவிட, தளபதியும், சலபதியும் லட்சுமிபுரம் சென்றனர்.


கிராமத்து மக்கள் காட்டிலிருந்து திரும்பிய அவர்களிடம் மோகினிப் பிசாசைப் பற்றிக் கேட்க, தளபதி முன் வந்து, "அது ஒரு கொடிய மோகினிப் பிசாசு. இனி சிவகாமிபுரத்திற்கு வேறு வழியாகத்தான் செல்வேன்" என்றான். இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, "மன்னா! இந்த தளபதிக்கு அந்தப் பெண்ணைப் பற்றிய உண்மை தெரிந்தும், கிராமத்து மக்களிடம் எப்படிக் கூசாமல் பொய் சொன்னான் என்று பார்த்தாயா? இன்னொரு விஷயமும் கவனித்தாயா? சலபதியும் கஜபதியும் அந்தப் பெண்ணைக் கண்டதுமே பயந்துபோய் மயக்கமாகிவிட தளபதி மட்டும் எப்படி பயப்படாமல் இருந்தான்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும், ஜாக்கிரதை!" என்றது.

உடனே விக்கிரமன், "அவந்திபுர மன்னனின் வாரிசு அந்தப் பெண் என்றும், எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக அந்தக் காட்டில் அவள் ஒளிந்து வாழ்கிறாள் என்ற உண்மையும் தளபதிக்குத் தெரியும். மக்கள் யாரும் அவளைப் பற்றி அறிந்தால், அது எதிரிகளின் செவிகளுக்கு எட்டி அவளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தளபதி அவ்வாறு பொய் கூறினான்.
தளபதிக்கு இயற்கையாகவே பேய், பிசாசுகளில் நம்பிக்கை கிடையாது. தவிர அவள் அவந்திபுரத்து ராஜகுமாரி என்றும், அவள் நிச்சயமாகப் பிசாசு இல்லை என்றும் அவன் உணர்ந்தான்.

அதனால்தான் அவன் அவளைக் கண்டு பயப்படவில்லை" என்றான். விக்கிரமனது இந்த சரியான பதிலால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மேல் ஏறிக் கொண்டது.

  

வேதாளம் வரும் ..

0 comments:

Post a Comment