யுத்த காண்டம் - 1

 
இராமர் அனுமார் கூறியதை எல்லாம் கேட்டு ஆனந்தம் அடைந்தார். அவரும் “ஆகா! இப்படிப்பட்ட வேலையை வேறு யாரால் செய்ய முடியும்? கடலைக் கடப்பது என்பது சாமானியமானதா? அப்படிக் கடந்து இலங்கைக்குள் நுழைந்து சீதையைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்திருக்கிறார். இலங்கையை நாசப்படுத்தி இராவணனது கட்டு திட்டங்களை எல்லாம் தவிடு பொடியாகச் செய்து விட்டார் அல்லவா! இவர் எனக்கும் சீதைக்கும் மறுவாழ்வு அளித்தவராவார்” எனக்கூறி அனுமாரை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார்.

சற்று நேரத்திற்குப் பின்னர் அவர் சுக்ரீவனைப் பார்த்து, “சீதை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தாகிவிட்டது. இனி நாம் அங்கே எப்படிப் போவது என்பது ஒரு பெருத்த பிரச்சினையாகி விட்டதே!” எனக் கவலலையோடு கூறலானார்.
அப்போது சுக்ரீவன் “நீங்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம். இலங்கைக்குப் போக சமுத்திரத்தில் பெரிய பாலம் கட்டுவோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தால் போயிற்று. அதை மட்டும் செய்து முடித்து விட்டால் இராவணனின் வாழ் நாள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனவே அதற்கான செயலில் ஈடுபடலாம்” என உற்சாக மொழிகளைக் கூறினான். இராமரும் “ஆமாம், இலங்கையை நாம் எப்படியும் அடைந்தே தீரவேண்டும். 

 

 இராமரும் ஆமாம் , இலங்கையை நாம் எப்படியும் அடைந்தே தீரவேண்டும். அது பாலம் கட்டிப் போனாலும் சரி , அல்லது தவம் செய்து போனாலும் சரி. எப்படியும் எடுத்த வேலையை மனம் தளராமல் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

பின்னர் அனுமாரிடம் இலங்கைக் கோட்டையின் அமைப்பு எப்படி ? இராவணனின் படை பலம் எவ்வளவு ? பாதுகாப்பு அமைப்பு எவ்விதம் உள்ளது ?” என்று பல கேள்விகளையும் அவர் கேட்டார். அனுமாரும் இலங்கைவாசிகளைப் பார்த்தால் அவர்கள் எவ்வித குறையும் இன்றி வாழ்வதாகவே தெரிகிறது. இலங்கை மிகப் பெரிய பட்டணம். அதில் நால்வகைப் படைகள் தக்க முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. அதற்குள் போக நான்கு கோட்டை வாசல்கள் உண்டு. அங்கு எதிரிகளை அழிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோட்டையைச் சுற்றிலும் ஆழமான அகழி உள்ளது. அதனைத் தாண்டிச் செல்வது சுலபமல்ல. எதிரிகள் தம் படைகளோடு திடுதிப்பென அதற்குள் சென்று விடமுடியாது.

அகழிகளைக் கடக்க மரப்பாலங்களை அவ்வப்போது உயர்த்தி தாழ்த்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இலங்கை நன்கு பாதுகாப்புடன் உள்ளது என்பதை அறியலாம். அது மட்டுமல்ல இராவணனிடம் எப்போதும் போர் புரிய படைகள் தயாராகவே உள்ளன.

போருக்கென படை தயாரிக்க வேண்டியது இல்லை. இதெல்லாம் போக இலங்கையைப் பாதுகாக்க சுற்றிலும் சமுத்திரமும் ஒருபுறம் திரிகூட மலையும் உள்ளதால் அதனை அடைவது சிரமமே. இவ்வளவும் கடந்தால் அடர்ந்த காடுகள். இவற்றைத் தாண்டினால் கோட்டையைச் சுற்றிலும் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள். பயங்கரமான அரக்கர்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். நான் பல அரக்கர்களைக் கொன்று வந்திருக்கிறேன். பல இடங்களை நாசம் செய்து விட்டேன்.

ஆதலால் இப்போது இலங்கைக்குள் நுழைவது சற்று சுலபமாக இருக்கலாம். நம்மிடம் பல இணையற்ற வீரர்கள் இருக்கிறார்களே!  அங்கதன் , துவிவீதன் , மைந்தன் , ஜாம்பவந்தன் , பனகன் , நளன் , நீலன் முதலிய சேனைத் தலைவர்கள் உள்ளனர். இவர்களால் இலங்கையில் உள்ள அரக்கர்களோடு போரிடமுடியும். எனவே ஒரு நல்ல வேளை பார்த்து இலங்கை மீது படை எடுத்துக் செல்ல நீங்கள் முடிவு செய்துவிடுங்கள் என்றார்.

 அதையெல்லாம் இராமர் நன்கு கேட்டு விட்டு சுக்ரீவனிடம் அனுமார் கூறியபடி இலங்கை மீது படை எடுத்துச் செல்வோம். இன்றே இப்போதே கிளம்பலாம். இப்போது உச்சிவேளை இதை அபிஜித்து என்ற நல்ல முகூர்த்த காலம் எனக்கூறுவர். இந்த வேளையில் ஆரம்பிக்கும் வேலை வெற்றிகரமாக முடியும். மேலும் இன்று பங்குனி உத்திரம். என் பிறப்பு நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு அனுகூலமானது. மேலும் பல நல்ல அறிகுறிகள் சேர்ந்து இருப்பதால் இந்த முகூர்த்த வேளையிலேயே நாம் கிளம்பலாம் என்றார்.

உடனே படைத்தலைவனான நீலன் இராமரின் ஆலோசனைப் படி படையை அமைக்கலானான். படைமுன் செல்லும் வானர வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். படையின் இருபுறமும் செல்லும் வானர வீரர்களையும் குறிப்பிட்டான். பின்புறமாகச் செல்லும் படை வீரர்களையும் நியமித்தான். உணவுப் பொருள்களைச் சேகரிக்க வானரங்களையும் செல்லும் வழியைக் காட்ட பல வானரங்களையும் நியமித்தான். இப்படியாக அவன் தக்க முன்னேற்பாடுகளை எல்லாம் செய்து விட்டான்.

எல்லாம் செய்து முடித்தபிறகு சுக்ரீவன் இனி யாவரும் கிளம்புங்கள் எனக்கட்டளை இடவே வானரங்கள் உற்சாகத்தோடு கோஷங்கள் போட்டவாறே பல இடங்களில் இருந்தும் கிளம்பி வந்தன. ஒரு பெருத்த கடலே தென் திசையை நோக்கிச் செல்வதுபோல இருந்தது. அனுமார் இராமரைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டார். இலட்சுமணனை அங்கதன் தூக்கிக் கொண்டான்.

வானரங்கள் சிரித்துக் கொண்டும் குதித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் உற்சாகம் கரை புரண்டு ஓடிச் செல்லலாயினர். ரிஷபன் , நீலன் , குமுதன் ஆகியோர் முன் நின்று வழி காட்ட அந்தப் பெரிய வானரசேனை இலங்கையை நோக்கி செல்லலாயிற்று. வெகு சீக்கிரத்திலேயே யாவரும் சமுத்திரக் கரையைச் சென்று அடைந்தனர்.

இராமரும் , இலட்சமணனும் சுக்ரீவனுமாக மகேந்திர மலையின் மீது ஏறிச் சுற்றிலும் பார்த்தனர். அங்கிருந்து கடலைப் பார்த்துவிட்டு அவர்கள் கீழே இறங்கி வந்தனர். கடற்கரை அருகே போய் கடலையும் நன்கு கவனித்தனர்.
அதன் பிறகு இராமர் சுக்ரீவனிடம் இனி நாம் கடலைக் கடக்க வேண்டியதுதான். வேறு நிலப்பரப்பு ஒன்றும் இல்லை. நாம் யாவரும் இங்கேயே தங்கி அதற்கான வேலையைச் செய்வோம். யாரும் இங்கு இருந்து வெகு தூரம் போகவேண்டாம். ஒரு வேளை எதிரிகளுக்கு நம் நடமாட்டம் தெரிந்து நம்மைத் தாக்க வந்தால் அவர்களை எதிர்க்க எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும் என்றார்.

சுக்ரீவன் அந்த வானர சேனையை மூன்று பகுதிகளாகப் பிரித்தான். யாவரும் கோசமிட்டுக்கொண்டு நின்றனர். கடலின் கொந்தளிப்பால் ஏற்பட்ட சத்தம் கூட வானரங்கள் போட்ட கூச்சலில் யாருக்கும் கேட்காமல் போயிற்று. யாவரும் அந்த மாபெரும் கடலைப் பார்த்து நின்றனர். அதனை எப்படிக் கடப்பது என்ற மலைப்பு தோன்றியது.
நீலன் முறைப்படி சேனைத் தலைவன் ஆனான். சேனையின் பக்க பலத் தலைவர்களாக மைந்தனும் , துவிவீதனும் பொறுப்பேற்றனர்.

 

 இவ்வாறு பல விதமான சேனையின் அமைப்பை ஏற்படுத்தியாகி விட்டன.
இராமர் ஓரிடத்தில் அமர்ந்து சீதையைப் பற்றிய நினைத்துக் கொண்டு இருந்தார். இலட்சுமணனும் அவரருகே இருந்து அவர் துயரப் பட்டுக் கூறும் வேதனை நிறைந்த மொழிகளை கேட்டுக் கொண்டிருந்தார். மெது மெதுவாக பொழுதும் போய் மாலையாகி விட்டது.

இலட்சுமணன் இராமருக்கு ஆறுதல் மொழிகளைக் கூறித் தேற்றினார். அதன் பின்னர் இராமரும் மாலையில் செய்யும் சந்தியாவந்தனத்தைச் செய்தார். அதன் பிறகு யாவரும் தத்தம் வேலைகளில்   மூழ்கினர்.

இதே சமயம் இலங்கையில் இராவணன் மிகவும் கோபம் கொண்டு அரக்கர்களிடம் வார்த்தைகளை நெருப்புப் பொறி தெறிப்பதுபோல அள்ளி விட்டுக் கொண்டு இருந்தான். இலங்கைக் கோட்டைக்குள் இதுநாள் வரை யாருமே நுழைய முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் , ஒரு குரங்கு உள்ளே புகுந்து வந்து பெரிய பெரிய அரக்கர்களை அழித்ததோடு அல்லாமல் நகருக்கே தீ மூட்டி நாசப்படுத்தி விட்டது. இது எவ்வளவு பெரிய அவமானம். அது மட்டுமா ? கட்டுகாவலோடு சிறைப்படுத்தப்பட்ட சீதையைக் கண்டு அது அவளோடு பேசிவிட்டுப் போய் இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு நாம் பேசாமல் இருந்து இருக்கிறோம். இப்போதோ அந்த இராமர் பல்லாயிரம் வானரங்களோடு இலங்கை மீது படை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறானாம். சுக்ரீவனின் துணையோடும் இலட்சுமணனின் துணையோடும் உள்ள அவன் எப்படியும் கடலைக் கடந்தே விடுவான். இதில் சந்தேகமே இல்லை. கடலை வற்றச் செய்தோ அல்லது வேறு எந்த உபாயத்தாலோ கடலைக் கடந்து இலங்கை மீது படை எடுத்து வந்தால் அந்தப் படை எடுப்பை நாம் எப்படி எதிர்ப்பது ? என்ன செய்வது என்று நீங்கள் கூறுங்கள் என்றான்.

அதுகேட்டு மற்ற அரக்கர்கள் அரக்கர்களின் மாபெரும் மன்னரே! உங்களுக்கு திடீரென ஏன் சந்தேகம் வந்து விட்டது ? நமக்கு பலமில்லையா ? தைரியம் இல்லையா ? ஆட்கள் இல்லையா ? நம் சக்திதான் எவ்வளவு ? பலவிதமான ஆயுதங்கள் , மந்திர தந்திரங்கள் தெரிந்துள்ள அரக்கர்கள் இருக்க நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் ? உங்களது சக்திதான் மூவுலகிற்கும் தெரிந்ததாயிற்றே. உங்களை யாரால் என்ன செய்ய முடியும் ? குபேரனையே வென்று அவனது புஷ்பக விமானத்தை நீங்கள் கொண்டு வரவில்லையா ? மயனே உங்களுக்குத் தன் மகளான மண்டோதரியை விவாகம் செய்து கொடுத்து அடங்கிவிடவில்லையா

வாசுகி , தட்சகன் போன்ற சர்ப்ப மன்னர்கள் உங்களுக்கு அடங்கிக் கிடக்கிறார்களே. மாயா சக்தியில் கை தேர்ந்தவர்களான காலகேயர்கள் உங்களோடு போரிட்டு முடிவில் தோற்றுப் போகவில்லையா ? வருணன் , எமன் போன்ற தேவர்கள் உங்களுக்கு அடங்கிவிடவில்லையா ? இவர்களை எல்லாம்விட அந்த இராமன் சக்தி வாய்ந்தவனா ? பெரிய பெரிய வீரர்களை அடக்கிய உங்களுக்கு இந்த இராமன் கொசுவுக்குச் சமமானவன். மேலும் உங்கள் மகன் இந்திரஜித்து இருக்கிறானே. பல வரங்களைப் பெற்ற அவன் இந்திரனையே வென்றவன். 

இப்படிப்பட்டவனால் இராமரையே ஒரு கட்டுக்கட்டி நிமிடத்தில் சிறைப்பிடித்து விட முடியும். எனவே நீங்கள் சற்றும் கவலைப்படாதீர்கள். அந்த வானரமான அனுமான் செய்த சேஷ்டைகளைப் பற்றி நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள் எனக் கூறினார்கள்.

இது போலவே பிரகஸ்தனும் , துன்முகனும் , வச்சிரதம்ஷ்ட்ரனும் கும்பகர்ணனின் மகன் நிகும்பனும் வீராவேச   மொழிகளைக் கூறினர். வச்சிரகன் என்பவனோ எல்லா வானரங்களையும் விழுங்கி விட்டு வரமுடியுமெனக் கூறினான். இப்படி எல்லாம் ஒவ்வொருவரும் தம் வீரப்பிரதாபங்களை எல்லாம்
எடுத்துக் கூறி வானரப்படைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறலாயினர். இராவணனும் அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தான்.                            

  

0 comments:

Post a Comment

Flag Counter