மகாவிஷ்ணு - 17


கிருஷ்ணரது புகழ் பெருகியது போலவே அவருக்கு எதிரிகளும் அதிகமாயினர். ஜராசந்தன், சிசுபாலன் ஆகியோருடன் பல தீயகுணங்கள் கொண்ட அரசர்களும் சேர்ந்து கொண்டார்கள். பௌண்டிரன் என்ற அரசன் மரத்தால் சங்கு சக்கரங்கள் செய்து மகாவிஷ்ணு வைத்துக் கொண்டிருப்பது போல தான் வைத்துக் கொண்டு தானே விஷ்ணுவின் மறு அவதாரம் என்றும் கிருஷ்ணர் அல்ல என்றும் கூறித் திரியலானான். சிசுபாலனின் தம்பி சால்வன் சௌபகம் என்ற விமானத்தில் ஏறி துவாரகை மீது பறந்து அங்குள்ளவர்களை பீதி அடையச் செய்தான்.

கிழக்கு திசையில் நரகாசுரனின் கை ஓங்கியது. தென் திசையில் மகாபலியின் புதல்வனான பாணாசுரன் சோணபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தன் நாட்டை விரிவு படுத்தலானான். காலயவனனின் தம்பி காலாந்தகனோ தனக்கு எந்த ஜீவராசியாலும் மரணம் இல்லை என்ற வரம் பெற்று யவனர், மிலேச்சர் ஆகியோர் அடங்கிய படை திரட்டி நாடுகளைக் கொள்ளையடித்து ஆலயங்களை அழித்து அட்டூழியங்கள் புரிந்து கிருஷ்ணரைத் தன் கடும் பகைவராகக் கருதி வந்தான்.

இந்த காலாந்தகன் தன் படை எடுப்பில் காந்தார நாட்டு எல்லையில் அழகாகத் தானே தோன்றிய மோகினி விக்கிரகத்தைக் கண்டான். அது தூய சலவைக் கல்லால் ஆனது. கிருஷ்ணர் தான் அதனை விசுவகர்மாவைக் கொண்டு செய்வித்து அதில் மாயையைப் புகுத்தி அங்கு வைத்திருந்தார். இது காலாந்தகனுக்குத் தெரியாது.
 
அந்தச் சிலையைக் கண்டு மயங்கி அச்சிலையருகே போய் அதன் கைகளை எடுத்துத் தன் கழுத்தைச் சுற்றி வைத்துக் கொண்டு அதனை தன் இரு கைகளால் பிடித்துத் தழுவ முயன்றான். அப்போது அது கற்சிலையாகி விட்டதால் அதன் இரு கைகளுக்குள் காலாந்தகனின் தலை இறுகச் சிக்கிக் கொண்டது. சற்று நேரத்தில் அவன் மூச்சுத் திணறி இறந்து விழ குபீரென அவனது உடல் எரிந்து சாம்பலாகியது.

காலாந்தகனின் படையை கிருஷ்ணர் அடித்து விரட்டினார். இதற்குள் காலாந்தகனின் நாட்டை ஒரு எரிமலை வெடித்து நாசமாக்கி அழித்தது. வராகாவதாரம் எடுத்து பூமாதேவியை விஷ்ணு தூக்கிய போது நரகாசுரன் பூமாதேவிக்குப் பிறந்தான். அவன் அசுரர் படையோடு போய் தேவலோகம் சென்று தேவர்களைத் தோற்கடித்தான். தேவமாதாவான அதிதியின் குண்டலங்களை அவன் கவர்ந்து கொண்டான். முனிவர்களையும் சாதுக்களையும் அவன் துன்புறுத்தி பூலோகத்தை நரகலோகமாக்கி விட்டான். பதினாறாயிரம் பெண்களைப் பிடித்து சிறையில் அடைத்தான். தேவர்களும் முனிவர்களும் கிருஷ்ணரிடம் போய் நரகாசுரன் கொடுக்கும் தொல்லைகளைக் கூறி அவனை ஒழிக்குமாறு வேண்டினார்கள். கிருஷ்ணரும் சத்தியபாமாவுடன் நரகாசுரனைக் கொல்லக் கிளம்பினார்.

தன் தாயான பூமாதேவியால் காய முற்றாலே நரகாசுரன் விழுவான் என்ற வரத்தை அவன் பெற்றிருந்தான். சத்தியபாமா பூமாதேவியின் அம்சம். கிருஷ்ணர் சத்தியபாமாவுடன் கருடனை வாகனமாக்கிக் கொண்டு நரகாசுரனின் படைகளைத் தாக்கி அழிக்கலானார். நரகாசுரன் யானை மீது ஏறிப் போர் புரிய வந்தான். அவனோடு கிருஷ்ணர் போரிட்டுச் சற்று இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சத்தியபாமா நரகாசுரனைத் தாக்கி வீழ்த்தினாள்.

அவன் ‘அம்மா’ என அலறியவாறே தன் கதையை எடுத்து கிருஷ்ணர் மீது எறிந்தான். அவர் தன் சக்ராயுதத்தை விட்டு அந்த கதையைப் பொடிப் பொடியாக்கி நரகாசுரனின்  தலையைத் துண்டித்தார். நரகாசுரன் கிருஷ்ணரை விஷ்ணுவின் அவதாரம் என உணர்ந்து அவரைத் துதித்து மக்கள் தன் இறந்த நாளை நரகசதுர்த்தி என்று விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். கிருஷ்ணரும் அவ்வாறே வரம் அளிக்க தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டது.
 
நரகாசுரன் இறந்த பின் அவன் மகன் பகதத்தை மன்னனாக்கிவிட்டு அதிதியின் குண்டலங்களை எடுத்துக் கொண்டு கிருஷ்ணரும் சத்திய பாமாவும் துவாரகைக்குத் திரும்பி வந்தார்கள்.

ஒருநாள் கிருஷ்ணர் ருக்மிணியின் அந்தப்புரத்தில் இருக்கையில் நாரதர் அங்கு வந்து ஒரு பாரிஜாத மலரைக் கொடுத்தார். கிருஷ்ணர் அதனை ருக்மிணிக்குக் கொடுத்தார். இதை அறிந்த சத்தியபாமா மனம் குமுறினாள். அப்போது கிருஷ்ணர் அவரது இல்லத்தில் பாரிஜாத மரத்தையே கொண்டு வந்து வைப்பதாக வாக்களித்தார்.

அதிதியின் குண்டலங்களைக் கொடுக்க கிருஷ்ணர் சத்தியபாமாவுடன் கருடன் மீது அமர்ந்து தேவலோகம் சென்றார். குண்டலங்களை அவர் அதிதியிடம் கொடுத்து விட்டு தேவலோகப் பூங்காவிலுள்ள பாரிஜாத மரத்தைப் பெயர்க்க முயன்றார். இந்திரன் அவரைத் தாக்குவதற்காக தன்னிடமுள்ள வஜ்ராயுதத்தை கிருஷ்ணர் மீது எறிந்தான். அது கருடன் மீது பட அவனது ஒரு இறகுதான் உதிர்ந்தது. அது கண்டு இந்திரன் தன் கர்வத்தை விட்டு ஒழித்து பாரிஜாத மரத்தைக் கிருஷ்ணருக்குக் கொடுத்து அவர் பூவுலகில் உள்ள காலம் வரை அதனை வைத்திருக்கலாம் எனக் கூறினான்.

கிருஷ்ணர் சத்தியபாமாவுடன் பூவுலகிற்கு வர சத்தியபாமாவின் இல்லத்தில் பாரிஜாத மரம் இருந்தது. கிருஷ்ணருக்கு பிரத்யும்னன் முதலிய பல புதல்வர்கள் பிறந்தனர். பிரத்யும்னனின் மகனான அனிருத்தனை பாணாசுரணின் மகளான உஷா கனவில் கண்டு அவனைக் கணவனாக அடைய விரும்பினாள். அவளது தோழி சித்திரலேகா தன் மாய வித்தையால் அனிருத்தனை உஷாவின் அந்தப்புரத்தில் கொண்டு வந்து சேர்த்தாள். 
 
பாணாசுரன் அனிருத்தனை நாக பாசத்தால் கட்டி வைத்தான். தன் பேரனை விடுவித்துப் போக கிருஷ்ணர் பாணாசுரனுடன் போர்புரிந்து அவனைத் தோற்கடித்தார். அவனது ஆயிரம் கைகளில் இரண்டைத்தவிர மற்றவற்றை வெட்டினார். பாணாசுரன் பணிந்தான். அவன் அனிருத்தனை விடுவித்து உஷாவை முறைப்படிக் கல்யாணம் செய்து வைத்து கிருஷ்ணரின் நண்பனானான்.

கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு உறுதுணையாக நின்றார். பலராமருக்கு விருப்பம் இல்லாது போனாலும் தம் தங்கை சுபத்திரையை அர்ஜுனனுக்கு அவர் விவாகம் செய்து வைத்தார். கிருஷ்ணனும் அர்ஜூனனும் காண்டவ வனம் எரிந்த போது அதில் இருந்த ராட்சச சிற்பியான மயனைக் காப்பாற்றினார்கள். மயன் பாண்டவர்களுக்கு அழகான மாளிகையைக் கட்டிக் கொடுப்பதாக வாக்களித்தான். அக்கினிதேவன் அர்ஜூனனுக்கு காண்டீபத்தையும் வற்றாத அம்புராத்தூணியையும் தேவதத்தம் என்ற சங்கையும் கொடுத்தான்.
தருமர் ராஜசூய யாகம் செய்தார். கிருஷ்ணரும் பீமனும் அர்ஜூனனும் ஜராசந்தனின் தலைநகருக்கு திக் விஜயத்தில் சென்றனர். ஜராசந்தன், பகாசுரன், துரியோதனன், கீசகன், பீமன் ஆகிய ஐவரும் சம பலம் கொண்டவர்கள் இவர்களில் ஒருவரால் மற்ற நால்வர் அழிவர் என்ற இரகசியம் கிருஷ்ணருக்குத் தெரியும். பகாசுரன் ஏற்கெனவே பீமனால் கொல்லப்பட்டான். அதனால் மற்றவர்களையும் பீமன்தான் கொன்று விடுவான் எனக் கிருஷ்ணர் நம்பினார்.

அதனால் பீமன்தான் ஜராசந்தனைக் கொல்ல வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். ஜராசந்தனும் பீமனுடன் சண்டைபோட ஒப்புக் கொண்டான். இருவரும் பயங்கரமாகச் சண்டை இட்டனர். முடிவில் கிருஷ்ணரின் சைகைப்படி பீமன் ஜராசந்தனின் உடலை இரண்டாகக் கிழித்துத் தாறுமாறாக எறிந்தான். இப்படியாக ஜராசந்தன் அழிந்தான்.

ராஜசூய யாகத்தில் முதல் தாம்பூலத்தைக் கிருஷ்ணருக்குக் கொடுக்குமாறு பீஷ்மர் கூற சிசுபாலன் கோபம் கொண்டு கிருஷ்ணரை இடையன், திருடன் ஏமாற்றுபவன் என்றெல்லவலாம் கண்டபடித் திட்டினான். 

 
அவரும் நூறு வசவுகள் வரை பொறுத்தார். நூறுக்கு மேல் வசைகள் போகவே கிருஷ்ணர் தம் சக்ராயுதத்தால் அவனது தலையைத் துண்டித்தார். மறு நிமிடமே அந்த உடலிலிருந்து ஒரு  சோதி கிளம்பி கிருஷ்ணருள் ஐக்கியமாகியது. அது ஜெயன்தான். இவ்வாறு ஜெயனும் விஜயனும் மூன்று பிறவிகள் எடுத்து சாப விமோசனம் அடைந்தார்கள்.

துரியோதனன் பாண்டவர்களுக்கு மயன் கட்டிக் கொடுத்த மாளிகையைக் கண்டு வியப்பும் பொறாமையும் கொண்டான். கம்பளம் என நினைத்து அவன் காலை வைக்க அவன் தண்ணீரில் மூழ்கினான். அதைக் கண்டு திரௌபதி சிரிக்கவே அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. சகுனி அவனுக்கு ஆறுதல் கூறி பாண்டவர்களையும் திரௌபதியையும் அவனுக்கு அடிமைகளாக்குவதாக வாக்களித்தான்.

குசேலர் கிருஷ்ணனின் இளம் பிராய நண்பர். கிருஷ்ணரும் பலராமரும் சாந்திபதிடம் குருகுலவாசம் இருந்து கல்வி பயின்றபோது குசேலரும் அவர்களோடு இருந்து கல்வி பயின்றார். படிப்பு முடிந்து அவருக்குத் திருமணமாகியது. ஏழ்மையில் இருந்த அவருக்கு நிறையக் குழந்தைகள் வேறு பிறந்து விட்டன.

குடும்பம் மிகவும் சிரமப்பட்டதால் அவரது மனைவி அவரைக் கிருஷ்ணரிடம் போய் உதவி பெற்று வரும்படி யோசனைகூறி அனுப்பினாள். நண்பனைப் பார்க்கப் போகையில் வெறும் கையுடன் போகக் கூடாது என எண்ணி அவர் தம் மனைவி இடித்துக் கொடுத்த அவலை சிறு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு சென்றார். 

அஷ்ட மகிமைகள் கிருஷ்ணருக்குப் பணிபுரிந்து கொண்டிருக்க ஊஞ்சலில் உப்பரிகையில் ஆடிக் கொண்டிருந்த கிருஷ்ணர் தம் அரண்மனை வாசலில் குசேலர் வருவதைக் கண்டார். உடனே அவர் எழுந்து ஓடோடிப் போய் அவரைக் கட்டித் தழுவிக் கொண்டு உள்ளே அழைத்து வந்து தம் சிம்மாசனத்தின் மீது அவரை உட்கார வைத்தார்.

குசேலருக்குப் பலர் பணிபுரிந்தனர். அதில் மெய் மறந்து இருக்கையில் கிருஷ்ணர் அவர் கொண்டு வந்த அவல் மூட்டையை எடுத்து தானும் உண்டு அங்கிருந்த அஷ்டமகிமை தேவதைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்.
கிருஷ்ணரின் உபசாரத்தில் மெய் மறந்த குசேலர் தாம் வந்த வேலையை மறந்து கிருஷ்ணரிடம் விடைபெற்றுக் கொண்டு தன் ஊருக்குத் திரும்பி வந்தார். 


ஆனால் அங்கு அவரது குடிசை இருந்த இடத்தில் பெரிய மாளிகை இருந்தது. கதவுகளிலும் ஜன்னல்களிலும் தங்கத் தகடுகள் அடிக்கப்பட்டு நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவரது மனைவியின் உடலிலோ நகைகள் நிறைந்திருந்தன. குழந்தைகள் பட்டாடைகள் உடுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது முகத்தில் வாட்டம் இருக்க வில்லை. மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருந்தது.

எல்லாம் கிருஷ்ணரின் கிருபை என்று அவருக்கு அப்போது  தான் தெரிந்தது. தாம் தம் நண்பரான கிருஷ்ணரிடம் எதையும் கேளாமல் இருந்தும் அவராக எல்லாம் கொடுத்ததால் மகிழ்ந்தார். பின்னர் அவர் தம் மனைவி மக்களுடன் சுகவாழ்வு வாழ்ந்து வரலானார். 


0 comments:

Post a Comment

Flag Counter