நாக்கு உளறியதால் நன்மை!


பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் ஒரு கிராமத்தில் ஒரு ஏழைப் பிராம்மணனின் மகனாகப் பிறந்தார். தன் தந்தை படும் துன்பத்தை சோமதத்தர் என்ற பெயரில் பிறந்த போதிசத்வர் கண்டு மனம் பதறினார். தன் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வர தான் நன்கு படித்து அரச சபையில் உத்தியோகம் பெறுவது தான் ஒரே வழி என அவருக்குப் பட்டது. எனவே சோமதத்தர் தன் தந்தையைத் தன் யோசனைக்கு இணங்க வைத்து தட்சசீலம் சென்று தக்க ஆசிரியரிடம் கல்வி பயின்றார்.

சில வருடங்களுக்குப் பிறகு கல்வி முடிந்ததும் சோமதத்தர் காசி நகருக்குப் போய் அங்கு அரச சபையில் நல்ல உத்தியோகமும் பெற்றார்.
அவர் காசிக்குப் போன சில நாள்களுக்குப் பின் சோமதத்தரின் தந்தையின் உழவு மாடுகளில் ஒன்று இறந்து விட்டது. ஒரு எருதைக் கொண்டு எப்படி ஏர் ஓட்டுவது? எனவே காசிக்குப் போய்த் தன் மகனிடம் சொல்லி காசி மன்னனிடம் ஒரு எருதை தானமாகக் கேட்டு வாங்கி வரலாம் என எண்ணி சோமதத்தரின் தந்தை தன் ஊரிலிருந்து காசிக்கு கிளம்பிச் சென்றார்.

அங்கு அவர் சோமதத்தரைக் கண்டு தன் எருதுகளில் ஒன்று இறந்து போனதைக் கூறினார். அப்போது சோமதத்தர் “நீங்கள் இன்னமும் கிராமத்திலிருந்து கொண்டு ஏன் துன்பப்பட வேண்டும்? இங்கேயே அம்மாவையும் அழைத்துக் கொண்டு வந்து விடுங்கள்” என்றார். அதற்கு அவரது தந்தை இணங்காமல் “நான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு வருவதா? என் உடல் அந்த ஊரின் மண்ணில் தான் அழிய வேண்டும், நான் அங்கிருந்து வேறு எங்கும் செல்ல மாட்டேன். எனக்கு ஒரு எருதை நீ கேட்டு வாங்கிக் கொடுத்தால் நான் சுகமாகக் காலம் கழிக்க முடியும். அந்த ஊரில் எனக்கு ஏற்படும் மனநம்மதி வேறு எங்கிருந்தாலும் ஏற்படாது” என்றார்.

சோமதத்தர் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து சில நாள்களே ஆகி இருந்தன. எனவே அவராக ஒரு எருதை வாங்கிக் கொடுக்கலாம் என நினைத்தாலும் அவரிடம் போதிய பணம் இருக்கவில்லை. அப்போது அரசனிடம் தானம் கேட்க அவர் போவதும் சரியல்ல. இரண்டு நாள் வேலை பார்த்து விட்டு உடனேயே பணம் என்று கையை நீட்டுகிறானே, இவன் என்று மன்னன் இளப்பமாக நினைத்தாலும் நினைப்பான்.


எனவே அவர் தன் தந்தையிடம் “நான் அரசரிடம் போய் எனக்கு ஒரு எருது வேண்டும் என்று கேட்டால் அவர் உனக்கு எருது எதற்கு? நீ வேறு யாருக்கோ வாங்கிக் கொடுக்கத்தானே கேட்கிறாய் என்றெல்லாம் கேட்பார். மேலும் உத்தியோகத்தில் இருப்பவன் தானமாக எதையும் கேட்பது சரியல்ல. உள்ள துன்பத்தை விவரமாக நீங்கள் அவரிடம் சொன்னால் கண்டிப்பாகக் கொடுப்பார்” என்றார்.
அப்போது அவரது தந்தை “சோமதத்தா! நானோ கிராமவாசி. வயலில் பாடுபடுவதைத் தவிர வேறெதுவும் தெரியாது. அரசரிடம் எப்படி மரியாதையாகப் பேச வேண்டும் என்பதும் தெரியாதே” என்றார். சோமதத்தனும் “கவலைப்படாதீர்கள். நான் எழுதிக் கொடுக்கும் செய்யுளை மனப்பாடம் செய்து கொண்டு அதனை அவர் முன் ஒப்பியுங்கள். உங்களுக்குக் கண்டிப்பாக அரசர் எருதை தானமாகக் கொடுப்பார்” என்று கூறி சமஸ்கிருதத்தில் ஒரு செய்யுளையும் இயற்றித் தந்தார். செய்யுளிலுள்ள பொருள் வருமாறு ‘அரசே, என்னிடம் இரண்டு எருதுகள் இருந்தன. அவற்றைக் கொண்டு விவசாயம் நடத்தி வந்ததேன். இப்போது அவற்றில் ஒன்று இறந்து விட்டது. எனவே ஒரு எருதை வாங்கிக் கொடுங்கள்’.

அந்தச் செய்யுளை சோமதத்தரின் தந்தை நன்கு மனப்பாடம் செய்து கொண்டு அரச சபைக்குச் சென்றார். அரசனை வணங்கி தாம் மனப்பாடம் செய்து வைத்திருந்த சமஸ்கிருத செய்யுளைக் கூறினார். ஆனால் அதனைக் கூறும் போது ஒரு வார்த்தையைத் தவறுதலாகக் கூறியதால் அதன் பொருள் கடைசியில் ஒரு எருதை வாங்கிக் கொடுங்கள் என்பதற்கு பதிலாக ஒரு எருதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அமைந்து விட்டது.


இப்படி அவர் கூறிய செய்யுளைக் கேட்டதும் சபையில் இருந்தவர்கள் எல்லாரும் பலமாகச் சிரித்தார்கள். அரசனும் “அடேயப்பா! ஒரு எருதை விற்கவா உங்கள் ஊரிலிருந்து வந்து என்னைக் கண்டீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான். அப்போது சோமதத்தரின் தந்தையும் “மகாராஜா! நீங்கள் என்னிடமுள்ள அந்த ஒரு எருதை விலைக்கு வாங்கிக் கொண்டாலும் என் பிரச்னை தீர்ந்தது. உண்மையில் நான் உங்களிடம் ஒரு எருது வாங்கிக் கொடுங்கள் என்றே கேட்க வந்தேன். ஆனால் நாக்குளறி தவறுதலாக ஒரு எருதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான்” எனக் கூறி ஆரம்ப முதல் அதுவரை நிடந்த எல்லாவற்றையும் விவரமாக எடுத்து உரைத்தார்.
அதைக் கேட்ட காசி மன்னனும் “ஆகா! சோமதத்தரின் உயரிய நடத்தைதான் என்னே! தினமும் பல உத்தியோகஸ்தர்கள் என்னிடம் வந்து தமக்கு அது வேண்டும், இது வேண்டும் என நச்சரிக்கிறார்கள். ஆனால் சோமதத்தர் அவ்வாறு செய்யாமல் தன் தந்தையையே என்னிடம் நேரில் கேட்கச் சொல்லி இருக்கிறார்.



உண்மையிலேயே துன்பப்படுபவருக்கு எந்த மன்னன் தான் உதவமாட்டான்? எனவே சோமதத்தரின் தந்தைக்கு ஒரு எருது மட்டும் அல்ல மேலும் மூன்று ஜோடி எருதுகளைக் கொடுக்கிறேன்” எனக் கூறினான். சோமத்தரின் தந்தையிடம் நன்கு அலங்கரிக்கப்பட்ட எருதுகள் கொடுக்கப்பட்டன. அவரும் மன்னனை வாழ்த்தி வணங்கி விடை பெற்றுக் கொண்டு எருதுகளை ஒட்டிக் கொண்டு தம் ஊருக்குச் சென்றார். 


 

0 comments:

Post a Comment

Flag Counter