கண் இல்லாதவர்கள் அதிகமா?

ஒருநாள் பீர்பாலிடம், ‘உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா’ என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர்.
உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ ‘கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்” என்று கூறினார்.

அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.
மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, ‘இது என்ன?’ என்று கேட்டார்.
‘தலைப்பாகை’ என்று கூறினர்.

தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, ‘இது என்ன?’ என்று கேட்டார் மறுபடியும்.

‘மப்ளர்’ (கழுத்துக்குட்டை – சவுக்கம்) என்று கூறினார்கள்.
கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, ‘இது என்ன?’ என்று கேட்டார்.

‘வேஷ்டி’ என்று கூறினார்கள்.

அரசரைப் பார்த்து ‘பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள்.

உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.” என்றார் பீர்பால்

0 comments:

Post a Comment

Flag Counter