குற்றமற்ற நகரம்

 
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்தில்ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அவன் அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்இருந்த வேதாளம், "மன்னா! எந்த லட்சியத்தை நிறைவேற்ற நீ அல்லும்பகலும் பாடுபடுகிறாய் என்று தெரியவில்லை. உன்னைப் போன்ற அறிவாளிகள் சிலர் தங்கள் லட்சியம் நிறைவேறப் பாடுபட்டபின், அந்த லட்சியம் கை கூடி வரும் வேளையில், மனம் குழம்பித் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.
 
மஞ்சுளா என்ற அறிவாளியான பெண் அதுபோல் தகுந்த சந்தர்ப்பத்தில் சரியான முடிவு எடுக்காமல் தவறிய கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!" என்றது. ஜெயமங்கலம் என்ற கிராமத்தில் சங்கரன் என்ற ஒரு வியாபாரி இருந்தார்.
அவருக்கு மஞ்சுளா, கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய மூன்று அழகிய குழந்தைகள் இருந்தனர். தன் மனைவி சுசீலாவுடன் நிம்மதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அவர் வாழ்வில் விதி குறுக்கிட்டது.
 
ஜெயமங்கலத்திற்கு அருகே மணிநகர் என்ற நகரத்தின் நகராதிகாரியான சோமன் சங்கரனுக்கு தூரத்து உறவினர். அவனுக்குக் குழந்தை இல்லாததால், சங்கரனின் பிள்ளைகளில் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ள விரும்பினார். ஆனால் சுசீலாவும், சங்கரனும் அதற்கு இணங்கவில்லை.
 
ஒரு சமயம் மணிநகரில் ராமநவமி உற்சவம் விமரிசையாக நடந்த போது, சோமனின் வீட்டிற்கு சங்கரன் குடும்பத்தினர் விருந்தினர்களாகச் சென்றனர். அவர்களுக்கு சோமன் நன்கு விருந்து உபசாரம் செய்தான். அதன்பின் மறுபடியும் சங்கரனின் பிள்ளைகளில் ஒருவனை தத்துக் கொடுக்கும்படி கெஞ்சினான். சங்கரன் தம்பதியினர் சோமனுடைய வேண்டுகோளைத் திட்டவட்டமாக நிராகரித்தனர். கடுங்கோபம் கொண்ட சோமன், தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி சங்கரன் மீது பொய் குற்றம் சாட்டி, குடும்பத்தோடு அவரை நாடு கடத்தி விட்டான்.
 
காட்டில் தஞ்சம் புகுந்த சங்கரன் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்து குடும்பத்தோடு வசிக்கலானார். குழந்தைகளுக்கு காட்டு வாழ்க்கை பிடிக்கவில்லை. அவர்களிடம் சங்கரன், "மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது போல் நமக்கும் நல்ல காலம் வரும்!" என்று சமாதானம் கூறுவார். ஒன்பது ஆண்டுகள் கழிந்தன. குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டனர். மூத்தப் பெண் மஞ்சுளா திருமண வயதை எட்டினாள். ஒருநாள், மாதங்க ராஜ்யத்து மன்னன் மணிவர்மன் அந்தக் காட்டிற்கு வேட்டையாட வந்தவன் திரும்பிச் செல்லும் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததான்.
அப்போது அவன் மஞ்சுளாவைக் கண்டான். உடனே அவளை நெருங்கி, "அழகிய பெண்ணே! நான் மாதங்க ராஜ்ய மன்னன் மணிவர்மன்! என் மனத்துக்குகந்த மங்கையை பல நாள்களாகத் தேடிக் கொண்டிருந்தேன். என் கற்பனையில் உருவான அழகி நீ தான்! உன்னுடன் இந்தக்கணமே கந்தர்வ விவாகம் செய்து கொள்ளத் துடிக்கிறேன்!" என்றான்.
 
இதைக்கேட்டு நாணத்தால் தலைகுனிந்த மஞ்சுளா, "அதற்கு என் தந்தையிடம் அனுமதி கோருங்கள்! அதோ தெரிகிறதே, அந்த ஆசிரமம் தான் எங்கள் இருப்பிடம்!" என்றாள்.
 
மஞ்சுளாவைப் பின் தொடர்ந்து சென்று ஆசிரமத்தையடைந்த மணிவர்மன் சங்கரனிடம் தன் விருப்பத்தைக் கூறினான். தன் மனைவியிடம் ஆலோசனை செய்தபின் கருத்துத் தெரிவிப்பதாகக் கூறிய சங்கரன் உள்ளே சென்று, தன் மனைவியிடம், "சுசீலா! நம் மஞ்சுளா ஒரு பட்டத்து ராணியாவாள் என்று நாம் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், நாம் நாடு கடத்தப்பட்டுள்ள விஷயத்தை இப்போது மன்னரிடம் தெரிவிக்க வேண்டாம். விவாகமாகிவிட்ட பிறகு சொல்லிக் கொள்ளலாம்" என்றார். அதற்கு சுசீலா சம்மதிக்க, உடனே அவர்கள் மஞ்சுளாவைத் தனியே உள்ளே அழைத்துத் தங்கள் முடிவைத் தெரிவித்தனர்.
 
அதற்கு மஞ்சுளா "நீங்கள் எல்லாரும் இந்தக் காட்டில் சிரமப்பட்டுக் கொண்டிருக்க, நான் மட்டும் சுகமாக அரண்மனையில் வசிக்க வேண்டுமா?" என்றாள்.
 
"வீணாகப் பிடிவாதம் பிடிக்காதே! "நாங்கள் இங்கே வசிக்கப் பழகி விட்டோம். உன்னுடைய தம்பிகளை உன்னுடன் அழைத்துப் போ! சரியான நேரத்தில் உன் கணவரின் செவிகளில் சோமனின் அக்கிரமத்தைப் பற்றிக் கூறி அவனுக்கு தண்டனை வாங்கித் தந்தபின், எங்களை உன்னிடம் அழைத்துக் கொள்" என்று மகளுக்கு புத்தி கூறினாள். மஞ்சுளாவும் அதற்கு சம்மதித்தாள்.
 
பிறகு வெளியே வந்த சங்கரன், மன்னரிடம் "மகாராஜா! இந்தத் திருமணத்திற்கு எங்கள் பூரண சம்மதம்! திருமணத்திற்குப் பிறகு மஞ்சுளாவையும், என் பிள்ளைகள் இருவரையும் அழைத்துச் செல்லுங்கள். நாங்கள் இன்னும் சிறிது காலம் காட்டுவாசம் செய்கிறோம்!" என்றார்.
மணிவர்மன் அதற்கு சம்மதிக்க, அந்த ஆசிரமத்திலேயே மஞ்சுளாவை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு, அவளையும் அவள் தம்பிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு அரண்மனை திரும்பினான்.
 
ராஜ்யத்திற்குத் திரும்பிய பிறகு, குடிமக்கள் அனைவருக்கும் தனது திருமணத்தை அறிவித்தான். பிறகு, மஞ்சுளாவை அறிமுகப் படுத்தி வைத்தான். திருமணத்தையொட்டி அரண்மனையில் நடந்த கோலாகலமான கொண்டாட்டங்களுக்குப் பிறகு, மணிவர்மன் தன் மனைவி மஞ்சுளாவிடம், "இன்று முதல் உன் சொற்படியே நான் நடப்பேன்!" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூற, மஞ்சுளா வெட்கத்துடன், "உங்களை வழிநடத்திச் செல்லுமளவிற்கு எனக்கு அறிவுத் திறன் இல்லை" என்று சொன்னவுடன், "அதனால் என்ன! இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இந்த வயதிலும் நீ கல்வி அறிவைப் பெறலாம்! அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்கிறேன்" என்று கூறிவிட்டு, மறுநாளே அறிவில் சிறந்த பண்டிதர்களை அரண்மனைக்கு வரவழைத்து மஞ்சுளா மட்டுமன்றி, அவளுடைய தம்பிகளும் கல்வி பயிலுமாறுச் செய்தான்.
 
 இயற்கையிலேயே புத்திகூர்மை உடையவர்களாயிருந்த மஞ்சுளாவும், அவளுடைய தம்பிகளும் மிகச் சிறப்பாகக் கல்வி பயின்று, பல விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தனர். மஞ்சுளாவிற்கு அரசியலைப் பற்றியும், ஆட்சி முறைகளைப் பற்றியும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப் பட்டது. மஞ்சுளா அனைத்திலும் திறமையுடன் விளங்கினாள். தன் மனைவியைப் பெருமையுடன் நோக்கியவாறே மணிவர்மன், "மஞ்சுளா! இப்போது சொல்! நீ என்ன சொன்னாலும், அதன்படி செய்கிறேன்!" என்றான்.
 
மன்னருடைய புகழ்ச்சியால் நாணிய மஞ்சுளா, தலைகுனிந்தவாறே, "என் தம்பிகளை உங்களுடைய ஆட்சிக்குட்பட்ட நகரங்களில் நகர அதிகாரிகளாக நியமிக்க ஆசைப்படுகிறேன். அவ்வாறு அதிகாரிகளாக ஆவதற்கு முன், அவர்களுக்கு நகர அதிகாரி ஒருவரிடம் பயிற்சி பெற ஏற்பாடு செய்யுங்கள்!" என்றாள்.
அதுகேட்டு சற்று யோசித்த மன்னன், "இதுவரை என்னுடைய நகர அதிகாரிகளில் சிறப்பாக ஆட்சி செய்பவன் யார் என்ற ஆராய்ச்சியை நான் செய்ததில்லை. அப்படி ஒருவனை இனிமேல் தான் கண்டு பிடிக்க வேண்டும்! எந்த நகரில் குற்றங்கள் குறைவாக உள்ளதோ, அந்த நகராதிகாரி சிறப்பாக ஆட்சி செய்கிறான் என்று வைத்துக் கொள்ளலாம்." உடனே மஞ்சுளா, "நீங்கள் சொல்வது உண்மைதான். குற்றங்களின் எண்ணிக்கையை விடுத்து, அதிகாரிகள் வழங்கிய கடுமையான தண்டனைகளைப் பட்டியலிட்டால், அதை வைத்து எந்த நகரில் கொடிய குற்றங்கள் அதிகம் என்று கண்டு பிடிக்கலாம். அதாவது, தூக்கு, ஆயுள் தண்டனை, நாடு கடத்துதல் ஆகிய கடுமையான தண்டனைகளை மட்டும் பட்டியல் இடுங்கள். இத்தகைய தண்டனைகளை வைத்து, எந்த நகரில் கொடிய குற்றங்கள் குறைவு என்பதை கணக்கிடலாம்!" என்றாள்.
 
அவளுடைய கருத்தை ஒப்புக் கொண்ட மணிவர்மன், உடனே கடந்த பத்து ஆண்டுகளில் நகர அதிகாரிகள் வழங்கிய தண்டனைகளைப் பட்டியலிட்டு அனுப்ப உத்தரவிட்டான். மன்னரின் கட்டளையின் உள்நோக்கம் பல அதிகாரிகளுக்குத் தெரிந்து விட்டது. அதனால், அவர்களில் பலரும் தாங்கள் வழங்கிய தண்டனைகளின் பட்டியலில், கடும் தண்டனைகள் பலவற்றை நீக்கி, புதிதாகப் பட்டியல் தயாரித்தனர். சங்கரன் குடும்பத்தை நாடு கடத்திய சோமனும் அவர்களில் ஒருவன். மற்ற நகரங்களை விட தனது நகரத்தில் கடுமையான தண்டனைகள் குறைவு என்று நிரூபிக்க, கடும் தண்டனைகளை ரத்து செய்து, புதுப்பட்டியல் தயாரித்து அனுப்பினான்.
எல்லா அதிகாரிகளிடமிருந்தும் பெற்றப் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்த மன்னன் மஞ்சுளாவிடம், "கபாலபுரத்தைச் சேர்ந்த நரேந்திரன் தான் அதிகமான தண்டனைகள் விதித்துள்ளான். சோமன் கடுமையான தண்டனை விதிக்கவில்லை! ஆகையால் அவனிடம் உனது தம்பிகளை அனுப்பலாம்" என்றான்.
 
உடனே அவள் மணிவர்மனை நோக்கி, "என் தம்பிகளை நரேந்திரனிடமே பயிற்சிக்கு அனுப்புங்கள். சோமனுக்கு, காட்டில் வசிக்கும் என் பெற்றோரை சகல மரியாதைகளுடன் நமது அரண்மனைக்கு அழைத்து வரும் பொறுப்பைக் கொடுங்கள்!"
என்றாள். இளம் மனைவியின் சொல்லைத் தட்ட விரும்பாத மன்னனும் அப்படியே செய்தான்.
 
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், "மன்னா! கடுமையான தண்டனைகளை மற்றவர்களை விட அதிகமாக விதித்திருந்த நரேந்திரனிடம் தன் தம்பிகளைப் பயிற்சி பெற மஞ்சுளா அனுப்பக் கூறியது ஏன்? மேலும் சோமனிடம் தன் பெற்றோரை அழைத்து வரும் பணியைத் தரச் சொன்னது ஏன்? அவ்வாறு செய்வதால் அவர்களது சுயரூபம் தெரிந்து விடாதா? இதிலிருந்தே பெண் புத்தி பின்புத்தி என்று விளங்கவில்லையா? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!" என்றது.
 
அதற்கு விக்கிரமன், "தங்கள் நகரில் நடந்த, நடக்கின்ற அனைத்துக் குற்றத்தைக் குறித்து உண்மையான பட்டியல் கொடுத்தது நரேந்திரன் மட்டும்தான். அவன் ஒருவன் மட்டும் தான் நேர்மையான நகராதிகாரியாக இருந்தான். இதை மஞ்சுளா அனைவரது பட்டியலையும் பார்த்து புரிந்து கொண்டாள். ஆகையால் தன் தம்பிகளை அவனிடம் படிக்க அனுப்புமாறு வேண்டினான். சோமனது பட்டியலில் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையான நாடு கடத்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. இதிலிருந்து தன் பெற்றோருக்கு அவன் தீங்கு அளித்து இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆகையால் அவனையே தனது பெற்றோரை அழைத்து வரச் செய்தால் அவனுக்கு அதைவிட வேறு எந்த தண்டனையும் தேவையில்லை என்று மன்னனிடம் கூறினாள். இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் என்று அவள் எண்ணினாள். ஆகையால் மஞ்சுளா மிகவும் புத்திசாலி என்பதில் ஐயமில்லை" என்றான்.
 
விக்கிரமனின் இந்த சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
 
 
 
வேதாளம் வரும்..

0 comments:

Post a Comment