சித்திரக்குள்ள அரசனுக்கு சாப விமோசனம்

 அந்தக் காட்சியை கந்தர்வ லோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சர்மிளா, தன்னருகில்இருந்த அமரனை நோக்கி, “பார்த்தாயா? உண்மையான அன்பு உருவத்தைப் பொறுத்துத் தோன்றுவது இல்லை.  பெண்களின் இதயம் மலரைப் போல் மென்மையானது. அதற்கு ஆணுடைய அழகு முக்கியம் இல்லை. அவனுடைய  குணம்தான் முக்கியம்!” என்றாள். தொடர்ந்து, “ஏன் யசோதரனுடைய வாழ்க்கையுடன் விபரீதமாக விளையாடி இருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“என்னை மணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடு! இந்த நிமிடமே யசோதரனை சுயஉருவம் பெறச் செய்கிறேன்” என்றான் அமரன். அதற்குள் ஆனந்தபுரி மன்னர் ராகலதாவின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். அதைக்கேட்டு திடுக்கிட்ட ராகலதா, “தந்தையே! தயவு செய்து சுயம்வர ஏற்பாடுகளை நிறுத்துங்கள். காலம் வரும்போது நான் அதற்கு அனுமதி அளிப்பேன்” என்றாள் ராகலதா.

அதன்பிறகு, யசோதரனை சந்தித்த ராகலதா, “காலங்கடத்திப் பயன் இல்லை. என் தந்தை என் திருமண ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார். நீங்கள் எவ்வாறு இந்த உருவத்தை அடைந்தீர்கள் என்றும், சுயஉருவம் அடைய என்ன வழி என்றும் சொல்லுங்கள். அதுவரை நான் உங்களுக்காகக் காத்திருப்பேன்” என்றாள்.  ஆனால் சுய உருவம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யாசோதரனுக்குத் தெரியவில்லை. கந்தர்வலோகத்திலிருந்து இதைப் பார்த்த சர்மிளா, “அமரன், எல்லாம் உன்னால் வந்த வினை!” என்றாள். “நீ என்னை மணம் செய்வதாக வாக்குறுதி கொடு! அப்போதுதான் அவனை சுய உருவம் பெறச் செய்வேன்!” என்றான் அமரன்.

அமரனின் பிடிவாதம் சர்மிளாவுக்கு வெறுப்பைத் தந்தது. "உன் மனத்தில் பொறாமைதான் குடிகொண்டுள்ளது. அதை அறவே அகற்றி, உன் நல்ல குணங்களினால் நீ என்னைக் கவர முயற்சிக்க வேண்டும். ஆனால் நீ கந்தர்வனாக இருக்கும் வரை உன் தீயகுணங்கள் மாறாது. நீ மனிதனாகப் பிறந்து கஷ்டங்களை அனுபவித்தால்தான் உனக்குப் புத்தி வரும். ஆகவே நீ மானிடனாக ஜென்மம் எடுப்பாய்! அன்பு, இரக்கம், பொறுமை, ஆகிய நற்குணங்களை நீ பெறும்போது உனக்கு மனிதப் பிறவியிலிருந்து முக்தி கிடைக்கும். அப்போது உன்னை மணப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றாள்.

அடுத்த கணமே அமரன் மானிடனாக மாறி பூமியில் தோன்றினான். அதே சமயம் யசோதரன் தன் சுய உருவத்தைப் பெற்றான். ராகலதா தன் தந்தையிடம் யசோதரனிடம் தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த, அவரும் சம்மதித்தார். இருவரின் திருமணமும் இனிதே நடைபெற்றது.ந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! சர்மிளாவுக்கு உண்மையிலேயே அமரன் மீது அன்பிருந்ததா?  அன்பிருந்தால், அவள் ஏன் காலங்கடத்தினாள்? அவள் முன்னமே சம்மதித்திருந்தால், யசோதரன் தன் சுயஉருவத்தைப் பெற்றிருப்பான் அல்லவா? யசோதரனுக்கு சுயஉருவம் எப்படி கிடைத்தது? கந்தர்வனின் சாபம் எப்படி விமோசனமாயிற்று? என்னுடைய இந்த சந்தேகங்களுக்கு விடைகள் தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “சர்மிளா அமரன் மீது உண்மையிலேயே அன்பு பூண்டிருந்தாள். ஆனால் அமரன் பொறாமையின் விளைவாக யசோதரனை சபித்ததும், அவள் மீதே சந்தேகப்பட்டதும், அவளுக்கு அமர்மீது வெறுப்பை உண்டாக்கியது. அநியாயமாக யசோதரன் அவனிட்ட சாபத்தினால் துன்புறுவதைக் கண்டு அமரன் இதயம் இளகும் என்றும், அவனுடைய சுபாவம் மாறும் என்று நம்பியே காலங்கடத்தினாள். ஆனால் அமர் திருந்த மாட்டான் என்று தோன்றியதால் அவன் மனிதனாக மாற சாபமும் கொடுத்தாள்.

ஒரு கந்தர்வன் மனிதனாக மாறும்போது தன் விசேஷ சக்திகளை இழப்பான். அதனால்தான் அவன் யசோதரனுக்கிட்ட சாபம் அவன் மனிதனாக மாறியதும் தானே நிவர்த்தியாகிவிட்டது. அதனால் யசோதரனின் சாபவிமோனத்திற்கு அமரனே காரணம்! சர்மிளாவும் மறைமுகமாக அதற்குக் காரணமாயிருந்தாள்” என்றான். இதனால், விக்கிரமன் மௌனம் கலையவே, அவன் சுமந்து கொண்டு இருந்த உடல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 

வேதாளம் வரும்...

0 comments:

Post a Comment

Flag Counter