அயோத்தியா காண்டம் - 9

 
காட்டில் இராமரின் ஆசிரமத்தைத் தேடிக் கொண்டு வந்த பரதன் ஒரு ஆசிரமம் சற்றுத் தொலைவில் இருப்பதைக் கண்டு அதுவே இராமரது ஆசிரமமாக இருக்க வேண்டுமென்று எண்ணினான். தன் தாய்மார்களை அழைத்துக் கொண்டு பின்னால் வரும்படிக் கூறி விட்டு பரதன் சுமந்திரருடனும் சத்துருக்கனனுடனும் முன் சென்றான்.
 
ஆசிரமத்தை அடைந்ததும் அவன் தவக்கோலம் பூண்ட இராமரைக் கண்டான். அவரருகே சீதையும் இலட்சுமணனும் இருப்பதைக் கண்டான். இராமரைக் கண்டதும் மனத்தினுள் அடக்கியிருந்த துக்கம் மடை திறந்த வெள்ளம் போல வந்தது. விரைவாக ஓடி, அடியற்ற மரம்போல அண்ணனின் திருவடிகளில் வீழ்ந்தான். கண்களிலிருந்து கண்ணீர் வற்றாத ஊற்றுப் போலப் பெருக்கெடுத்து வழிந்தது. பேச நாவெழவில்லை. பரதனோடு சத்துருக்கனனும் இராமரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
 
இராமர் அவர்களைத் தூக்கித் தழுவியவாறே கேள்விகளாகக் கேட்கலானார். "தம்பி, உன்னைப் பார்த்துத்தான் எவ்வளவு நாள்களாயின! எப்படி இளைத்து விட்டாய்? ஆமாம், காட்டிற்கு நீ ஏன் வந்தாய்? தந்தையார் சுகமா? அவர் மனம் துயரப்படவில்லையே? நீயும் நன்றாகத்தானே ஆட்சி புரிகிறாய்? உன் நாட்டின் மீது யாரும் படையெடுத்து வரவில்லையே.
எல்லாரும் உனக்கு உறுதுணையாக நிற்கிறார்களா?" என்று கேட்டார். இராமர் இவ்வளவு கேள்விகளையும் கேட்டதற்குக் காரணம் பரதன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு இருப்பானென்ற எண்ணத்தில் தான். ஆனால் பரதனோ மிகவும் பணிவுடன் "அண்ணா, நம் வம்சத்திலேயே மூத்தவனிருக்க இளையவன் முடிசூடினான் என்ற இழுக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. அதனை நாமும் நிலைநிறுத்த வேண்டாமா? என்னோடு அயோத்திக்கு வந்து அரியாசனத்தில் அமருங்கள். தந்தையார் கூட நம்மிடையே இல்லை. நீங்கள் தாம் ஆட்சியை ஏற்று நடத்த வேண்டும்" என்றான்.
 
அது கேட்டு இராமர் "தந்தையார் இல்லையா? ஏன்? எங்கு சென்றார்?" என ஆவலுடன் கேட்டார். அதற்கு பரதன் "நீங்களும் இலட்சுமணனும், சீதையும் காட்டிற்குப் போய்விட்ட துக்கத்தால் இவ்வுலகையே விட்டு மேலுலகம் சென்று விட்டார். இறக்கும்போது கூட உங்கள் நினைவேதான். எனவே நீங்கள் அவருக்குத் தர்ப்பணம் முதலியவற்றை முதலில் செய்யுங்கள்" என்றான்.
 
இறந்தாரெனக் கேட்டதும் இராமர் இடிந்து போய் விட்டார். தன் நினைவை இழந்து விட்டார். அவரது மயக்கத்தை யாவரும் போக்கினர். அவரும் தனது துயரத்தை அடக்கிக் கொண்டு தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்தார். அவரோடு லட்சுமணனும் சீதையும் தாம் செய்ய வேண்டியவற்றையும் முறைப்படி செய்தனர். அதன் பின்னர் யாவரும் பர்ணசாலைக்குத் திரும்பினர்.
 
இதற்குள் பரதனோடு வந்தவர்களும் அந்த ஆசிரமத்திற்கு வந்தனர். இராமருக்கு வணக்கம் செலுத்தினர். முதியோர்கள் ஆசி கூறினர். இதே சமயம் வசிஷ்டருடன் தசரதனின் மூன்று மனைவிமாரும் நதிக்கரை ஓரமாக வந்தனர். அங்கு இராமர் தந்தைக்கு ஜலதர்ப்பணம் செய்து அங்கு விட்டுப் போன பொருள்களைக் கண்டனர். அப்போது கௌசல்யை "இனி இவர்கள் துன்பகாலம் தீர்ந்தது
 
பரதன் எப்படியாவது இராமனை அயோத்திக்கு அழைத்து வந்து விடுவான். இலட்சுமணனுக்கும் இனி சிரமம் இருக்காது" என்றாள். இதற்குள் அவர்கள் இராமரிருக்கும் பர்ணசாலையை அடைந்து விட்டனர். இராமர் தனது தாய்மார்களைக் கண்டதும் எழுந்து கீழே விழுந்து நமஸ்கரித்தார். சீதையும் அவர்களை நமஸ்கரித்து எதிரே நின்றாள். அப்போது கௌசல்யை "ஜனக மன்னரின் புதல்வியாகப் பிறந்து தசரத சக்கரவர்த்தியின் மருமகளாகி இப்படி வனவாசம் செய்து உடல் வருந்த மெலிந்திருக்கிறாயே" என்று கண்ணீர் உகுத்தாள்.
 
இராமர் வசிஷ்டரின் ஒரு புறமாக வீற்றிருக்க மறுபுறம் பரதன் சத்துருக்கனனன் மந்திரிமார்கள் மற்றும் நகரத்துப் பிரமுகர்கள் ஆகியோர் வீற்றிருந்தனர்.
 
அப்போது இராமர் பரதன் அங்கு வந்திருக்கும் நோக்கத்தை அறிய "பரதா! நீ ஏன் இந்த தவக்கோலத்தில் காட்டிற்கு வந்தாய்?" எனக் கேட்டார். அதற்கு பரதன் "உங்களை இப்படி வனவாசம் செய்யத் தூண்டி தந்தையாரைப் பாவச் செயல் புரிய வைத்தவள் என் தாய் கைகேயி. அவளுக்கு நரகமே கிட்டும். நான் அவளது மைந்தன். என் மீது கருணை கூர்ந்து நீங்கள் நாட்டிற்கு வந்து அரசாட்சியை ஏற்க வேண்டும்" என்றான்.
 
அப்போது இராமர் "பரதா, இப்படி உன் தாயாரை நீ சபிக்கலாமா? இது முறையல்ல. உனக்கு இப்படிச் செய்ய உரிமையும் இல்லை. தந்தை கூற நான் காட்டிற்கு வந்தேன். தந்தைக்கும் தாய்க்கும் ஒரேவித மரியாதையே செலுத்த வேண்டும். அவர் சொன்ன சொல்லை புறக்கணித்து விட்டு நான் எப்படி திரும்பி வந்து நாடாள்வது? பதிநான்கு வருட காலம் கழிந்த பின்னரே நான் அயோதிக்குள் அடியெடுத்து வைக்க முடியும். எனவே நான் ஊருக்கு வரமாட்டேன்" என்றார்.
 
அன்றைய இரவுப் பொழுது கழிந்தது. மறுநாள் யாவரும் ஸ்நானம் செய்து விட்டு ஜெபதபஹோமம் முதலியவற்றைச் செய்து முடித்து மீண்டும் இராமரைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர்.
அப்போது பரதன் "என் தாயாரின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து எனக்கு அரசுரிமையையும் அளித்தீர்கள் அண்ணா. அதை நான் உங்களிடமே கொடுக்கிறேன். என்னால் நாட்டை ஆள முடியுமா? நாட்டை ஆள்வதற்குத் தகுதி வேண்டாமா? எனவே நீங்கள் தாம் இந்த ஆட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என வற்புறுத்தினான்.
 
அங்கு கூடி இருந்தோர் யாவரும் அது கேட்டு ஒரேயடியாக மகிழ்ச்சிஆரவாரம் செய்தனர். பரதன் சொல்வதே சரியெனக் கூறி அவனை அனைவரும் பாராட்டினர்.
 
அப்போது இராமர் பரதனுக்கு நல்லுபதேசங்களை வழங்கினார். ஜீவராசிகள் அழிவது நிச்சயம். இறந்தவர் திரும்பமாட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய அவரது விருப்பப்படி நடக்க வேண்டும். இப்படியாகக் கூறி "பரதா, தந்தையின் கட்டளை நான் வனவாசம் செய்ய வேண்டும் என்பதும், நீ நாடாள வேண்டுமென்பதுமாகும். எனவே அந்த வாக்கை நாம் நிலை நாட்ட வேண்டும்" என்றார்.
 
அப்போது பரதன் "நான் எனது வரம்பை மீறி எதையும் செய்யவில்லை. நமது தந்தையார் என் தாயார் கைகேயிக்கு நமது அடிமையாகி அவளது பயமுறுத்தலால் மனம் தடுமாறி உங்களுக்கு வனவாசத்தையும் எனக்கு நாடாளும் உரிமையையும் அளித்தார்.
இது எந்த வகையில் நியாயம்? அவர் செய்த இந்த அநீதிக்கு நான் பரிகாரம் செய்தாலே அவருடைய மகன் என்றுக் கூறிக்கொள்ளத் தகுதி பெற்றவனாவேன். அண்ணா, நீங்கள் வந்து ஆட்சியை ஏற்றக் கொள்ளங்கள்" என வேண்டினான்.
 
அப்போது இராமர் "பரதா, இது மட்டுமல்ல. இன்னொரு விஷயமும் உனக்குத் தெரிந்திருக்கும். நம் தந்தையார் திருமணத்தின் போதே கைகேயிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே முடி சூட்டுவதாக வாக்களித்திருந்தார். அதை நிறைவேற்ற வேண்டாமா? என்ன சொல்கிறாய்?" எனக் கேட்டார். அப்போது கூட்டத்தினர் இடையே அமர்ந்திருந்த ஜாபாலி என்னும் முதியவர் "இதென்ன பேச்சு? இராமா! உனக்கு எதற்கு இந்த துன்பமெல்லாம்? பேசாமல் ஊர் திரும்பி வா" எனக் கூறினார். வசிஷ்டரும் இராமரை அயோத்திக்குத் திரும்பி வருமாறு சொன்னார். ஆனால் இராமரோ அதற்கு இணங்கவில்லை.
 
அதைக் கண்டு பரதன் சுமந்திரனிடம் "சுமந்திரா, இனி வேறு வழியில்லை. நீ எனக்காக இங்கு தர்ப்பைப் புல்லைக் கொண்டு வந்து பரப்பு. நான் இராமரின் பர்ணசாலையின் வாசலின் முன் படுத்துக் கிடக்கப் போகிறேன். அவர் எனது கோரிக்கையைத் தீர்க்கும் வரையில் இந்த இடத்தை விட்டு அசையப் போவதில்லை" எனக் கூறினான்.
 
அப்போது சுமந்திரன் இராமரைப் பார்த்துத் தயங்கி நிற்கவே பரதன் தானே தர்ப்பைப்புல்லைக் கொண்டு வந்து அந்தப் பர்ணசாலையின் வாசலின் முன் பரப்பினான். பின்னர் அதன்மீது அவன் படுத்துக் கொண்டும் விட்டான்.
 
பரதனின் இந்தச் செயலைக் கண்டு இராமர் "பரதா, உனது இச்செய்கை கடனை வசூலிக்க வழி இல்லாது திண்டாடும் அந்தணனைப் போல இருக்கிறது. க்ஷத்திரியவம்சத்தில் பிறந்தவர்கள் இப்படி துராக்கிரகம் செய்யக் கூடாது. தவிரவும் நான் உனக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கவில்லை. எனவே நீ என் பர்ணாலைக்கு முன் படுப்பது எவ்வளவு தூரம் நியாயமானது என்பதைச் சற்று யோசித்துப் பார் வேண்டாம். இப்படிச் செய்யாதே. இங்கிருந்து எழுந்து நீ அயோத்திக்குச் செல். அங்கு நீ நாட்டை ஆளவேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டியது. இதுதான் உனது கடமை. அதனின்றும் நீ இப்போது தவறக் கூடாது" என்றார்.
 
ஆனால் பரதனோ படுத்த இடத்திலிருந்தும் எழுந்திருக்கவில்லை. தன்னைச் சுற்றிலும் நின்று கொண்டிருப்பவர்களைப் பார்த்து அவன் "நீங்களெல்லாரும் ஏன் பேசாமலிருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் இப்படி மௌனமாக இருந்தால் இராமர் எப்படி அயோத்திக்குத் திரும்பி வருவார்? அவரிடம் விளக்கமாகச் சொல்லி அவரை அயோத்திக்கு வரும்படி செய்யுங்கள்" என்றான்.
 
அப்போது அக்கூட்டத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் சற்று மௌனமாக இந்து பின்னர் பரதனிடம் "நாங்கள் எப்படித்தான் கூறுவது? இராமரோ தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறி அவர் சொன்னபடி வனவாசம் செய்தாக வேண்டுமென்று கூறுவதோடு நில்லாமல் அவர் கூறுவது போல ஆட்சி புரிவதற்கும் அந்தப் பதிநான்கு ஆண்டிற்கும் நீர்தாம் உரிமைபெற்றவரெனக் கூறுகிறார். நாங்கள் என்ன சொல்வதெனத் தெரியாமல் திகைத்து விழிக்கிறோம்" என்றனர்.                             
 

0 comments:

Post a Comment

Flag Counter