அயோத்தியா காண்டம் - 7

பரதன் தன் தந்தை இறந்து போனாரென்ற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனான். தன் தாயிடம் "அம்மா, அவர் கடைசி நிமிடத்தில் என்ன கூறினார்?" என்று கேட்டான். அதற்கு அவள் ஒன்றும் கூறாமல் "ஹா! இராமா, இலட்சுமணா, சீதா," என்று கூறியவாறே உயிரை விட்டார்" என்றாள்.

 

அது கேட்டு பரதன் "அவர்களெல்லாம் அவரைச் சுற்றி இருக்கவில்லையா?" என்று ஆச்சரியத்தோடு கேட்க கைகேயியும் "இல்லை, அவர்கள் மூவரும் மரவுரி தரித்துக் கொண்டு காட்டிற்குச் சென்றுவிட்டனர்" என்றாள். பரதன் திகைத்துப் போனவனாய் "காட்டிற்கா? ஏன்? எதற்காக?" என்று கேட்டான். கைகேயியும் "ஆமாம். இராமனுக்குப் பட்டாபிஷேகம் நடத்த மன்னர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கையில் நான் அவரிடம் இரண்டு வரங்களைக் கேட்டேன். நீ சிம்மாசனத்தில் அமர வேண்டுமென்று ஒன்று. இராமன் உடனே காட்டிற்குப் போய் பதிநான்கு வருட காலம் இருக்க வேண்டுமென்பது மற்றொன்று. வசிஷ்டர் முதலானோர் இதனால் கோபமும் வெறுப்பும் கொண்டுஉள்ளார்கள். நீ அதையெல்லாம் சிறிதுங்கூடப் பொருட்படுத்தாதே" என்றாள்.

 

இதைக் கேட்டதும் பரதன் தன் தலையிலே பெருத்த இடி விழுந்தது போலுணர்ந்தான். அவனுக்கு எல்லைஅற்ற கோபம் வந்துவிட்டது.
உடனே "ஆகா! தெரிந்தது, தெரிந்தது! இராமனைக் காட்டிற்கு அனுப்பி, கணவனின் உயிரைப் போக்கிய உன்னை இனி நான் பார்க்கக் கூட கூடாது. மூத்தவனிருக்க இளையவனுக்குப் பட்டம் என்பது நம் வழக்கத்திலேயே இல்லாத ஒரு புதுமை. இதைச் செய்த நீ இன்னுமா இங்கே உயிரோடு இருக்கிறாய்? இந்த பாவத்திற்குப் பரிகாரமாக நெருப்பு மூட்டி அதில் நீ உயிரை மாய்த்துக் கொள் அல்லது இங்கிருந்து காட்டிற்கு ஓடிவிடு" எனக் கண்களில் கனல் பறக்கக் கூறினான். 


இதற்குள் மந்திரிகள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களிடம் பரதன் "நான் சிம்மாசனத்தில் அமரப்போவது இல்லை. இவள் செய்த இந்த வஞ்சகச் செயலுக்கு நான் உடந்தையல்ல. இதெல்லாம் எனக்கும் சத்ருக்கனனுக்கும் தெரியாமல் நடந்துஇருக்கிறது இதற்கு நான் பரிகாரம் செய்தே தீருவேன்" எனக் கூறினான்.


பின்னர் அவன் கௌசல்யா தேவியைக் காண அவளது அந்தப்புரத்திற்குச் சென்றான். அவனைக் கண்டதுமே துயரமேலீட்டால் கண்ணீரைத் தாரைதாரையாக உகுத்து புலம்பி அழுதாள். அப்போது அவள் கைகேயி செய்த அநியாயத்தைக் கூறினாள். 


பரதன் அவளிடம் "அம்மா, இந்த விஷயம் எனக்கு இங்கு வந்த பிறகுதான் தெரிய வந்துள்ளது. இதற்கு நான் உடந்தையேயல்ல" எனக் கூறினான்.


பரதன் மனம் மாசற்றது என்பதை கௌசல்யை தெரிந்து கொண்டாள். அவனுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகளையும் கூறினாள். அந்த சமயம் அங்கு இருந்த வசிஷ்டர் "பரதா, இனி நடக்க வேண்டியதை கவனி. மன்னருக்குச் செய்யவேண்டிய உத்தரகிரியைகளைச் செய்" என்றார்.


தைலத்துக்குள் வைக்கப்பட்டிருந்த தசரதனின் உடல் வெளியே எடுக்கப்பட்டு தக்க மரியாதைகளோடு தகனம் செய்யப்பட்டது. பதிமூன்றாவது நாள் தசரதனது அஸ்தியை பரதனும் சத்துருக்கனனும் சேகரித்து எடுத்தனர்.

இருவரும் ஒரிடத்தில் அமர்ந்து பேசலாயினர். அப்போது சத்துருக்கனன் "என்ன ஆச்சரியம்! இராமர் காட்டிற்குப் போக வேண்டுமெனத் தீர்மானமானதும் இலட்சுமணன் ஒன்றுமே கூறவில்லையா? அவனால் இதை சகித்துக் கொண்டிருக்க முடியாதே! அவன் சுபாவம் அப்படிப் பட்டதே!" என்றான். 


அப்போது அவ்வழியாக மந்தரை வந்துகொண்டு இருந்தாள். அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. தனது சூழ்ச்சி பலித்ததே என்ற பெருமிதத்தில் நகைகளையெல்லாம் அணிந்து கொண்டு ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தாள். அவளை சில வீரர்கள் பிடித்துக் கொண்டு போய் சத்துருக்கனன் முன் நிறுத்தி "இவள் தான் இராமர் காட்டிற்குச் செல்ல காரணம். அதனால் விளைந்திட்ட பல சம்பவங்களுக்கும் இவளே காரணம். எனவே இவளைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறோம். இவளுக்கு தக்க தண்டனை கொடுங்கள்" என்றனர்.


அதைக் கேட்டதும் சத்துருக்கனன் அவளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போனான். அவளோடு வந்த மற்ற பணிப் பெண்களோ பயந்து ஓடிப்போயினர். மந்தரையோ பலமாகக் கூக்குரலிடலானாள். அச்சத்தம் கேட்டு கைகேயி ஓடோடி வந்தாள். கைகேயியைக் கண்டதும் சத்துருக்கனின் கோபம் பதின்மடங்கு அதிகரித்தது. அவளைக் கடுஞ்சொற்களால் திட்டினான். கைகேயி என்ன செய்வதெனத் தெரியாமல் ஓடிப் போய் பரதனை அழைத்து வந்தாள். 


அப்போது பரதன் "தம்பி. இவள் என்னதான் கெடுதல் செய்திருந்தாலும் பெண்ணல்லவா! அவளைக் கொன்றால் நாம் இராமரின் முகத்தில் கூட விழிக்க முடியாது. அதற்காகத்தான் நான் கைகேயியைக் கூடக் கொல்லாமல் இருக்கிறேன். எனக்கு வந்த ஆத்திரத்தில் அவளை என் தாயென்றும் பாராது கொல்லவே என் மனம் விரும்பியது. ஆனால் இராமரை நினைத்ததும் அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டேன்" என்றான்.


தசரதன் இறந்து பதிநான்கு நாள்களாகிவிட்டன. அப்போது வயதில் பெரியவர்கள் அனைவரும் பரதனிடம் "அரசிளங்குமாரனே, நாட்டை ஆள அரசனில்லாத நிலை தொடர்ந்து நீடிக்க முடியாது எனவே நீ உடனே பட்டாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்" என்றனர். அதற்கு பரதன் "அரசரின் மூத்தமகனே பட்டத்திற்குரியவன். இதுதான் இக்ஷ்வாகு வம்சத்தின் வழக்கம். இதை நான் மீற முடியாது.


எனவே நான் காட்டிற்குப் போய் இராமரைக் கண்டு அவரை வேண்டி மீண்டும் அயோத்திக்கு அழைத்துக் கொண்டு வருவேன். எனவே எல்லாரும் என்னுடன் புறப்பட்டு வாருங்கள். நாம் யாவரும் இராமர் இருக்குமிடத்திற்குச் செல்லலாம்" என்றான். 


மறுநிமிடமே இந்த சமாசாரம் எங்கும் பரவிவிட்டது. பிரயாணத்திற்கான ஏற்பாடுகள் மளமளவெனச் செய்யப்பட்டன. அங்கங்கே தங்கத்தக்க வசதிகளை முன் கூட்டியே செய்யலாயினர் யாவரும் யமுனை நதிக் கரையிலிருந்து கங்கை நதிக் கரையிலிருந்து கங்கை நதிக்கரை வரை எவ்வித துன்டமுமில்லாமல் செல்வதற்காக பலவித வசதிகள் செய்யப்பட்டன.


பதினைந்தாவது நாள் அதிகாலையில் வசிஷ்டர் யாவர் முன்னிலையிலும் "பரதா! நீதான் இனி சிம்மாசனத்தில் அமர்ந்து இந்நாட்டை ஆளவேண்டும்" எனக் கூறினார். பரதனோ மிகவும் பணிவுடன் "இம்மாதிரி என்னை வேண்டிக்கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். நான் இராமரை மீண்டும் இங்கு அழைத்துவர என்னாலான முயற்சிகளைஎல்லாம் செய்யப் போகிறேன். அவர் வராதுபோனால் நான் இந்நகரில் அடியெடுத்து வைக்கமாட்டேன். என் தம்பி இலட்சுமணனைப் போலவே மரவுரிதரித்தே வாழ்வேன். இதற்காக முன் கூட்டியே நான் ஆட்களை அனுப்பி இருப்பதும் உங்களுக்குத் தெரிந்ததுதானே" என்றான். 


இதைக் கேட்டு சபையோரும் "ஆகா! என்ன உயரிய குணம். நாங்களும் இப்போதே கிளம்புகிறோம். எல்லாரும் இராமரைக் கண்டு அவரை இங்கே அழைத்து வரலாம்" எனக் கூறினர். உடனே மந்திரிகளும் சேனைத் தலைவர்களும் பிரபுக்களும் வீரர்களும் நகரிலிருந்து கிளம்பி இராமரைக் காணச் சென்றனர். 


பரதன் முன் செல்ல அவனது பின்னே யானைப் படையும் தேர்படையும் குதிரைப்படையும் காலாட்படையுமாகச் சென்றது. கௌசல்யை, கைகேயி சுமித்திரை ஆகியோர் இரதங்களில் அமர்ந்து சென்றனர். கைகேயின் மனம் பட்டபாட்டைக் கூறவே முடியாது. அவள் தன் செய்கைக்காகப் பச்சாத்தாபப் படலானாள்.

அவளது மனமாற்றத்தைக் கண்டு மக்கள் அவளது நிலைக்குப் பரிதாபப்பட்டு அனுதாபம் காட்டலாயினர். 


அக்கூட்டத்தில் வீரர்கள் மட்டும்அல்லாது நகரத்தின் மற்ற மக்களும் இருந்தனர். அந்தணர்கள், வியாபாரிகள், பாமரர்களென யாவரும் இராமரைக் காண வேண்டுமென்ற ஆவலோடு வேகமாகப் போட்டி போட்டுக் கொண்டு செல்லலாயினர். இப்படியாக அந்த மாபெரும் மக்கள் கூட்டம் கங்கை நதிக்கரையில் சிருங்கபேரிபுரத்தருகே போய்ச் சேர்ந்தது. 


அப்போது பரதன் யாவரிடமும் "அங்கே நாம் இன்றைய இரவுப் பொழுதைக் கழிப்போம் நாளைக் காலையில் கங்கையைக் கடந்து செல்வோம். நான் இப்போது என் தந்தையாருக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் போன்ற சடங்குகளைச் செய்கிறேன்" எனக் கூறி அவர்களை அங்கே இருக்கச் செய்தான். கங்கைக் கரையிலே மாபெரும் படை வந்திருப்பதை குகன் கண்டான். அப்படைகளைக் கண்டதும் அநேகமாக அது பரதனின் படையாகத்தானிருக்குமென குகன் ஊகித்தான்.



உடனே தன் ஆட்களிடம் "பார்த்தீர்களா? பரதன் எவ்வளவு பெரிய படையைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறான்? எதற்குத் தெரியுமா? பதிநான்கு வருட காலம் வனவாசத்தை முடித்துக் கொண்டு இராமன் அயோத்திக்குத் திரும்பி வந்தால் மீண்டும் நாட்டை அவனிடம் ஒப்படைக்க வேண்டி வருமேயென்ற கவலை ஏற்பட்டு விட்டது போலும். அதனால் இராமரை முன்பே கொன்று விடலாம் என்ற எண்ணத்தோடு இவன் வந்திருக்கிறான். இவனை நாம் அப்படிச் செய்ய அனுமதிக்கக் கூடாது. இராமரை நாம் காப்பாற்றியே தீர வேண்டும். நம் ஆட்களிடம் சொல்லி எல்லாப் படகுகளையும் தயாராக வைத்திருக்கச் செய்யுங்கள். ஒவ்வொரு படகுகளிலும் நூறு பேர்கள் வீதம் இருக்கட்டும். அவை நதியில் அச்சேனையின் வழியை மறித்து நிற்கட்டும். பரதனின் எண்ணம் களங்கமற்றது எனத் தெரிந்தால் அவனை நாம் இந்நதியைக் கடந்து செல்ல அனுமதிக்கலாம்" என்றான். 


அதன் பின்னர் குகன் காட்டில் கிடைக்கும் உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு பரதனைக் காணச் சென்றான். குகன் வருவதைக் கண்டு சுமந்திரன் பரதனிடம் "இதோ வந்து கொண்டிருப்பவன் இந்த மலைப் பகுதியின் மன்னன் குகன். இவன் மிகவும் நல்லவன். இராமரின் உயிருக்குயிரான தோழன். அவனை வரவேற்றுப் பேசிப் பார்த்தால் இராமர் வசிக்குமிடத்தை அறியலாம்" என்றான். 


பரதனும் உடனே குகனைத் தன்னிடம் தக்க மரியாதையோடு அழைத்துவரும்படி சுமந்திரனை அனுப்பினான். குகனும் தான் கொண்டு வந்தவற்றை பரதனின் முன் வைத்தான்.


அப்போது பரதன் மிகவும் மன மகிழ்ச்சியுடன் "அன்பனே! நாங்கள் இராமரைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறோம். அவர் பரத்வாஜரின் ஆசிரமத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டதால் இங்கு வந்துள்ளோம். அதற்குச் செல்லும் வழி எங்களுக்குக் கூறினால் மிக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று கூறினான். 


அதற்கு குகனும் "என் ஆட்கள் உங்களுக்கு வழியைக் காட்டுவார்கள். அது பற்றி கவலைப்பட வேண்டாம்" எனக் கூறினான்.            

0 comments:

Post a Comment

Flag Counter