கிஷ்கிந்தா காண்டம் - 2

 
சுக்சிரீவன் கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு இராமர் "உங்கள் இருவருக்கும் இடையில் அப்படி என்ன விரோதம் என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் இருவரின் பலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டபின்தான் என்னால் உனக்கு நல்வழி காண்பிக்க முடியும். எதுவரை உங்கள் இருவருக்கும் இடையில் உள்ள விரோதத்திற்கான காரணம் தெரியவில்லையோ அதுவரை இதற்கான சரியான முடிவை என்னால் தர இயலாது.
 
இப்போது நாம் இருவரும் நண்பர்கள். அதுவும் அக்னியைச் சாட்சியாக வைத்து நாம் நண்பர்களாகி இருக்கிறோம். நான் உனது ஒவ்வொரு நல்லது, கெட்டதிலும் உனக்கு சாதகமாக இருப்பேன். ஆகையால் நீ எனக்குக் காரணத்தைச் சொன்னால் என்னால் உனக்கு சரியான முடிவு கொடுக்க முடியும்" என்றார்.
 
இராமனின் வார்த்தைகளைக் கேட்ட சுக்கிரீவனும் தன் வரலாற்றைக் கூறலானான். "என் தந்தை வாலியையும் என்னையும் ஒன்று போல வளர்த்து வந்தார். என் தந்தை இறந்ததும் மூத்த மகன் என்ற காரணத்தால் வாலி அரசாளும் உரிமை பெற்று சிம்மாதனத்தில் அமர்ந்தான்.
 
நான் வாலிக்குத் துணையாக இருந்து வந்தேன். துந்துபி என்னும் அரக்கனின் மகன் மாயாவிக்கும் வாலிக்கும் ஒரு பெண்ணின் காரணமாகத் தகராறு ஏற்பட்டது. ஒரு நாளிரவு மாயாவி கிஷ்கிந்தாவிற்கு வந்து தன்னோடு போர் புரிய வாலியை அழைத்தான்.
வாலியும் உடனே கிளம்பினான். நானும் மற்றவர்களும் அவனைத் தடுத்தும் அவன் கேட்கவில்லை. அப்போது நான் வாலிக்குத் துணையாகச் சென்றேன். மாயாவி வாலியைக் கண்டு பயந்து ஓடலானான். அவனைத் துரத்திக் கொண்டே நாங்களும் அவன் பின்னால் ஓடினோம். மாலையாகியும் எங்களால் அவனைப் பிடிக்க முடியவில்லை.
 
மாயாவியும் வெகுதூரம் சென்றபிறகு ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். எங்களால் அதற்குள் செல்ல முடியவில்லை. இருப்பினும் வாலி அதற்குள் தான் சென்று வருவதாகவும், தான் திரும்பி வரும்வரை என்னை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அந்தக் குகையினுள் நுழைந்தான்.
 
நானும் வாலிக்காக அங்கே காத்துக் கிடந்தேன். நாள்கள் மாதங்களென ஆகி முடிவில் ஒரு வருடமும் கழிந்து விட்டது. வாலியோ திரும்பி வரவில்லை. எவ்வளவு நாள்கள் தான் அப்படியே உட்கார்ந்திருப்பது? வாலி இறந்து விட்டானோவென்ற சந்தேகம் தோன்றியது.
 
அதே சமயம் அப்பொந்திலிருந்து இரத்தமும் கசிந்து வந்தது. உள்ளே பயங்கர அலறல் கேட்டது. அது வாலியின் குரலைப் போலும் இருந்தது. இதெல்லாம் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை மேலும் உறுதிப் படுத்தலாயிற்று. எனவே அப்பொந்தை ஒரு பெரிய கல்லால் மூடிவிட்டு வாலிக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைஎல்லாம் செய்து விட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பிச் சென்றேன்.
 
வாலி இறந்தானென நான் சொல்லாது போனாலும் மந்திரிகளெல்லாம் என் வாயிலாக விஷயத்தைக் கிரகித்துக் கொண்டனர். அவர்களும் வாலி இறந்து விட்டான்எனத் தீர்மானித்து எனக்குப் பட்டாபிஷேகம் செய்து விட்டனர்.
 
சிறிது நாள்களுக்குப் பிறகு வாலி மாயாவியைக் கொன்று விட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்தான். நான் சிம்மாசனத்தில் அமர்ந்ததால் அவன் கடுங்கோபம் கொண்டான். நானோ மிகவும் பணிவோடு வணங்கி என் தலையிலிருந்த கிŽடத்தை எடுத்து அவனது காலடியில் வைத்தேன். ஆனால் வாலியின் கோபமோ சிறிதுங்கூட அடங்கவே இல்லை.
அப்போது நான் வாலியிடம் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும் அதை உறதிப்படுத்துவது போல சம்பவங்கள் நடந்ததையும் கூறி விட்டு இனி அரசாளும் பொறுப்பை ஏற்கும்படி அவனை வேண்டிக்கொண்டேன். ஆனால் வாலியோ அதனை ஏற்காது என்னைக் கண்டபடி தூற்றினான். சமயத்தில் உதவாது ஓடி வந்து விட்டதாக என்மீது அவன் குற்றம் சாற்றினான்.
 
என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக கூறி என்னை நாட்டைவிட்டு வெளியேற்றியதுடன் என் மனைவியையும் அபகரித்துக் கொண்டு விட்டான். நானும் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிய வேண்டியதாயிற்று. கடைசியில் இந்த ரிஷியமுகபர்வதத்தில் எனக்குப் புகலிடம் கிடைத்தது. இங்கு வாலி வரமுடியாது.
 
வாலி மிகவும் சக்திவாய்ந்தவன். ஒரு நிமிடத்தில் உலகையே சுற்றி வரக்கூடியவன். பெரிய பெரிய மலைகளைப் பந்துபோல உதைத்துத் தள்ளும் சக்தி பெற்றவன். மிருகங்களையெல்லாம் வெள்ளரிக்காய் ஒடிப்பது போல ஒடித்து விடுவான். அவனது பராக்கிரமத்திற்கு எடுத்துக்காட்டு கூறுகிறேன்.
 
துந்துபி என்னும் பலம் பொருந்திய அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் தான் பலசாலி என்ற கர்வத்தால் சமுத்திர ராஜனையே தன்னோடு போர்புரிய அழைத்தான். அவனும் மானிட உருவில் வந்து "உன் போன்ற மாபெரும் வீரனோடு போர் புரியும் சக்தி எனக்கு இல்லை. உனக்குச் சரிசமமானவன் இமயவன். நீ அவனோடு போர் புரி" என்றான்.
 
அதைக் கேட்டு துந்துபி வெகு வேகமாக இமயவன் இருக்கும்இடத்திற்குச் சென்றான். அவன் பயங்கரமாக கர்ஜித்துக் கொண்டே இமயவனை தன்னுடன் போர் புரிய அழைத்தான். இமயவனும் "அப்பனே. உன்னோடு போர் புரிய என்னால் முடியாது. எனவே நீ கிஷ்கிந்தாவிற்குப் போ. அங்கே வாலி என்னும் வானர வீரன் இருக்கிறான். அவன் தான் உனக்கு நிகரானவன்" என்றான். துந்துபி எருமை உருவில் கிஷ்கிந்தாவிற்கு வந்தான். ‘ஆ' ‘ஊ' என்று கத்தி ஆர்ப்பட்டாம் செய்தான்.
அது கேட்டு வாலி அந்தப்புர பெண்களோடு வெளியே வந்தான். துந்துபியைப் பார்த்து "அடே பயலே. நீ யாரென்று எனக்குத் தெரியும். ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? உனக்கு உன் உயிர்மீது ஆசை இல்லையா?" எனக் கேட்டான். துந்துபியோ "பெண்கள் முன்னால் வீரப்பேச்சு பேசும் அதிசூரனே! உன் வீரத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம்" என்றான்.
 
அது கேட்டு வாலி சிரித்து விட்டு அந்தப்புரத்து பெண்களைப் போகச் சொல்லி விட்டான். அதன் பின்னர் இந்திரன் தனக்களித்த தங்க மாலையை அணிந்து கொண்டு துந்துபியுடன் போர் புரியலானான். இருவருக்குமிடையே பயங்கரமான போர் நிகழ்ந்தது. வாலி துந்துபியின் நீண்ட கொம்புகளைப் பற்றி அவனை கரகரவென தட்டாமாலை சுற்றுவதுபோலச் சுற்றி ஓங்கித் தரைமீது அடித்தான்.
 
துந்துபியின் காதிலிருந்து இரத்தம் ஒழுகியது. வாலியின் கை ஓங்கியது. கடைசியில் வாலி துந்துபியைப் பந்தாடி கீழே போட்டுக் கொன்றான். பின்னர் அந்த உடலை ஒரு உதை உதைக்கவே அது அங்கிருந்து இரண்டு காததூரத்திற்கு அப்பால் போய் விழுந்தது. உடல் மதங்க முனிவரின் ஆசிரமத்தருகே விழுந்து இரத்தாத்தால் அசுத்தப்படுத்தபடவே அம்முனிவர் கோபம் கொண்டு "இந்த உடலை இங்கே விட்டெறிந்தவனோ அல்லது அவனது ஆட்களோ இந்த வனத்திற்குள் நுழைந்தால் உடனே இறந்து போவார்கள்" எனச் சபித்தார்.
 
மதங்க முனிவரின் சாபத்தைக் கேட்டது முதல் வாலி இப்பகுதிக்கு வருவதே கிடையாது. அதைத் தெரிந்து கொண்டுதான் நான் இங்கு வந்து ஒளிந்து கொண்டேன். அதோ மலை போலக் கீழே விழுந்து கிடப்பது தான் துந்துபியின் உடல். வாலியின் பராக்கிரமத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டும் கூறுகிறேன். அதோ ஏழு ஆல மரங்கள் தெரிகின்றனவே அவற்றில் எதன் அடிமரத்தையும் துளைத்துச் செல்லும்படி அம்பை எய்யும் சக்தி பெற்றவன் அவன். இப்படிப்பட்ட பலவானை நீங்கள் எதிர்க்க முடியுமா?" என்று சுக்கிரீவன் கேட்டான். அதைக் கேட்டு இலட்சுமணன் "அது சரி. உனக்கு இராமரின் பராக்கிரமத்தில் நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால் அவர் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
அதற்கு சுக்கிரீவன் "எனக்கு வாலியின் பலபராக்கிரமம் தெரியும். அவன் இதுவரை தோல்வியைக் கண்டதே இல்லை. ஆனால் எனக்கு இராமரது பராக்கிரமம் பற்றி சிறிதும் தெரியாதே" என்றான்.
 
அப்போது இராமர் தனது கட்டைவிரலால் துந்துபியின் உடலைத் தூக்கி எறியவே அது பத்து காதத்திற்கு அப்பால் போய் விழுந்தது. அதைப் பார்த்து சுக்கிரீவன் ஆச்சரியப் படவில்லை. அவன் இராமரிடம் "வாலி இவ்வுடலை உதைத்தபோது போரிட்டு மிகவும் களைத்துப் போயிருந்தான். மேலும் அப்போது இந்த உடல் இருந்த கனம் இப்போது இல்லை. எனவே இச்செய்கையால் உங்களது பலம் வாலிக்கும் மேலானது என எப்படி நான் கூற முடியும்" என்றான்.
 
அப்போது இராமர் ஒரு கூரிய அம்பை எடுத்து வில்லில் வைத்து விடுத்தார். அந்த அம்பு ஏழு சால மரங்களின் அடி மரங்களில் துளை செய்து ஊடுருவிப் போய் தரையில் விழுந்து அதனைப் பிளந்து பின்னர் உயரக் கிளம்பி இராமரின் அம்புராத் தூணியில் வந்து சேர்ந்தது. இதைக் கண்டு சுக்கிŽவன் ஆச்சரியப்பட்டு மலைத்து நின்றான். உடனே அவன் "ஐயனே இனிமேல் எனக்கு சந்தேகம் ஏன் எழப்போகிறது?
 
இந்த வாலியென்ன முப்பத்து முக்கோடி தேவர்களே ஒன்று சேர்ந்து உங்களை எதிர்த்தாலும் நீங்கள் அவர்களை வென்று விடுவீர்கள். இதில் சிறிதும் சந்தேகமே இல்லை. உங்களது தரிசனமும் நட்பும் கிடைத்தது நான் செய்த மாபெரும் பாக்கியமேயாகும்" என்று மனதாரக் கூறினான். அப்போது இராமர் சுக்கிரீவனைத் தழுவியவாறே "இனி நாம் வாலியைக் கொல்ல கிஷ்கிந்தாவிற்குச் செல்லலாம். நீ முதலில் போய் வாலியைப் போரிடக் கூப்பிடு" என்றார்.
 
எல்லாருமாக கிஷ்கிந்தாபுரிக்குச் சென்றனர். வாலியைப் போருக்கு அழைக்க சுக்கிŽவன் முன் செல்ல மற்றவர்கள் ஒரு மரத்தடியே மறைந்திருந்தனர். சுக்கிŽவன் சற்று தூரத்தில் நின்று கொண்டு வாலியைத் தன்னோடு போர் புரிய வரும்படி அறை கூவி அழைத்தான். சுக்கிரீவனின் குரலைக் கேட்டு வாலி கோபம் கொண்டு வெளியே வந்தான்.
 
சுக்கிரீவன் அவனைப் போருக்கு அழைக்கவே வாலியும் அவனோடு போர் புரியலானான். அண்ணன் தம்பி இருவரும் போரிடுகையில் வில்லும் கையுமாக இருந்த இராமருக்கு அதில் யார் சுக்கிரீவன், யார் வாலி என்று தெரியவில்லை.
 
இதற்குள் சுக்கிரீவன் நல்ல உதை வாங்கிக் கொண்டு காயங்களோடு ஓடலானான். வாலியும் அவனைத் துரத்திக் கொண்டு செல்லவே சுக்கிரீவன் ரிஷியமுகபர்வதப் பகுதிக்கு ஓடினான். வாலியோ "போ. போ. பிழைத்துப் போ" எனக் கூறி அரண்மனைக்குச் சென்றான்.
 
அப்போது இராமரும் இலட்சுமணனும், அனுமாரும் ரிஷியமுகபர்வதத்திற்குச் சென்றனர். சுக்கிரீவனோ இராமரைப் பார்த்து "இதுதானா நீங்கள் செய்யும் உதவி? வாலியைக் கொல்ல என்னால் முடியாது என்று நீங்கள் என்னிடம் முன்பே கூறி இருந்தால் நான் அனாவசியமாக அவனோடு சண்டை போட்டு இருக்க மாட்டேனே" என்றான் சலித்தவாறே.
 

0 comments:

Post a Comment