சுந்தர காண்டம்-1

 
அனுமார் ஜாம்பவானின் உற்சாக மொழிகளால் புத்துணர்ச்சி பெற்றவராய் இராமர் கொடுத்த நகைகளுடன் இலங்கைக்குக் கிளம்பத் தயாரானார். அப்போது அவரது உடலும் பெரிதாகி விசுவரூபம் கொண்டது. அவர் நடந்ததால் மரங்கள் அதிர்ந்து நிலை பெயர்ந்து விழுந்தன. காட்டு மிருகங்கள் பயந்து அலறி ஓடின. அப்பகுதியிலேயே பெருத்த அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டு விட்டது.
 
அனுமார் தன் பணியைச் செய்யும் முன் சூரியனையும் இந்திரனையும் வாயுதேவனையும் பிரம்மனையும் ஆராதித்தார். பின்னர் மகேந்திர மலையில் கால்களை நன்கு ஊன்றி ‘உம்' என்ற குரலோடு உயரக் கிளம்பினார். அந்தக் குரலும் அவரது கால் அழுத்தமும் அம்மலையையே அதிர வைத்தது. மலையிலுள்ள எல்லா ஜீவராசிகளும் நடுநடுங்கின.
 
அவர் அங்கிருந்து கிளம்புவதற்கு முன் ஜாம்பவானையும் மற்ற வானரர்களையும் பார்த்து "நான் இலங்கையில் சீதையைத் தேடிப் பார்க்கிறேன். அங்கில்லாவிட்டால் சொர்க்கத்திற்குப் போய்த் தேடிப் பார்க்கிறேன்.
 
அங்கும் சீதை இல்லாவிட்டால் மீண்டும் இலங்கைக்கு வந்து இராவணனைப் பிடித்து நசுக்கி வதம் செய்து இங்கே கொண்டு வருகிறேன். எனது இம்முயற்சி பயனளிக்கட்டும்" எனக் கூறினார். அனுமார் எழும்பிச் சென்ற வேகத்தில் பல பிராணிகள் காற்றில் உயரக் கிளம்பிச் சென்றன.
அனுமாரை வழியனுப்ப முயன்றதுபோல அக்காட்சி இருந்தது. அனுமாரோ அதிவேகமாக இலங்கையை நோக்கிச் சென்றார். ஆகாயத்தில் திடீரென வால் நட்சத்திரம் தோன்றுவதுபோல அவர் சென்றது வங்க கடலில் பெருத்த அலைகள் எழுந்து கோஷித்து ஒரே இரைச்சலை உண்டாக்கின. அவரது நிழல்கடலில் பல கோசங்கள் நீளத்திற்கு விழுந்து மிக்க பயங்கரமாகக் காட்சியளித்தது. வானவெளியில் தேவர்கள் கூடி அனுமாரின் அரிய பணியைப் பார்க்கலாயினர்.
 
இராமருக்குச் சேவை புரியும் அனுமாருக்கு உதவ சமுத்திர ராஜனும் எண்ணினான். அவன் உடனே தன்னுள்ளிருக்கும் மைனாகபர்வதத்திடம் "மைனாகமே, பாதாள உலகிலிருந்து ராட்சசர்கள் மேலே வராமல் தடுத்து நிறுத்தும் சக்தியை உடைய உனக்கு, இப்போது ஒரு சிறிய வேலை செய்யக் கட்டளையிடுகிறேன். அனுமார் இராமருக்காக இலங்கைக்கு ஆகாயத்தில் எழும்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் வழியில் சற்று இளைப்பாற வேண்டும். அதற்காக நீ கடலின் மேலே செல். உன் உச்சியில் அவர் தங்கி பின்னர் இலங்கைக்குச் செல்லட்டும்" என்றான்.
 
தங்கச் சிகரங்களைக் கொண்ட மைனாகமும் சமுத்திரராஜனின் கட்டளைப்படியே கடல் மட்டத்திற்கு மேலாக வளர்ந்து நின்றது. அதன் சிகரங்களின்மீது சூரிய கிரணங்கள் படவே பல சூரியர்கள் ஒரே காலத்தில் தோன்றி பிரகாசிப்பது போலத் தோன்றியது.
 
திடீரென கடலின் மத்தியில் ஒரு மலை உயரக் கிளம்பி வந்திருப்பது கண்டு அனுமார் "இது என் வேலைக்குக் குந்தகமாக வருகிறது. இதனைத் தள்ளிவிட்டுப் போகிறேன்" எனத் தன் தோளால் ஒரு இடி இடிக்கவே அம்மலை சிகரங்கள் தவிடுபொடியாகிப் போயின.
 
இதனால் மைனாகம் கோபப்படவில்லை. மானிட உருவில் அனுமார் முன் நின்று "வானர சிரேஷ்டரே, நீங்கள் இந்தக் கஷ்டமான வேலையில் சற்றும் களைப்புஅடையாமல் என் சிகரங்களையும் வெகு சுலபத்தில் தவிடுபொடியாக்கி விட்டீர்கள்.
இதனால் உங்களது மாபெரும் சக்தி உலகிற்குப் புலனாகிறது. நீங்கள் என் உச்சியில் சற்றுத் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்லுங்கள். இராமரின் முன்னோர்களான சகரனும் அவனது மைந்தர்களும் சமுத்திர ராஜனுக்குப் பெருத்த உபகாரம் செய்தனர். அதை எண்ணி சமுத்திரராஜன் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் கடலின் மத்தியில் தோன்றி உங்களை வரவேற்று இடமளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
 
என் சிகரத்தின்மீது தங்கி சற்று இளைப்பாறிவிட்டுச் செல்லுங்கள். இதனால் சமுத்திர ராஜனும் மனம் மகிழ நானும் மிகவும் கடமைப் பட்டவனாக இருப்பேன். அறிவும் ஆற்றலும் ஒருங்கே அமையப் பெற்ற நீங்கள் இங்கே தங்கிச் செல்வது எவ்வளவு பெருமைப் படத்தக்கதாகும். உங்களது தந்தையாருக்கு நான் கடன் பட்டவன்.
 
கிருதயுகத்தில் மலைகளுக்கெல்லாம் இறக்கைகள் உண்டு. அவை பறப்பதால் ரிஷிகளும் தேவர்களும் பயப்பட்டு வந்தனர். அதனால் தேவேந்திரன் மலைகளின் இறக்கைகளைத் தன் வஜ்ராயுதம் கொண்டு அறுத்துத் தள்ளலானான்.
 
அந்த சமயம் வாயுதேவன் என்னை இந்திரன் கைக்கு அகப்படாமல் அடித்துக் கொண்டு போய் காப்பாற்றினார். அதனால் என் இறக்கைகள் அறுபடாமல் தப்பின. இதற்காகவும் நான் உங்களுக்கு உதவியே தீரவேண்டும். தயவு செய்து என் மீதமர்ந்து இளைப்பாறுங்கள்" என்றான்.
அது கேட்டு அனுமாரும் "மெத்த மகிழ்ச்சி. நீ இவ்விதம் கூறியதே எனக்கு விருந்திட்டு உபசரித்தது போலாயிற்று. நான் சொல்லப் போவதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் எடுத்த வேலையை நிறைவேற்றி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன். இராமபாணம் போல நான் இலங்கைக்குச் செல்வதே எனது குறிக்கோள். சீதாதேவியைத் தேடிக்கண்டு பிடித்து இராமரிடம் அந்தத் தகவலைக்கொடுக்க வேண்டியதே இப்போது எனக்கிடப்பட்ட பணியாகும்" எனக்கூறி மைனாகத்தைத் தொட்டுவிட்டு முன் செல்லலானார்.
 
அப்போது மைனாகமும் "வீரரே. நீங்கள் உங்களது முயற்சியில் முழு வெற்றி அடைந்து திரும்புவீராக" என கூறி வணங்கி அனுமாரை வழி அனுப்பினான். அனுமார் ஆகாயத்தில் இன்னும் உயரத்தில் பறந்தவாறே செல்லலானார். அப்போது தேவர்கள் அனுமாரைப் பரீட்சிக்க எண்ணி பாம்புகளின் தாயான சரசை என்னும் சர்ப்பத்திடம் "நீ பயங்கர உருவம் எடுத்து அனுமாரின் வழியை மறித்து நில். உன்னை அவர் ஜெயித்துப் போகிறாரா அல்லது பயந்து விடுகிறாராவெனப் பார்க்கலாம்" என்றனர்.
 
சரசையும் மலைபோன்ற உருவத்தில் அனுமாரின் வழியை மறித்து நின்றாள். அவளைக் கண்ட அனுமாரும் "நான் இராமருக்கு உதவ சீதையைத் தேடிக் கொண்டு இலங்கைக்குச் செல்கிறேன். நீயும் இராமரது நாட்டில் இருப்பதால் அவருக்கு உதவி செய். அப்படி செய்யாவிட்டால் என் வழியே போக எனக்குத் திறமை உண்டு" என்றார்.
 
அந்த பாம்போ தன் வாயைப் பிளந்து கொண்டு "இவ்வழியே செல்வோர் என் வாயினுள் புகுந்து தான் செல்ல வேண்டும். அல்லது எனக்கு இறையாகி விடவேண்டும். எனவே சாமர்த்தியம் இருக்குமானால் என் வாயினுள் புகுந்து செல்" எனக் கூறியது.
 
பின்னர் அது அனுமாரை விழுங்கத் தயாரானது. அது கண்டு அனுமார், "சரி, நான் உன் வாயினுள் நுழைய சௌகரியமாக இருக்கும்படி உன் வாயைத்திற" எனக் கூறி அவர் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டே போனார். பாம்பும் தன் வாயைப் பெரிதாக்கிக் கொண்டே போகலாயிற்று.
திடீரென அனுமார் தன் உருவத்தை சுண்டுவிரல் அளவிற்குக் குறுக்கி அப்பாம்பின் வாயினுள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் புகுந்து வெளியே வந்து விட்டார். பின்னர் அப்பாம்பிடம் "நீ கோரியபடி உன் வாயினுள் நுழைந்து வெளியே வந்துவிட்டேன். உன்னால் என்னை விழுங்க முடியவில்லை. உன் வாயில் புகுந்து அதன் வழியே வந்ததால் பிரம்மதேவன் முன்பு உனக்குக் கொடுத்த வரத்தின்படி இனி உனக்குப் பழைய சக்தி இல்லை. இனி என்னைப் போக விடு" என்றார்.
 
அப்போதே சரசை தன் பழைய உருவை அடைந்தாள். பின்னர் அனுமாரைப் பார்த்து "உங்கள் சக்தியே சக்தி. இனி நீங்கள் உங்கள வழியே செல்லுங்கள். நீங்கள் செய்யும் இம்மகத்தான பணி வெற்றிகரமாக விளங்கட்டும்" என ஆசி கூறி அவரை அனுப்பினாள்.
 
அனுமார் மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கினார். அப்போது சிம்மிகை என்ற ராட்சசக் கடல் பிராணி அனுமார் ஆகாயத்தில் சென்று கொண்டிருப்பதைக் கண்டது. அது அனுமாரை அப்படியே விழுங்கித் தன் பசியைத் தீர்த்துக் கொள்ள நினைத்து அவரைக் கடலிலிருந்தபடியே இழுக்கலாயிற்று. அது கண்டு அனுமார் திகைத்தார். தன்னை இழுப்பது யாரெனப் பார்க்கவே சிம்மிகை கடலில் தன் நிழலைப் பற்றி இழுப்பதைக் கண்டார். அப்போது அவருக்கு சுக்கிரீவன் கடலில் விசித்திரப் பிராணி ஒன்று இருப்பதாயும் அது ஒரு பிராணியின் நிழலை இழுப்பதன் மூலம் அதனையே இழுத்து தன் ஆகாரமாக்கிக் கொள்ளும் என்று கூறியது நினைவிற்கு வந்தது.
 
சிம்மிகையின் முன் அனுமாரின் சக்தி சற்றுப் பயனற்றுப் போனதுபோலக் காணவே அவர் தனது உடலை திடீரென இன்னும் பெரிதாக்கினார். உடனே சிம்மிகையும் தன் வாயை அகல விரிக்கலாயிற்று. அப்போது அனுமார் அதன் உடலின் மர்ம இடங்களைக் கண்டு கொண்டார். தன் உடலை குறுக்கிக்கொண்டு வாய் வழியாக உள்ளே சென்று மர்ம இடத்தை அறுத்துவிட்டு அனுமார் சிம்மிகை வாயைமூடு முன் வெளியே வந்துவிட்டார்.
வெளியே வந்ததும் அவரது உடல் முன்போலப் பெரிதாகி விட்டது. சிம்மிகை ஒழிந்து போனாள். அது கண்டு தேவர்கள் வானவெளியில் ஆர்ப்பரித்து அனுமாரைப் போற்றினர். அனுமார் தன் பயணத்தை மேலும் தொடர்ந்து நடத்தினார். சற்று நேரத்திற்கெல்லாம் கரை தெரியலாயிற்று.
 
காடுகள் இலங்காபுரி முதலியன அவருக்கு நன்கு புலப்படலாயின. அவர் அப்போது தாம் இலங்கையை அணுகிக் கொண்டிருப்பதை அறிந்தார். அவரது உடல் அப்போதும் மிகப் பெரிதாகத்தான் இருந்தது. அவ்வளவு பெரிய உருவத்தை இலங்கையிலுள்ள அரக்கர்கள் கண்டு விட்டால் எச்சரிக்கையடைந்து விடுவார்களென அவர் எண்ணித் தன் உருவை எப்போதும் போலிருக்கும்படிக் குறுக்கிக் கொண்டார்.
 
அவர் தம் வேலையில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டதால் தன் வேலையைச் சட்டென சுலபமாக விரைவில் முடித்துக் கொண்டு கிளம்புவதையே விரும்பினார். எனவே அச்சிறிய உருவில் அவர் அலம்ப பர்வதத்தின் மீது இறங்கினார். அதில் பல மலையுச்சிகள் இருந்தன. அதன் மீது அடர்ந்த மரங்களும் புதர்களும் இருந்தன.
 
தென்னை மரங்களோ வானை எட்டும் படியான உயரத்திற்கு வளர்ந்திருந்தன. அங்கு இருந்து பார்த்தபோது உயரமான இடத்தில் இலங்கை மாநகரம் இருப்பதை அவர் கண்டார். அது தேவேந்திரனின் நகரமான அமராவதிக்கு நிகராக விளங்கியது. அதன் அமைப்பே கண்ணைக் கவர்வதாக இருந்தது. மலையில் அழகாக அமைந்து இருக்கும் அப்பட்டணம் பூலோகசொர்க்கமோ என்று எண்ணும்படி அமைந்திருந்தது. அப்படி அது விளங்குவதில் ஆச்சரியமே இல்லை. ஏனெனில் இலங்கையின் அதிபதி இராவணனின் சக்தியைக் கண்டு தான் மூன்று உலகமும் நடுங்கிக் கொண்டிருந்ததே!                                            
 
 

0 comments:

Post a Comment

Flag Counter